பதிவு செய்த நாள்
07
ஆக
2013
10:08
மலைக்குன்றில் முகாமிட்டுள்ள, "புரோட்டா சாமியார் ஆடி அமாவாசையில், 50 ஆட்டுக்கிடாக்களை பலியிட்டு, பக்தர்களுக்கு விருந்து வைத்தார். திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி, 40. 10 ஆண்டுகளுக்கு முன் சேலத்துக்கு வந்தவர், சின்னத்திருப்பதி ஓட்டலில், புரோட்டா மாஸ்டராக வேலை செய்தார். அந்த ஓட்டல் உரிமையாளரின் மகளை, காதல் திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு பின், தனக்கு, கருப்பசாமி அருள் கிடைத்துவிட்டதாக கூறிய புரோட்டா மாஸ்டர், அருள்வாக்கு சொல்லும், "புரோட்டா சாமியாராக மாறியுள்ளார். சேலம் சின்னத்திருப்பதி பகுதியிலும், வலசையூர் காரைக்காடு வனப்பகுதியிலும் கொட்டகை அமைத்து, அருள்வாக்கு சொல்லி வந்தார். ஐதீகப்படி புலால் தவிர்த்தும், விரதமிருந்தும் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தும், அமாவாசை தினத்தில், ஆட்டுக்கிடாக்களை பலி கொடுத்து, பூஜை நடத்தியதால், அந்த சாமியாரை வனத்துறையினரும், அப்பகுதி மக்களும் அங்கிருந்து விரட்டியடித்தனர். கடந்த, இரு ஆண்டுகளுக்கு முன், வாழப்பாடி அடுத்த, மன்னாயக்கன்பட்டி மலைக்குன்று பகுதியில் நிலம் வாங்கி, கொட்டகை அமைத்து, அருள்வாக்கு சொல்லி வந்தார். வாரந்தோறும், வியாழன், வெள்ளிக்கிழமைகளில், அருள்வாக்கு கேட்க ஏராளமானோர் வந்தனர். "டோக்கன் போட்டு, அவர்களிடம் வசூல் நடத்தி வருகிறார். ஆடி அமாவாசை தினமான நேற்று, சிறப்பு அருள்வாக்கு சொல்ல, ஒருவருக்கு, 300 ரூபாய் வீதம் வசூலித்து, 50க்கும் அதிகமான ஆட்டுக்கிடாக்களை பலியிட்டு, பக்தர்களுக்கு விருந்து கொடுத்து மகிழ்வித்தார்.