பதிவு செய்த நாள்
07
ஆக
2013
10:08
சென்னை : ஆடி அமாவாசையான நேற்று, சென்னை வாசிகள் கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில், தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். தமிழ் மாதத்தில் வரும் ஒவ்வொரு அமாவாசை மற்றும் புண்ணிய நாட்களில், மூதாதையரை நினைத்து வழிபடுவது, இந்துமத நம்பிக்கை. அப்படி, அமாவாசை தோறும், மூதாதையரை வழிபட முடியாதோர், ஆண்டில் வரும் முக்கிய புண்ணிய நாட்களில், வழிபடலாம். அந்த வகையில், ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை குறிப்பிடத் தகுந்தவை. ஆடி அமாவாசையான நேற்று, சென்னைவாசிகள், மெரீனா கடற்கரை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் குளங்கள் உள்ளிட்ட அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில் குளங்கள், பிற நீர் நிலைகளில், நேற்று கூடி, தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதுகுறித்து சேனாதிபதி குருக்கள் கூறியதாவது: ஆடி அமாவாசை மிகவும் விசேஷம். அன்று தர்ப்பணம் செய்து, பித்ருக்களை அழைத்து, பிண்டம் (சோற்றுருண்டை) வழங்கப்படும். அந்த பிண்டத்தை மூதாதையர்கள் காக்கை ரூபத்தில் வந்து சாப்பிடுவதாக ஐதீகம். இவ்வாறு அவர்கள் சாப்பிடும்போது, அவர்கள் மனம் குளிரும். இந்த காரியங்களை செய்பவர்கள் வாழ்க்கையில் சகல நலனையும் அனுபவிப்பர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.