பந்தலூர்:கேரள மாநிலம் வயநாடு திருநெல்லி திருமால் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, திதி வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-மைசூர் சாலையில் திருநெல்லி அமைந்துள்ளது. இங்கு மகாவிஷ்ணு, சீதாதேவி மற்றும் திருமாலுக்கு கோவில்கள் உள்ளன. "தென் மாநிலங்களின் காசி என்றழைக்கப்படும் இந்த கோவில்களை ஒட்டி ஆறு பாய்கிறது."இங்கு ராமன் தனது பெற்றோர்களுக்கு திதி செய்து வழிபாடு நடத்தினார் என்ற கோவில் வரலாறில் கூறப்பட்டுள்ளது . இத்தகைய புனித ஸ்தலமான இங்கு, சுல்தான்பத்தேரி விநாயகர் கோவில் கமிட்டியினர் சார்பில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று இறந்தவர்களுக்கு திதி வழிபாடு செய்வது வழக்கம். நடப்பாண்டு நடந்த நிகழ்ச்சியில் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் இருந்தும், பல்லாயிரம் பேர் இங்கு சென்று புனித நீராடி தங்களின் மூதாதையர்களுக்கு திதி செய்து வழிபட்டனர். தீயணைப்புத்துறை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 100 பூஜாரிகள் தலைமையில், இந்த நிகழ்ச்சி நடந்தது.