பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள செங்குணத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் ஆக, 9 வெகுவிமர்சையாக நடந்தது. செங்குணம் கிராமத்தில் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சிங்கப்பூர், துபாய் வாழ் நண்பர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் சார்பில், 40 லட்சம் ரூபாய் செலவில் திருத்தேர் செய்யப்பட்டது. இந்த கோவிலின் முதல் தேரோட்டம் ஆக, 9 நடந்தது. கோவில் திருத்தேரோட்ட விழாவையொட்டி கடந்த 26ம்தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. பின்னர் கடந்த 2ம் தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து சிம்மம், பூபல்லாக்கு, அன்னலட்சுமி, மயில், வெட்டுக்குதிரை போன்ற வாகனங்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தினமும் திருவீலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். பின்னர் 7ம் தேதி பால் குடம் எடுத்தல் மற்றும் ஆக 8ம் தேதி அக்னிசட்டி, அலகு குத்துதல் மற்றும் பூமிதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட விழா (9ம் தேதி) காலை 11 மணியளவில் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலை நின்றது. நிகழ்ச்சியில், பஞ்சாயத்து தலைவர் தனராஜ் மற்றும் விழாக்குழுவினர், பொதுமக்கள் உட்பட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.