பதிவு செய்த நாள்
12
ஆக
2013
09:08
செங்குன்றம்: கொரட்டூர் பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவிலில், நேற்று, பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் நடந்தது. சென்னை கொரட்டூர் வடக்கு அக்ரஹாரம் பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவிலில், ஆடித்திருவிழா, அம்மன் பெருவிழாவாக நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 1001 பெண்கள் பால்குடம் ஏந்தி வந்தனர். தொடர்ந்து, 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சீயாத்தம்மன் கோவிலுக்கு வந்தனர். பின், திருத்தேர் வீதி உலா நடந்தது. மேலும் அங்கு நடந்த, சடல் நிகழ்ச்சியில், முதுகு, காலில் அலகு குத்திய ஆறு பக்தர்கள் தராசு தட்டு போல் சுற்றி விடப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு மஞ்சள், திருநீறு, சந்தனம், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், நல்லெண்ெணய், சீயக்காய், பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இறுதியில், அவர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் தீ மிதி திருவிழா நடந்தது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு சேதமடைந்த சாலைகளால், அலகு குத்தி ஊர்வலம் சென்ற பக்தர்கள், மிகவும் சிரமப்பட்டனர்.