பதிவு செய்த நாள்
12
ஆக
2013
10:08
பிரசித்தி பெற்ற மடப்புரம் காளிகோயிலில்,13 ஆண்டுக்கு மேலாகியும் கும்பாபிஷேகம் நடக்காமல் இருப்பதால்,பக்தர்கள் வேதனையில் உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோயில் தென் மாவட்டங் களில் பிரசித்தி பெற்றது.இங்கு வேண்டுதல் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புவதால் நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.மதம் கடந்தும் மக்கள் நம்புவதால், திருட்டு சம்பவங்களில் உண்மையை நிரூபிக்க "சத்தியம் செய்ய வரும் அளவுக்கு சக்தி வாய்ந்த அம்மன் தலம். மேலும், காசு வெட்டிப் போடுதல், சத்தியக்கல்லில் சத்தியம் செய்தல் போன்ற நம்பிக்கை வழிபாடு நடக்கும். உதவி கமிஷனர் தலைமையில் நிர்வாகம் நடக்கும் இக்கோயில் வசூல் ஆண்டுக்கு ரூ. கோடி ரூபாயை தாண்டும். ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி, கடந்த தி.மு.க., ஆட்சியில், ரூ. 42 லட்சம் மதிப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரம் 2 கட்ட, 2010 சட்டசபை கூட்டதொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2012க்குள் கும்பாபிஷேகம் நடத்த பணிகள் துவங்கியது. கோபுரப்பணியில் இழுபறி நீடித்ததால், கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இதற்குமுன், 2000 ஜூலை 12ல், அப்போதைய தி.மு.க., ஆட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. 2011க்குள் எப்படியும் நடத்தவேண்டும் என்று நினைத்த தி.மு.க., ஆட்சியில் தங்கத்தேர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப்பின், அ.தி.மு.க., ஆட்சியில் தங்கத்தேர் பணி முடிவடைந்துள்ளது. கும்பாபிஷேகத்திற்காக, "பாலாலய பூஜை முடிந்து ஒன்றரை ஆண்டாகியும் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்கத் தேரும் தயார் நிலையில் உள்ளது. கோயில் நிர்வாக தரப்பினர் கூறுகையில், ""அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தாழ்வான நிலையில் உள்ள அய்யனார் சன்னதி, ராஜகோபுரத்திற்கு இணையாக சம தளத்தில் இருக்க வேண்டும். அய்யனார் சன்னதியை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தலாம் என கோரியுள்ளனர். நன்கொடையாளர் நிதியில் ரூ. 55 லட்சம் மதிப்பில் கட்டுமானப்பணிகள் துவங்கியுள்ளது. ராஜகோபுரங்களில் சிறு, சிறு வேலைகள் நடக்கின்றன. சுற்று பிரகாரத்தில் வர்ணம் பூசும் பணி நடக்கிறது. பணிகள் முடிய ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும். அம்மனிடம் உத்தரவு கேட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும், என்றார்.