பதிவு செய்த நாள்
19
ஆக
2013
11:08
சென்னை: திருவொற்றியூர் சாத்துமா நகரில் ஆடிமாத விழாவில் தேசக்காரியம்மனுக்கு படைக்கும் கூழ்வார்த்தல் வண்டி ஊர்வலம் நடைபெற்றது. திருவொற்றியூரில் சாத்துமா நகர் என்ற பழமையான கிராமத்தில் எல்லை தெய்வமாக கருதப்படும் தேசக்காரியம்மன் கோவில் உள்ளது. அங்கு ஆடிமாதம் ஐந்தாவது வாரத்தில் கூழ்வார்த்தல் விழா சிறப்பாக நடக்கிறது. நேற்று காலை காப்புகட்டிய பக்தர்கள், கங்கை திரட்டும் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர். பக்தர்கள் சுமர்ந்து வந்த கங்கை தண்ணீரை கொண்டு, தேசக்காரியம்மனுக்கு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தன. மஞ்சளை கொண்டு சிறிய அளவில் அம்மனை வடிவமைத்து, சாமியாடியின் தலையில் மலர்களால் அலங்கரித்த கரகத்தில் மஞ்சள் அம்மனை சுமந்தபடி, சாத்துமா நகர் வீதியில் பாரம்பரிய மேளதாளங்களுடன் ஊர்வலம் துவங்கியது. உடன், மாட்டு வண்டியில் வைக்கப்பட்ட பெரிய டிரம்மில், அம்மனுக்கென வீடுகளில் தயாரிக்கப்பட்ட கூழை, மக்கள் ஊற்றினர். இதேபோல், ஒவ்வொரு தெரு வழியாகவும் செல்லும் கரகத்திற்கு பின், கூழ்வார்த்தல் வண்டி சென்றது. இறுதியில் பக்தர்கள் அளித்த கூழ், தேசக்காரியம்மனுக்கு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வினியோகித்தனர். நேற்று மாலையில் டி.எச்., சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவிலில், கறி,மீன் உணவுடன் படையல் படைக்கப்பட்டது. படையல் முடிந்ததும், தேசக்காரியம்மன் வீதியுலா நடந்தது. இந்த விழாவை ஒட்டி, திருத்தணி தெருக்கூத்து நாடகக் குழுவின் தெருக்கூத்து நடந்தது. விடிய விடிய நடந்த தெருக்கூத்தில் புராணக்கதைகள் பாடல்கள் வாயிலாக சொல்லப்பட்டன.