பதிவு செய்த நாள்
21
ஆக
2013
10:08
நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஆண்டுத் திருவிழா, வரும் 29ம் தேதி துவங்குவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், வேளாங்கண்ணியில், கலெக்டர் முனுசாமி தலைமையில் நடந்தது. எஸ்,பி., சிபிசக்கரவர்த்தி, ஆரோக்கியமாதா தேவாலய பாதிரியார்கள் மற்றும் அனைத்து அர”த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் முனுசாமி பேசியதாவது: ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழாவில் கலந்து கொள்ள பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகின்றனர். சிறு பிரச்னை கூட வராத அளவிற்கு அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். கூடுதல் கலெக்டர் தலைமையிலான குழுக்கள் அமைத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வேளாங்கண்ணியில் கடலில் குளிப்பவர்களின் தொடர் இறப்பு வேதனையளிக்கிறது. நடப்பாண்டில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருவிழா நேரத்தில் பேரூராட்சி நிர்வாகமும், தேவாலய நிர்வாகமும் இணைந்து தற்காலிக நடவடிக்கை எடுப்பது போதுமானது இல்லை. கடலில் குளிக்க, தனி இடம் ஒதுக்கி, நிரந்தரமாக சங்கிலியால் பேரிகார்டு அமைக்க வேண்டும். மீட்பு குழுவினர் படகில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர், தன்னார்வ தொண்டர்கள் இணைந்து பணியாற்றி, ஒரு உயிரிழப்பு கூட நிகழாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் முனுசாமி பேசினார்.