பதிவு செய்த நாள்
21
ஆக
2013
11:08
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் பழுதான அம்பாள் தேர் 16.85 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. கடந்த 1999ம் ஆண்டு கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலுக்கு கம்பீரமான ராஜகோபுரம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதில் அரசின் மானியத்துடன் கொண்ட பொதுமக்கள் காணிக்கை நிதியை வைத்து இரண்டு அடுக்கு கல்கார பணிகளும், உபயதாரர்கள் வழியாக ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரமும் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு ஜன.29ம் தேதி கோவில்பட்டி நகரமே திருவிழாக்கோலம் பூண்டு செண்பகவல்லியம்மன் கோயில் ராஜகோபுர மஹாகும்பாபிஷேகம் நடந்தது. குறிப்பாக ஏப்.மாதத்தில் நடைபெறும் பங்குனிப்பெருந்திருவிழா, சித்திரை தீர்த்தவாரி, தெப்பத்தேர் திருவிழா ஆகியவை லட்சக்கணக்கான மக்கள் கூடி கொண்டாடும் திருவிழா நாட்களாகும். மேலும் ஐப்பசி திருக்கல்யாணம், ஆடிப்பூர வளைகாப்பு விழா போன்ற வருடாந்திர சிறப்பு விழாக்கள் இப்பகுதி பக்தர்களை பரவசமடையச் செய்யும் விழாக்காலங்கள் ஆகும். இந்நிலையில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ரதவீதிகளில் உலாவரும் இரண்டு தேர்களில் அம்பாளின் தேர் பழுதானதாக கூறப்படுகிறது.
இதை சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பக்தர்களிடமிருந்து தொடர்ந்து எழுந்ததால் அம்பாள் தேரை சீரமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதன்பேரில் செண்பகவல்லியம்மன் தேரை ரூ.16 லட்சத்து 85 ஆயிரம் செலவில் சீரமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்ததாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் கூறுகின்றனர். மேலும் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு வேலைக்கான ஆயத்தப்பணிகள் நடந்தது. இதையடுத்து அம்பாள் தேரை புதுப்பிக்கும் பணிக்கான சிறப்பு பூஜைகள் நேற்றுமுன் தினம் நடந்தது. இதையொட்டி காலையில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தள் பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜூ கலந்து கொண்டு தேர் புதுப்பிப்பு பணிகளை துவக்கி வைத்தார். சிறப்பு பூஜைகளை சுவாமிநாதன், செண்பகராமன், சங்கரன், கோபாலகிருஷ்ணன் ஆகிய பட்டர்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள், தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர், அதிமுக முன்னாள் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், மாவட்ட விவசாயப்பிரிவு இணை செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் துணை சேர்மன் ரத்தினவேல், கவுன்சிலர் அருணாசலசாமி, ஒன்றிய மாணவரணி செயலாளர் செண்பகராமன், வார்டு செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.