பதிவு செய்த நாள்
23
ஆக
2013
10:08
காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோவில் கோபுரத்தின், கலச சிகரம் ஒன்று, நேற்று கீழே விழுந்தது. காளஹஸ்தி சிவன் கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற வாயு தலமாகும். ராகு - கேது சர்ப்ப தோஷ பரிகார பூஜைகள் செய்து கொள்ள உகந்த இடமாக விளங்குகிறது. கடந்த 2010, மே, 26ம் தேதி, கோவிலின் ராஜ கோபுரம், திடீரென இடிந்து விழுந்தது. இதனால், பக்தர்களிடையே கலக்கமும், பரபரப்பும் ஏற்பட்டது. அப்போதைய ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யா, 2010, அக்டோபர், 1ம் தேதி, புதிய ராஜகோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டி, 2012ம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, அறிவித்தார். ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், ராஜகோபுர பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோவிலின் நுழைவாயில் கோபுரத்தின் மேலுள்ள, யாழி சிற்பம் திடீரென கீழே விழுந்து உடைந்தது. இதற்கு எந்த பரிகார பூஜையும் செய்யாமல், இரவோடு இரவாக, சிமென்ட்டால் புதிய சிற்பத்தை கட்டிவிட்டனர். தொடர்ந்து பராமரிக்காத காரணத்தால், கோபுரங்களில் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. கடந்த சில நாட்களாக, காளஹஸ்தி பகுதியில், லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை, கோவிலின் பிர தான கோபுரமான, பிக்ஷõலா கோபுரத்தின் மேலுள்ள, 11 கலசங்களில், ஒரு கலசத்தின் மீதுள்ள சிகரம் கீழே விழுந்தது. அச்சமயத்தில், பக்தர்கள் நடமாட்டம் இல்லாததால், எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. கோவில் நிர்வாகம், பரிகார பூஜை செய்து, கலச சிகரம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.