பதிவு செய்த நாள்
23
ஆக
2013
10:08
சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட, 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, சென்னை அருங்காட்சியகத்தில், பார்வையாளர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. சென்னை தினத்தை முன்னிட்டு, அருங்காட்சியகத்தில், நேற்று சிறப்பு கண்காட்சி துவங்கப்பட்டது. இதில், சென்னை உருவான வரலாறு, 100 ஆண்டுகள் பழமையான புகைப்படங்கள், பழமையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. புகைப்படங்களில், அன்றைய சென்னையின் இன்றைய நிலை, அளவு கருவிகள், பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இதில் சிறப்பு அம்சமாக, 1934ல், அருங்காட்சியக துறை மூலம், கீழ்ப்பாக்கத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட, 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய, இரண்டு முதுமக்கள் தாழிகள், காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இம்மாதம், 28ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.