பதிவு செய்த நாள்
23
ஆக
2013
11:08
வாழப்பாடி: வாழப்பாடி அருகே பழமையான கோவில் சிலைகளை கடத்தி, காவிரி ஆற்றில் வீசப்பட்டது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர். வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிராமத்தில், அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும், யானை பிள்ளையார் கோவில் மற்றும், பழமையான பட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முனியப்பன் ஸ்வாமிபோல், முறுக்கு மீசை, மிரட்டும் கண்கள்களுடன் யானை மீது அமர்ந்தபடி, பிரம்மாண்டமாக அருள்பாலிக்கும் மூலவருக்கு, பிள்ளையாரை போல தொந்தி வயிறும், பெரிய காதுமடல்களும் இருப்பதால், யானை பிள்ளையார் என பெயர் பெற்றது. நூறு ஆண்டுகளுக்கு முன், கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, வெளி மாவட்டத்தில் வடிவமைத்த ராட்சத யானை பிள்ளையார் கற்சிலையை, கிராமத்துக்கு கொண்டு வந்தபோது, தீ விபத்து ஏற்பட்டது. அதனால், அச்சிலையை, கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யாமல், கோவிலுக்கு வெளியே, வேப்ப மரத்தடியில் வைத்து, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். அந்த யானை பிள்ளையார் கற்சிலை மற்றும் விநாயகர், அம்மன், அய்யனாரப்பன், முனியப்பன் கற்சிலைகள், பட்டீஸ்வரர் கோவில் இருந்த பழமையான கற்சிலைகளை, அ.தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சதீஸ்குமார், ராஜாக்கவுண்டர் ஆகியோர், கடந்த மாதம், சந்திரசேகர் என்பவரது லாரியில் கடத்திச் சென்று, திருச்சி அடுத்த தொட்டியம் காவிரியாற்று வாய்க்காலில் வீசியதாக, அப்பகுதி மக்கள், சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூசணத்திடம் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.
கற்சிலைகளை யாரும் கடத்திச் செல்லவில்லை. கை, கால், தலை இல்லாத நிலையில், சிதிலமடைந்து கிடந்த கற்சிலைதான், ஐதீக்கப்படி பூஜை செய்து, கிராம மக்கள் அனுமதியுடன், லாரியில் எடுத்துச் சென்று காவரி ஆற்றில் விட்டதாகவும், பட்டீஸ்வரர் கோவில் திருப்பணியை தடுப்பதற்கு முயற்சிக்கும் கும்பல், வீண் பிரச்னையை ஏற்படுத்துவதாகவும், மற்றொரு தரப்பினர், கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி, கலெக்டர் மகரபூஷணம், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைடுத்து, இந்துசமய அறநிலையத்துறை, சேலம் மாவட்ட உதவி ஆணையர் ராமு தலைமையில், வாழப்பாடி தாசில்தார் குமார், ஆர்.ஐ.,ராஜா, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் செயல்அலுவலர் ராஜகோபாலன், வி.ஏ.ஓ., ராஜேஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று, சிங்கிபுரம் கிராமத்தில் விசாரணை நடத்தினர்.