பதிவு செய்த நாள்
23
ஆக
2013
11:08
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் பார்வையிட்டு, கள ஆய்வு செய்து, துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம், தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவர், குளித்தலை பாப்பாசுந்தரம் தலைமையில், 11 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். குழுவினருடன், ஆட்சியர் வீரராகவ ராவ், சட்டப் பேரவை செயலர் ஜமாலுதீன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வமணி மற்றும் அரசு அலுவலர்கள் சென்றனர். மணலி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று பார்வையிட்ட பின்னர், பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று, அங்கு மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தனர். பள்ளியின் தேவைகள் குறித்து அலுவலர்களிடம் வினவினர். பொன்னேரி எம்.எல்.ஏ., பொன்ராஜா ஆய்வின் போது உடனிருந்தார். சின்னம்பேடு சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்ற குழுவினர், சுற்றுலாத்துறை சார்பில், 79.92 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டனர். பின்னர் மல்லியங்குப்பம் சென்று, முதல்வரின் சிறப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட, 50 கறவை பசுக்களையும், அவற்றை பராமரிக்கும் பயனாளிகளையும் பார்வையிட்டனர். கால்நடை பராமரிப்பு துறையினரின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். ஆரணியில், நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ், 26.60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டடத்தை பார்வையிட்டனர். திருவள்ளூர், விக்னேஷ் நகரில் செயல்படும், மாவட்ட தையல் மகளிர் தொழில் கூட்டுறவு சங்கத்தில், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சீருடைகள் தைக்கும் பணியை பார்வையிட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற்ற, பணி ஆய்வு கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை, பால்வளம், சுற்றுலாத்துறை, பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டம், சமூக பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து, துறை அலுவலர்களிடம் விவாதித்தனர்.