பதிவு செய்த நாள்
11
செப்
2013
05:09
கேரளாவில் ஓணம் திருவிழா பத்து நாட்கள் நடக்கும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் துவங்கி திருவோணம் வரை விழா நடத்தப்படும். தங்கள் நாட்டை சிறப்புடன் ஆண்ட மன்னர் மகாபலியை வரவேற்கும் விதத்தில், இந்த விழா கொண்டாடப்படுகிறது. அஸ்தம், சித்திரை, சுவாதி நட்சத்திர நாட்களில், ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில், 64 வகை உணவு தயாரிக்கப்படும். ஐந்தாம் நாள் அனுஷத்தன்று, பாரம்பரிய படகுப்போட்டி நடத்தப்படும். ஆறு, ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் நாட்களில் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்களில் ஓண ஊஞ்சல் ஆடுதல், கோலமிடுதல் என ஒரே கொண்டாட்டமாக இருக்கும். பத்தாம் நாள் திருவோணத்தன்று மூவகை பாயாசம், சிறப்பு உணவு வகைகள் என களை கட்டும். எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரை அப்பன் கோயிலில் (வாமனர் கோயில்) வாமனருக்கு சிறப்பு பூஜை நடக்கும். இங்கே மகாபலி அமர்ந்து ஆட்சி செய்த சிம்மாசனமும் வைத்துள்ளனர்.
மன்னருக்கு வரவேற்பு: மகாபலி மன்னர் மலைநாடாக விளங்கிய கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். அவரது ஆட்சி செழிப்பாக இருந்தது. தானம், தர்மங்கள் செய்வதில் சிறந்து விளங்கினார். அவரது ஆட்சி போல், இன்றும் தங்கள் மண் செழிப்புடன் திகழ வேண்டும் என்ற கருத்தில், மகாபலியை நினைவு கூர்ந்து, அவரை மீண்டும் வரவேற்கும் வகையில் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஓண சத்ய..: ஓணத்தன்று கேரள மக்கள் சாப்பிடும் உணவை ஓண சத்ய என்பர். இதற்கு ஓண விருந்து என்று பொருள். கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு தான் நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். புத்தம் புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக் காய் குழம்பு என உணவுகள் தயார் செய்யப்பட்டு அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு படைக்கப்படும். பின், குடும்பத்துடன், சாப்பிடுவர்.
வருகிறார்கள் தாத்தாக்கள், பாட்டிகள்: மகாளயம் என்றால் கூட்டமாக வருதல். நம் வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சி, குலதெய்வ வழிபாடு நடக்கும் சமயங்களில் உறவினர்கள் அனைவரும் ஒன்றுபடுவது வழக்கம். எந்த ஊரில் இருந்தாலும், அவர்கள் ஓரிடத்தில் கூடுவார்கள். அதுபோல, மறைந்த நம் முன்னோர் பூலோகத்தில் நம்மைக் காண ஒன்றாக கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர், இந்த 15 நாட்களும் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கி இருப்பதாக ஐதீகம். புரட்டாசி பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை மகாளயபட்ச காலம் நீடிக்கும். புரட்டாசி அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். இந்த நாட்களில் தினமும் தர்ப்பணம் செய்து முன்னோரை மகிழ்ச்சிப்படுத்தினால், குடும்ப அபிவிருத்தி உண்டு. தை, ஆடி அமாவாசையை விட மகாளய அமாவாசை சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இவ்வாண்டு செப்.20ல் மகாளய பட்சம் துவங்குகிறது. அக்.4ல் மகாளய அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும்.