பதிவு செய்த நாள்
18
செப்
2013
10:09
மேலூர் : மேலூர் அருகே, வெள்ளலூர் ஏழைகாத்தம்மன் கோவிலில், சிறுமிகளை, அம்மனாக வழிபடும் புரட்டாசி திருவிழா, நேற்று துவங்கியது. மதுரை மாவட்டம், வெள்ளலூர், 60 கிராமங்களை உள்ளடக்கிய பகுதி. இதை ஐந்து மாகாணங்களாக பிரித்து, "வெள்ளலூர் நாடு என, அழைக்கின்றனர். இங்குள்ள ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா, புரட்டாசிதோறும் கொண்டாடப்படும்.விழாவில் ஏழு சிறுமிகளை தேர்வு செய்து, அம்மனாக கருதி கொண்டாடுவர். நேற்று காலை, மூண்டவாசி, வேங்கபுலி உட்பட, 11 கரைகளை சேர்ந்த, 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில், அம்மனாக வழிப்பட கூடிய ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். 11 கரையை சேர்ந்த, 100 சிறுமிகள் இதற்காக கோவில் முன் பெற்றோருடன் கூடினர். அம்மனின் குழந்தைகளாக தேர்வு பெற்ற ஏழு சிறுமிகளும், 15 நாட்கள் இரவில் கோவிலில் தங்கி, பகலில், 60 கிராமத்தினருக்கும் ஆசிர்வாதம் வழங்குவர். இதை தொடர்ந்து, 15வது நாளில், பெண்கள், மது கலயம் மற்றும் சிலைகளை சுமந்தும், ஆண்கள், தங்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றியும், நேர்த்திக் கடன் செலுத்துவர்.விழா நடக்கும், 15 நாட்களிலும், 60 கிராமங்கள் மற்றும் இங்கிருந்து வெளியூர், வெளிநாடு சென்றவர்கள் விரதம் இருப்பர். மாமிச உணவு, தாளித்த உணவு வகை சாப்பிடுவதில்லை. விரத நாட்களில் இப்பகுதி ஓட்டல்களிலும் இவ்வகை உணவுகள் சமைப்பதில்லை. பச்சை மரங்கள் வெட்டுதல், கட்டடம் கட்டுதல், மண்ணை தோண்டுதல் போன்ற பணிகளும் நடப்பதில்லை.