பதிவு செய்த நாள்
18
செப்
2013
10:09
திருப்பதி: திருமலை அருகில் உள்ள, ஸ்ரீவாரி பாதங்களுக்கு, இன்று (18ம் தேதி) தங்கக் கவசம், அணிவிக்கப்படுகிறது. திருமலையில் இருந்து, 8 கி.மீ., தொலைவில், ஸ்ரீவாரி பாதம் அமைந்துள்ளது.1983ல், பாறையில், பாதம் போன்ற அமைப்பு இருப்பதாக, தேவஸ்தானத்திடம், பக்தர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தேவஸ்தான அதிகாரிகள், சிற்பிகள் உதவியுடன், ஸ்ரீவாரி பாதம் அமைத்து, பூஜை நடத்தி வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், ஸ்ரீவாரி பாதத்தையும் தரிசித்து, பூஜை செய்து திரும்புவர். கடந்த மாதம், பக்தர்கள் பூஜைக்காக, தேங்காய் உடைத்தபோது, ஸ்ரீவாரி பாதத்தின் பெருவிரல் உடைந்தது. இதை அறிந்த தேவஸ்தானம், ஊழியர்களைக் கொண்டு, பெருவிரலை ஒட்ட முயற்சித்தது. இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது. அதைத் தொடர்ந்து, ஸ்ரீவாரி பாதத்தை சரி செய்து, தங்கக் கவசம் அணிவிக்க, தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் தலைமையில், இன்று காலை, 6:00 மணி முதல், 7:30 மணிக்குள், சம்ரோட்சணம் செய்து, புதிய தங்கக் கவசம் அணிவிக்க உள்ளனர். தங்கக் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியையொட்டி, நேற்று பகல், 12:00 மணிக்கு பிறகு, ஸ்ரீவாரி பாதத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, அனுமதி ரத்து செய்யப்பட்டது. " தினமும் இங்கு வரும் பக்தர்கள், பூஜை செய்வதற்கு வசதியாக, ஒரு அர்ச்சகர் தனியாக நியமிக்கப்படுவார். ஒரு சில மாதங்களில், ஸ்ரீவாரி பாத பாதுகாப்புக்காக கண்ணாடிக் கூண்டு அமைக்கப்படும் என, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தார்.
பவித்ரோற்சவம்: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், நேற்று பவித்ரோற்சவம் துவங்கியது. மூன்று நாட்கள் உற்சவம் நடைபெறும். மூன்று நாட்களும், காலை, 6:00 மணியில் இருந்து, 12:00 மணி வரை உள்ள ஆர்ஜித சேவைகளை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. புரட்டாசி மாதம் துவக்க நாளான நேற்று, ஏழுமலையானை தரிசிப்பதற்காக, தமிழக பக்தர்கள் அதிக அளவில் திருப்பதி வந்தனர். திருமலைக்கு செல்ல, குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதா, பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.