பதிவு செய்த நாள்
20
செப்
2013
11:09
திருவேங்கடம் : சம்சிகாபுரம் சங்கர விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இரண்டு நாட்கள் நடந்தது. சங்கரன்கோவில் தாலுகா சம்சிகாபுரம் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கர விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் காலை மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது. மாலையில் விக்னேஷ்வர பூஜை, கும்ப அலங்காரம், வாஸ்து சாந்தி, கிடஸ்தாபனம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. "இரவில் பக்தியையும் பண்பாட்டையும் பெரிதும் பேணி பாதுகாப்பது பெண்களே என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடந்தது. சுவாமி ராகவானந்தா தலைமையும், சென்னை வீரய்யா முன்னிலையும் வகித்தனர். பேராசிரியர் காளியப்பன் நடுவராக பொறுப்பேற்றார். இரண்டாம் நாள் காலை விக்னேஷ்வர பூஜை, பிம்பசுத்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஸ்பரிஸாகுதி, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனையுடன் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து விமான கலச பூஜை, மகா கும்பாபிஷேகம், சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை திருவிளக்கு பூஜை, இரவில் கரிவலம்வந்தநல்லூர் தலைமையாசிரியர் ஆறுமுகம் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை சம்சிகாபுரம் சங்கர விநாயகர் கோயில் விழாக்கமிட்டியார், திருப்பணிகுழு முத்துராஜ், சுரேஷ்குமார், வைரமுத்து மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.