பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, ஆண்டுதோறும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்; பலரும் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நேற்றுமுன்தினம் நடந்தது. பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரத ராஜப்பெருமாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் இடம்பெற்றன. திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், இதையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.