பதிவு செய்த நாள்
24
செப்
2013
11:09
பெண்ணாடம்: சேதமான தே.புடையூர் பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணாடம் அருகே தேவஸ்தான புடையூர் என அழைக்கப்பட்ட தே.புடையூரில் 100 ஆண்டுகள் பழமையான அகிலாண்டநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், தேர் திருவிழா, சுவாமி வீதியுலா விமர்சையாக நடப்பது வழக்கம். தைப்பூச விழாவின்போது, கோவில் குளத்தில் நடக்கும் தெப்ப உற்சவத்தில், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதுடன், கோபுரங்களில் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கோவை சிவப்பிரகாச சுவாமிகள் கடந்த 1986ல் கோவில் புனரமைப்பு பணியை துவக்கினார். போதிய நிதி இல்லாததால், புனரமைப்பு பணி முழுமை பெறவில்லை. இதனால் கோவில் பராமரிப்பின்றி நாளுக்கு நாள் சிதிலமடைந்து வருகின்றன. சேதமடைந்த கோவில் திருத்தேரும் மக்கி, வீணாகி வருகிறது. கோவில் குளமும் தூர்ந்து, இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. சேதமான தே.புடையூர் பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.