பதிவு செய்த நாள்
24
செப்
2013
10:09
திருத்தணி: அகத்தீஸ்வரர் கோவிலில், அஷ்டாஷ்டக பைரவ மகா யாக பூஜை, நேற்று, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அஷ்டாஷ்டக பைரவ (64 பைரவப் பெருமான்களுக்கு யாகம்) மகா யாகம், வரும், 27ம் தேதி, நடக்க உள்ளது. இதில், வடூக பைரவ பெருமானுக்கு, 64 யாக குண்டங்கள் மற்றும் 64 வேதிகைகள் நிர்மாணித்து, 64 ஆதிசைவ சிவாச்சாரியார்களால், 64 பைரவப் பெருமான்களுக்கு, ஹோம ஆகுதிகள், பூஜைகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து, வடூக நாதனுக்கு புனித நீராட்டு விழா, நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை, கோவில் வளாகத்தில், ஒரு யாக சாலை அமைத்து, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சாந்தி, திசா, மூர்த்தி, சம்ஹிதா மற்றும் அஸ்தர ஹோமம் நடத்தப்பட்டன. மாலை, காமாட்சி அம்மனுக்கு, நவகலச ஸ்தபனம் பூஜை ஹோமம் நடந்தது. இன்று காலை, சண்முக பெருமானுக்கு, சத்ரு சம்ஹாரதிரிசதி அர்ச்சனை மற்றும் ஹோமம் நடக்கிறது. மாலை, 64 பைரவர்கள், 64 யோகினிகள் பலி பூஜை நடக்கிறது. வரும், 27ம் தேதி காலை, 7:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, வடூக பைரவருக்கு சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன.