மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்புன்கூரில் ஸ்ரீ சவுந்தரநாயகி சமேத சிவலோகநாத சுவாமி கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இந்த கோவில் 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் தன்னை வழிபடுவதற்காக சிவபெருமான், நந்தியை விலகி இருக்க சொன்ன தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் நேற்று ரோகிணி நட்சத்திரத்தில் நந்தனார் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தனார் எழுந்தருள சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.ஹோமத்தை பாலாஜி குருக்கள் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். விழாவில் திண்டுக்கல் சிவபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமா ச்சாரிய சுவாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், ஆய்வாளர் மதிவாணன், ஸ்ரீ சிவநந்தனார் அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழவையொட்டி மாலை நந்தனார் வீதியுலாகாட்சி, திருப்புன்கூர் சுவாதி ராமநாதனின் நாதஸ்வர இசை சங்கமம், நெய்வேலி ஓதுவார் ராஜபதியின் தேவார இசை நிகழ்ச்சி, தருமபுரம் ஆதின புலவர் டாக்டர் சிவச்சந்திரனின் மேன்மைகொள் சைவநீதி என்ற இசை சொற்பொழிவும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சிவநந்தனார் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.