பதிவு செய்த நாள்
26
செப்
2013
10:09
ஈரோடு: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, ஒரே குடும்பத்தினர், துறவிக்கோலம் பூண்டனர். அவர்களுக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம், பாடுமேல் பகுதியை சேர்ந்தவர் கவுதம்போத்ரா, 42. இவரது மனைவி உஷாபோத்ரா, 37. இவர்களுக்கு, பரத், 14, ஆகாஷ், 10, என்ற இரு மகன்கள் உள்ளனர். ஐதராபாத்தில், ஜவுளிக்கடையை, கவுதம்போத்ரா நடத்தி வந்தார். ஜெயின் சமூகத்தின் மீது, அதீத பற்று கொண்டவராக கவுதம்போத்ரா இருந்து வந்தார். எனவே, தன் குடும்பத்தினருடன், துறவு மேற்கொள்ள கவுதம்போத்ரா முடிவு செய்தார். அதற்கு, அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள ஜெயின் கோவிலில், தாங்கள் துறவு மேற்கொள்வதாக விருப்பம் தெரிவித்தனர். துறவு மேற்கொள்ளும் முன், இந்தியா முழுவதும் ஜெயின் சமூகத்தினர் உள்ள பகுதிக்கு சென்று, ஜெயின் அமைப்பினரின் வாழ்த்துகளை பெற்று, மகிழ்வோடு துறவு மேற்கொள்வது நடைமுறை. அதன்படி, நேற்று, ஈரோடு வந்த கவுதம்போத்ரா குடும்பத்தினருக்கு, ஈரோட்டில் உள்ள ஜெயின் அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈரோடு, ஜெயின் கோவிலில் வழிபாடு நடத்தினர். பின் அலங்கரிக்கப்பட்ட காரில், மணிக்கூண்டு வழியாக, ஈஸ்வரன் கோவில் வீதிக்கு, கவுதம்போத்ரா குடும்பத்தினரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஜெயின் அமைப்பினரை, இக்குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். நவம்பர், 20ம் தேதி, குஜராத்தில் உள்ள ஜெயின் ஆலயத்தில், கவுதம்போத்ரா குடும்பத்தினர் துறவு மேற்கொள்ள உள்ளனர்.