Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேருவை செண்டால் அடித்த படலம்! கடல் சுவற வேல் விடுத்த படலம்! கடல் சுவற வேல் விடுத்த படலம்!
முதல் பக்கம் » 64 திருவிளையாடல்
இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 மார்
2011
04:03

பாண்டியநாட்டிலும், சேர, சோழ நாடுகளிலும் திடீரென மழை பொய்த்தது. தமிழக நாடுகள் அனைத்திலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்ட துன்பத்திற்கு அளவில்லை. அரண்மனை களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களும் மக்களுக்கு வாரி வழங்கப்பட்டு காலியாகிக் கொண்டிருந்தது. சண்டையும், சச்சரவும் செல்வம் இருக்கும் போது மட்டும் தான்! பசி வந்துவிட்டால் ஒற்றுமை வந்துவிடும் போலும்! தங்களுக்குள் யார் பெரியவர் என அடிக்கடி போரிட்டுக் கொள்ளும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மதுரையில் ஒன்று கூடி பஞ்சம் போக்கும் முறை பற்றி ஆய்வு செய்தனர். இதற்குரிய தீர்வை பொதிகைமலையில் தங்கியிருக்கும் அகத்தியரைச் சந்தித்து கேட்பதென முடிவு செய்தனர். அனைவரும் சோமசுந்தரப் பெருமானையும், மீனாட்சியையும் வணங்கி, அகத்தியரைத் தரிசித்த பிறகாவது மழை பெய்து, தமிழகம் செழிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர். பின்னர் முப்பெரும் மன்னர்களும் பொதிகை மலைக்குச் சென்றனர். அகத்தியர் தனது மனைவி லோபமுத்திரையுடன் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். அந்த தம்பதியினரை அவர்கள் வணங்கினர். மூவரையும் வரவேற்று ஆசியளித்த அகத்தியர், அவர்கள் வந்த விபரத்தைக் கேட்டு மனவருத்தம் கொண்டார்.

மாமன்னர்களே! உங்களுடைய கிரக சஞ்சாரப்படி இன்னும் 12 ஆண்டுகளுக்கு நாட்டில் மழை பெய்ய வழியில்லை. இதற்கு ஒரே பரிகாரம் தேவலோகத் தலைவன் இந்திரனை நீங்கள் பிரார்த்திப்பது தான். அவனைப் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளை நீங்கள் செய்து கொள்ளுங்கள். அவனது அருள் கிடைத்தால் வருணனை அனுப்பி மழை பொழிய வைப்பான், என்றார். சேர, சோழருக்கு இந்த யோசனையில் உடன்பாடு இருந்தாலும், இந்திரனுக்கும், தனக்கும் ஏற்கனவே பகைமை இருந்ததால், உக்கிரபாண்டியனுக்கு இதில் உடன்பாடில்லை. மாமுனிவரே! இந்திரன் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பவன். நான் என் நாட்டு மக்களின் நலன் கருதி யாகங்கள் பல செய்தேன். ஆனால், இந்திரலோகப் பதவியைப் பிடிப்பதற்காக நான் அவ்வாறு செய்வதாக எண்ணிய இந்திரன், வருணன் மூலமாக ஏழுகடல்களையும் மதுரை மீது ஏவிவிட்டான். நான் அவற்றை என் தந்தை சோமசுந்தரர் கொடுத்த வேல் வீசி தடுத்து நிறுத்தினேன். இதனால், அவன் என் மீது ஆத்திரமாக உள்ளான். என்னைப் பகையாளியாகக் கருதும் அவன், சேர, சோழருக்கு வேண்டுமானால் உதவுவான். எனக்கு உதவி மறுப்பானே! எனவே, நான் அவனைப் பார்க்க விரும்பவில்லை. வேறு உபாயம் இருந்தால் சொல்லுங்கள், என பணிவுடன் விண்ணப்பித்தான். அகத்தியர் சிரித்தார்.

உக்கிரபாண்டியா! பகைவர்களையும் நண்பர்களாக மாற்றிக்கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும். அதற்கு விரதங்களும் உதவும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுமை வேண்டும். அவர்கள் மக்கள் நலன் கருதி, அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். நீ இந்திரனிடம் நட்பு கொள்ள வேண்டுமானால், சோமவார விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அந்த விரதம் பற்றி சொல்கிறேன், கேள்! என்று அறிவுரை கூறினார். மன்னர்களே!  சோமவார விரதத்தை கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில் துவங்க வேண்டும். மற்ற மாதங்களாக இருந்தால், வளர்பிறை திங்கள்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அமாவாசையும், திங்கள் கிழமையும் இணைந்து வரும் நாளாக இருக்குமானால் சிறப்பானது. முதல் நாள் சூரியவாரத்தன்று (ஞாயிறு) இரவு முதல் திங்கள்கிழமை இரவு வரை உபவாசம் (பட்டினி) இருப்பது நல்லது. அன்று சிவத்தலங்களுக்குச் சென்று வரவேண்டும். குறிப்பாக, மதுரை மாநகரில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கோடிமடங்கு அதிக பலன் பெறுவர். இந்த விரதத்தால் பகைமை நீங்கும். இறைவனிடம் வைத்த வேண்டுகோள் நிறைவேறும், என்று அருளினார். அவர்கள் அந்த விரதத்தை அனுஷ்டிப்பதாக அகத்தியரிடம் உறுதியளித்து விட்டு நாடு திரும்பினர். சோமவார விரதத்தையும் அனுஷ்டித்தனர். சோமவார விரதத்தின் பலனாக இந்திரன் மூவேந்தர்களையும் தேவலோகத்துக்கு வர அழைப்பு விடுத்து புஷ்பக விமானத்தை அனுப்பினான். அவர்கள் தேவலோகம் சென்றனர்.

இந்திரன் அவர்களை வரவேற்று ஆசனம் அளித்தான். சேர, சோழ மன்னர்கள் அந்த ஆசனங்களில் அமர்ந்தனர். உக்கிரபாண்டியன் அதில் அமர மறுத்துவிட்டான். இந்திரன் உயர்ந்த பீடத்தில் இருந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, அவனுக்கு கீழே இருக்கும் வகையில் ஆசனம் அமைத்திருந்தது அவனுக்கு  பிடிக்கவில்லை. அவன் வேகமாக பீடத்தில் ஏறினான். இந்திரனுக்கு சமமாக அருகில் இருந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டான். இந்திரனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. இருக்கையில் இருப்பவனை எழச்சொன்னால், சிறிய விஷயத்தை பெரிதுபடுத்தியது போலவும், தன்னை அற்பனாக பிறர் கருதி விடக்கூடும் என்பதாலும், பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, அதைக் கண்டு கொள்ளாதது போல் நடித்து, அவர்கள் வந்த விஷயத்தைச் சொல்லும்படி கேட்டான். சேர, சோழர்கள் தாங்கள் வந்த விபரத்தைக் கூறினர். இந்திரன் அவர்களிடம், என்னை நம்பி வந்த உங்களுக்கு, நீங்கள் கேட்டது போல மழை பெய்ய ஏற்பாடு செய்கிறேன். ஆனால், இங்கே உக்கிரமாக வந்திருக்கும் உக்கிரபாண்டியருக்கு அதையும் விட சிறந்த பரிசளிக்க எண்ணுகிறேன், என்று சொல்லி, யாரங்கே! அந்த முத்துமாலையை எடுத்து வாருங்கள், என்றான். காவலர்கள் பத்து பேர் சேர்ந்து ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்த முத்து மாலையை மிகவும் சிரமப்பட்டு தூக்கி வந்தனர். அந்த மாலையை அணிந்து கொண்டால், தலையே தொங்கிவிடும். அவ்வளவு கனம். அதை உக்கிரபாண்டியன் முன்னால் வைத்தார்கள். பாண்டியா! அதை எடுத்து அணிந்துகொள், என்றான் இந்திரன்.

இந்திரன் இந்த பரீட்சையை உக்கிரபாண்டியனுக்கு வைப்பதன் மூலம், அவனை அவமானப்படுத்த எண்ணினான். ஏனெனில், அந்த முத்துமாலையை தனிநபரால் தூக்கவே முடியாது. அவ்வாறு தூக்க முடியாமல் உக்கிரபாண்டியன் அவமானப்பட்டு நிற்கும்போது, கைகொட்டி சிரிக்கலாம் என்பது அவனது நினைப்பு! ஆனால், நடந்ததோ வேறு. அந்த மாலையை ஏவலர்கள் இறக்கி வைத்ததும், தன் இடது கையால் லாவகமாக எடுத்த உக்கிரபாண்டியன் கழுத்தில் அணிந்து கொண்டு அட்டகாசமாக நின்றான். இந்திரனும், தேவர்களும் அவனது பலம் கண்டு நடுங்கிவிட்டனர். உக்கிரபாண்டியா! உன் பலம் பாராட்டத் தக்கது. யாராலும் தூக்க இயலாத இந்த மாலையை ஒற்றைக்கையால் எடுத்து அணிந்து கொண்டாய். இனி உன்னை இந்த உலகம் ஆரம் சூழ்ந்த பாண்டியன் என சிறப்பித்து அழைக்கும், என்றான். இந்திரனின் இந்த பாராட்டை உக்கிரபாண்டியன் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. முப்பெரும் மன்னர்களும் இந்திரலோகத்தில் இருந்து புறப்பட்டு நாடு போய் சேர்ந்தனர். சேர, சோழ நாடுகளில் மழை கொட்டியது. பாண்டிய நாட்டில் மட்டும் இந்திரனின் ஆணவத்தாலும், சதியாலும் மழை பெய்யவில்லை. இந்திரனை அடக்கி மழையைக் கொண்டு வருவதற்கான கடும் ஆலோசனையில் உக்கிரபாண்டியன் இருந்தான். அவனும், காந்திமதியும் சோமவார விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்தனர். சோமசுந்தரப் பெருமானை மட்டுமே அவர்கள் நம்பினர். அந்த வழிபாட்டுக்கு ஒருநாள் பலன் கிடைத்தது. உக்கிரபாண்டியன் பொதிகைமலை சாரலில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, காளமுகி, துரோணம், புஷ்கலாவருத்தம், சங்காரித்தம் எனப்படும் நான்கு வகை மேகங்களின் அதிபதிகள் அந்த வனத்தில் உலவுவதைக் கண்டான். அவர்கள் இந்திரனின் கட்டளைக் கேற்ப பல திசைகளுக்கும் சென்று மழை பெய்விப்பவர்கள். அவர்களை உக்கிரபாண்டியன் விரட்டிப்பிடித்து கைது செய்தான். அந்த தேவதைகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகண்டு தேவேந்திரன் கடும் ஆத்திரமடைந்தான். உலகில் எங்குமே மழை இல்லாமல் போய்விடும் இக்கட்டான நிலை ஏற்பட்டது. எனவே, தேவர் படை மதுரையை முற்றுகையிட்டது. அமைச்சர் சுமதி தலைமையிலான படை, தேவர் படைகளை எதிர்த்து கடுமையாகப் போரிட்டது.

தேவர் படைக்கு கடும் சேதம். இந்திரன் என்ன செய்வதென தெரியாமல் தவித்தான். வேறு வழியின்றி யாரையும் அழித்துக் கொன்று விடும் தனது வஜ்ராயுதத்தை உக்கிரபாண்டியன் மீது வீசினான். உக்கிரபாண்டியன் கலங்கவில்லை. தன் தந்தை தெய்வமாவதற்கு முன், தனக்கு அளித்த வளையைக் கழற்றி வஜ்ராயுதத்தை நோக்கி வீசினான். அந்த வளை, வஜ்ராயுதத்தை தூள் தூளாக்கி விட்டு, இந்திரனின் கிரீடத்தைத் தட்டிப் பறித்தது. சற்று தவறியிருந்தாலும், இந்திரனின் தலையே போயிருக்கும். இந்திரன் தலைகுனிந்து நின்றான். தலைவனின் நிலைகண்டு, தேவர் படை அடங்கி ஒடுங்கி உக்கிரபாண்டியனிடம் சரணடைந்தது. உக்கிரபாண்டியன் இந்திரனிடம், இந்திரனே! உன்னை இப்போது என்னால் ஒரு நொடியில் கொல்ல முடியும். ஆனால், எதிரிகளிடமும் பரிவுகாட்டும் இனம் மதுரை மண்ணை ஆளும் பாண்டிய இனம் என்பதைப் புரிந்து கொள். இங்கிருந்து சென்றுவிடு, என்று உயிர்ப்பிச்சை கொடுத்தான். தேவேந்திரன் அவமானத்துடன் தன்னுலகம் சென்றான். மழை பெய்யாததால் உலகமக்கள் கஷ்டப்படுவார்களே என்பதற்காக, மேக தேவதைகளை விடுவிக்கும்படி உக்கிரபாண்டியனுக்கு ஒரு தூதன் மூலமாக ஓலை அனுப்பினான். உக்கிரபாண்டியன் அந்த ஓலையைப் படித்து விட்டு, அவ்வாறு செய்ய இயலாது என்றும், இனி அந்த தேவதைகள் தனக்கு கட்டுப்பட்டு தங்கள் தேசத்தில் மட்டுமே மாதம் மும்மாரி மழை பொழியச் செய்வார்கள், என்றும் பதில் சொன்னான். அப்போது, அவையில் இருந்த ஏகவீரன் என்பவன் எழுந்தான். அரசே! பிடிவாதம் வேண்டாம். இந்த பிடிவாதத்தால் நமக்கு தண்ணீர் கிடைக்கலாம். ஆனால், தண்ணீர் என்பது பொதுவான விஷயம். அது உலகம் முழுமைக்கும் வேண்டும். தயவுசெய்து நீங்கள் மேகாதிபதிகளை விடுதலை செய்யுங்கள். நான் இந்திரனின் நண்பன். அவனோடு பேசி, பாண்டியநாட்டில் தவறாமல் மழை பெய்ய ஏற்பாடு செய்து தருகிறேன். இது உறுதி. என்னை நம்பி இதைச் செய்யலாம், என்றான். முருகனின் அம்சமான உக்கிரபாண்டியனும் சம்மதம் தெரிவித்தான். மேகாதிபதிகள் இந்திரனைப் போய்ச் சேர்ந்தனர். ஏகவீரன் இந்திரனைச் சந்தித்துப் பேசி பாண்டியநாட்டில் மாதம் மும்மாரி பொழிய ஏற்பாடு செய்தான். நாடு மீண்டும் செழித்தது.

 
மேலும் 64 திருவிளையாடல் »
பெரிய தர்மம் செய்தால் தான் இறை ஆசி கிடைக்கும் என்பதில்லை. சிறிய தொண்டு கூட கருணையைப் பெற்றுத் தரும். ... மேலும்
 
temple news
ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்
 
temple news
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்
 
temple news
மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்
 
temple news
குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar