பதிவு செய்த நாள்
28
செப்
2013
10:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில், 45 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட அன்னதான கூடம், ஓராண்டாக மூடிகிடப்பதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அன்னதான கூடத்தில், 50 பேர் மட்டுமே சாப்பிடும் வசதி உள்ளது. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, காத்திருக்கும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் இதனால் குழந்தைகள், வயதானவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, பசியில் தவிக்கின்றனர். சிலர் நிற்க முடியாகமல் திரும்பி செல்கின்றனர். இதை தவிர்க்க, அறநிலைத்துறை சார்பில் 45 லட்ச ரூபாயில், ஒரே நேரத்தில் 250 பேர் சாப்பிடும் அளவிற்கு, நவீன வசதியுடன் அன்னதான கூடம் கட்டப்பட்டது. ஓராண்டாகியும் பூட்டியே கிடக்கிறது. பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. முரளீதரன் கூறுகையில், ""முதல்வர் ஜெ., திறந்து வைக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். விரைவில் திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வர் ஜெ., விரைவில் "வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்க உள்ளார், என்றார்.