பதிவு செய்த நாள்
28
செப்
2013
10:09
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடந்தது. நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க, சுப்பிரமணிய சுவாமி தனது கரத்திலுள்ள வேல்மூலம் மலைமீதுள்ள பாறையில் கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கினார். இதை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும், திருப்பரங்குன்றம் கோயில் மூலவர் கரத்திலுள்ள வேல், மலைமேல் கொண்டு செல்லும் திருவிழா நடக்கிறது. நேற்று காலை, மலைமேல் வேல் கொண்டு செல்லப்பட்டு, சுவாமி கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அங்கு, காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு பஞ்சலிங்கம், கால பைரவருக்கு பூஜைகள் முடிந்தது. பின், சிவாச்சாரியார்கள் சுனை தீர்த்தத்தில் வேலை எடுத்துச் சென்று அபிஷேகம் செய்தனர். 150 படி அரிசியிலான கதம்ப சாத பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் வேல் புறப்பாடாகி, மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. இரவு வேல், சுவாமிக்கு அபிஷேகங்கள் முடிந்து, பூப்பல்லக்கில் வீதி உலா முடிந்து மூலவர் கரத்தில் மீண்டும் வேல் சேர்ப்பிக்கப்பட்டது.