பதிவு செய்த நாள்
28
செப்
2013
10:09
பழநி: பழநி, ஆண்டிபட்டி மேற்குத் தொடர்ச்சி மலையில், 4 ஆயிரம் ஆண்டுகள், பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆண்டிபட்டி அருகே, மலையின் குகையில், பாறை ஓவியங்கள், பழந்தமிழ் எழுத்துகள் வரையப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பேராசிரியர் கன்னிமுத்து, பழனிச்சாமி, ராமலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொல்லியல் ஆய்வாளர், நாராயணமூர்த்தி கூறியதாவது: இந்த ஓவியங்கள் இடைச்சங்க காலத்தை சேர்ந்தவை. கி.மு., 7,000க்கும், கி.மு., 4,000க்கும் இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டுள்ளன. இரு பிரிவினர், யானை மற்றும் குதிரைகளிலும், காலாட் படையினர், வாள் மற்றும் கேடயம் கொண்டு போரிடும் காட்சிகள், கர்ப்பிணியை அழைத்து செல்லும் காட்சி, யானை தண்ணீரை வாரி இறைத்து மகிழும் காட்சிகள், கொக்கு, புலியும் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. பழந்தமிழ் எழுத்து வடிவம் உள்ளது. "தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடியான இந்த எழுத்துக்கள், இடைச்சங்க கால வரிவடிவத்தை காட்டுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.