பதிவு செய்த நாள்
30
செப்
2013
11:09
சேலம்: சேலம், அழகாபுரம் புனித மிக்கேல் தேவாலய திருவிழாவையொட்டி, நேற்று மாலை தேர் பவனி நடந்தது. சேலம், அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயத் தேர்த் திருவிழா கடந்த, 22ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினமும் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனியை முன்னிட்டு, நேற்று காலையில், சேலம் ஆயர் சிங்கராயன் கூட்டு பாடற்பலி நடத்தினார். மாலையில், தேர் மந்திரிப்பு, புனித மிக்கேலின் ஆடம்பர தேர்பவனி நடந்தது. நிகழ்ச்சியில், குழந்தை இயேசு பேராலயத்தின் பங்கு தந்தை கிரகோரி ராஜன் கலந்து கொண்டார். ஏராளமானோர், தேர் பவனியில் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏந்திச் சென்றனர். இன்று காலை, நன்றித் திருப்பலி, கொடி இறக்கம் ஆகியன நடக்கிறது. தேர் திருவிழாவில், சகாய மாதா அன்பியம், செபமாலை மாதா அன்பியம், இம்மானுவேல் அன்பியம், பீடச் சிறுவர்கள், ஆரோக்கியமாதா அன்பியம், பாத்திமா மாதா அன்பியம், டிவைன் மெர்சி அன்பியம், ஹோலி ஏஞ்சல்ஸ் கன்னியர்கள் கலந்து கொண்டனர்.