நாகர்கோவில்: காந்தி ஜெயந்தி தினத்தில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடத்தில் விழுந்த சூரிய ஒளியை நூற்றுக்கணக்கானவர்கள் கண்டு அஞ்சலி செலுத்தினர். அண்ணல் காந்தியடிகளின் அஸ்தி 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் தேதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப் பட்டது. முன்னதாக கடற்கரையில் அவரது அஸ்தி வைக்கப்பட்டு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் அவரது நினைவாக மண்டபம் கட்டப்பட்டு 1956-ம் ஆண்டு திறக்கப்பட்டது.79 அடி உயரத்தில் அரை ஏக்கரில் கட்டடம் கட்டப் பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று பகல் 12 மணிக்கு அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடத்தில் சூரிய ஒளி விழும் வகையில் இந்த மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி தினத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது செப்டம்பர் 30-ம் தேதி முதலே இந்த கட்டிட மேற்கூரை துவாரம் வழியாக சூரிய ஒளி வரும் ஆனால் அஸ்தி கலசத்தில் இந்த ஒளி விழாது. காந்தி ஜெயந்தி அன்று மட்டும் இந்த அஸ்திகலசம் மீது ஒளி விழும். நேற்று சரியாக 11.55 மணிக்கு உள்ளே விழுந்த சூரிய ஒளி சிறிதுசிறிதாக நகர்ந்து 12 மணிக்கு அஸ்தி கலச பீடத்தின் மீது விழுந்தது. அங்கு கூடிநின்றவர்கள் உணர்ச்சி பெருக்குடன் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக ராட்டையில் நூல்நூற்கும் நிகழ்ச்சியும், ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி பழனிச்சாமி, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.