பதிவு செய்த நாள்
07
அக்
2013
10:10
கமுதி:கமுதி அருகே ஆள் உயர மண்பீடம் அமைத்து, செம்மறி ஆடுகளின் தலையை படைத்து, அதன் கறியை வெறும் நீரில் சமைத்து உண்ணும், ஆண்களுக்கான வினோத வழிபாடு நடந்தது. கமுதி அருகேயுள்ளது முதல்நாடு கிராமம். இங்குள்ள எல்லை பிடாரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், ஒரு நாள் விழா கொண்டாடுவது வழக்கம். நேற்று, நடைபெற்ற விழாவில், சிலை வழிபாடு அல்லாத இங்கு, இரவு, 9:00 மணிக்கு கூடும் ஆண்கள், 12:00 மணிக்குள் ஆளுயர பீடத்தை மணலால் எழுப்புவர். பின், 31 செம்மறி ஆடுகளை பலி கொடுத்து, அதன் தலைகளை பீடத்தை சுற்றிலும் வைக்க வேண்டும். ஆடுகளின் இறைச்சியை மசாலா பொருள் சேர்க்காமல் வெறும் நீரில் வேகவைத்து சமைப்பர். தனியாக பச்சரிசி சாதம் வடித்து, அதில் ஆளுக்கு ஒரு உருண்டை மட்டும் தரப்படும். இறைச்சியை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். சமைக்கப்பட்ட உணவு, பனை ஓலையில் வைத்தே உண்ணும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆனால், மீதமுள்ள இறைச்சியை பீடத்தை சுற்றிலும் புதைத்துவிட வேண்டும். விளக்கின் வெளிச்சத்தில் இரவு முழுவதும் நடைபெறும் இவ்விழா பகுதியை சுற்றி, 5 கி.மீ., தூரத்திற்கு பெண்கள் நுழைய அனுமதி கிடையாது. வழக்கமாக நடைபெறும் இவ்விழாவில், முதல்நாடு, குடிக்கினியான், பாப்பாங்குளம் உட்பட சுற்றுப்புற சில கிராமத்தினர் ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர்.