பதிவு செய்த நாள்
07
அக்
2013
10:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் கோயில்களில் நவராத்திரி திருவிழாக்கள் நேற்று துவங்கின. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் துவக்க நாளான நேற்று கோவர்த்தனாம்பிகை அம்மன், ராஜராஜேஸ்வரி கொலு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நவராத்திரி நாட்களில் நக்கீரருக்கு காட்சி, மாணிக்கம் விற்ற லீலை, ஊஞ்சல், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தபசு, மகிஷாசுரமர்த்தினி, சிவபூஜை அலங்காரங்களில் தினமும் அம்மன் எழுந்தருளி அருள்பாலிப்பார். அக்., 14ல் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில், தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி, சுவாமி அம்பு எய்யும் நிகழ்ச்சி நடக்கும். தினமும் இரவு 7 மணிக்கு துர்க்கை அம்மன் கோயிலுக்குள் வலம் வருவார். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அம்மன் நேற்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார். தினமும் மீனாட்சி, காமாட்சி, அன்னபூர்ணி, துர்க்கை, மகாலட்சுமி, வடிவுடை அம்மன், மகிஷாசுரமர்த்தினி, மகா சரஸ்வதி ஆகிய ஏதாவது ஒரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார். கோயில்களில் நடை திறப்பு, பூஜைகள் வழக்கம் போல் நடக்கும்.