*வெற்றிக்கான ரகசியம் ஒருமுகப்பட்ட மனதுடன் ஒரு செயலில் ஈடுபடுவது தான். மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை மட்டுமே தேவை என்று கருதுவது தவறு. *படிப்பதில் மட்டுமில்லாமல், எந்த தொழில் என்றாலும் மனதை ஒருமுகப்படுத்த வேண்டியது அடிப்படையானது. கஷ்டப்பட்டு படிப்பதை விட இஷ்டப்பட்டு படி. வெற்றி பெறுவாய். *தொழிலுக்குத் தேவையான சூழ்நிலையே, ஒரு தொழிலாளியின் மனதை ஒருமுகப்படுத்தி ஈடுபாட்டை உருவாக்குகிறது. தொடர்ந்த முயற்சி இருக்குமானால் மனஒருமைப்பாட்டை யாரும் பெற முடியும். *காற்றைக் கூட கட்டுப்படுத்தி விடலாம். ஆனால், மனதை ஒருமுகப்படுத்த அதை விட கடினமானது. இன்றைய வாழ்க்கை முறையினால் படிக்கும் மாணவர்களுக்கு மனதை அடக்குவது பெரிய பிரச்னையாக மாறி விட்டது. *நேர்மையும், வீரமும் நிறைந்த அர்ஜூனனே, கிருஷ்ணரிடம், அலை பாயும் மனதைக் கட்டுப்படுத்துவது எப்படி? என்று கேட்கும்போது, மனம்போனபடி தறி கெட்டு ஓடும் இக்கால மனிதர்களின் நிலையை சொல்லத் தேவையில்லை. *உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை இருக்கிறது. காற்று வீசும். நெருப்பு சுடும். நீர் நில்லாமல் ஓடும். அதுபோல மனதிற்கும் தனிப்பட்ட குணங்கள் உண்டு. *மனம் எல்லா இடத்திலும் மூக்கை நுழைக்கும். பைத்தியம் போல கூத்தாடும். அர்த்தமில்லாமல் ஆசைப்படும். நினைவு அலையில் மிதக்கும். ஆகாயத்தில் கோட்டை கட்டும். வேலையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நினைத்து கவலை கொள்ளும். *மனதைக் கட்டுப்படுத்த எண்ணினால், முதலில் அதைச் சிதறடிக்கும் சூழ்நிலையிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதற்காக உலகத்தை விட்டே ஓடி விடுவது தான் வழி.. என்று தவறாக எண்ணி விடாதீர்கள். *கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை மனதின் வாகனங்கள். தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையில் சிக்கி மனம் சிதறி விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். மனதைக் கட்டுப்படுத்த புத்தியின் உதவி மிகவும் தேவை. *ஏன் மனதை அடக்க வேண்டும் என்று கூட மாணவர்களுக்கு சந்தேகம் உண்டாகும். எதையும் அறிவால் அறிவது நல்லது. இல்லாவிட்டால் அனுபவம் ஒருநாள் உனக்கு அதை உணர வைத்து விடும். *கட்டுப்பட்ட மனமே, அரிய பெரிய செயல்களைச் சாதிக்கும் வல்லமை பெற்றிருக்கும். இல்லாவிட்டால் சாதாரண செயலைக் கூட செய்ய முடியாமல் சிரமப்பட நேரிடும். *எல்லையற்ற சக்தி படைத்தது மனம். ஆனால், மக்களில் பெரும்பாலானவர்கள் பலவீனமான மனதுடன் வாழ்நாள் முழுவதும் தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு காலத்தை வீணாக்குகிறார்கள். *எண்ணத்தை ஒழுங்குபடுத்துங்கள். வேண்டாத தீய எண்ணம் மனதிற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். தூய்மையான மனம் எளிதில் ஒருமுகப்படும். அப்போது கல்வி என்றில்லாமல் எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி எளிதில் கிட்டும். -மாணவர்களுக்கு சொல்கிறார் புரு÷ஷாத்தமானந்தர்