பதிவு செய்த நாள்
11
அக்
2013
10:10
சேலம்: சேலம், பக்திசாரர் பக்த சபா சார்பில், திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு, மூன்று டன் பூக்கள், மாலைகளாக தொடுத்து அனுப்பப்பட்டது. திருப்பதி, திருமலையில் ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் அக்டோபர், 5ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, மணமுள்ள மலர்களை அனுப்பும் பணியில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர். சேலம், பொன்னுசாமி திருமண மண்டபத்தில் நடந்த நிகழச்சிக்கு, ஏராளமானோர் பூக்களை வழங்கினர். சேலம், பக்திசாரர் பக்த சபா அமைப்பினர் கூறியதாவது: திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவுக்காக, இதுவரை, இரண்டு டன் உதிரிப்பூக்கள் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று அரளி, ரோஜா, சாமந்தி பூ மற்றும் மணக்கும் பூக்களை கொண்டு, மாலைகள் தொடுக்கும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். மூன்று டன் மாலைகள், லாரிகள் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசி, தாயார் பிரம்மோற்சவம், உகாதி பண்டிகை, ரதசப்தமி விழாக்களுக்கு, இங்கிருந்து டன் கணக்கில் பூக்கள் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.