பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
கோவை: கோவையில், "வாழும் கலை அமைப்பு மூன்று நாட்களாக நடத்திய நவராத்திரி விழாவில், மகாசண்டிஹோமம் நடந்தது. இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், "வாழும் கலை அமைப்பு சார்பில் மூன்று நாட்கள் நவராத்திரி விழா நடந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில், மஹா சண்டிஹோமம் நடந்தது. "வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கரின் பிரதம சீடர் சுவாமி ஞானதேஜ் பங்கேற்றார். மகாசண்டி ஹோமம் என்பது மார்கண்டேய ரிஷியால், சுரதன் என்ற மன்னருக்கும், சமாதி என்ற வைசியருக்கும், உபதேசிக்கப்பட்டுள்ளது. இது 13 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அவை மீண்டும் மூன்று உப பகுதிகளாக சேர்த்து, முதல் பகுதி மகாகாளியாகவும், இரண்டாம் பகுதி லட்சுமியாகவும், மூன்றாம் பகுதி மகா சரஸ்வதியாகவும் போற்றப்படுகிறது. சர்வ மங்களத்தை கொடுக்கக்கூடிய, மகாசண்டிஹோமத்தை வாழும் கலை அமைப்பின் வேதாகம சமஸ்கிருத பாடசாலை சார்பில், சிவாச்சாரியார்களும், வேத விற்பன்னர்களும் இணைந்து பாராயணத்தையும், ஹோமத்தையும் நடத்தினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஹோமத்தின் ஒரு பகுதியாக கோ பூஜையும் நடந்தது.