பெரியபட்டணம் மகான் செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்கா மத நல்லிணக்க சந்தனக்கூடு நாளை அக்., 22ல் நடைபெறுகிறது. பெரியபட்டணத்தில் மகான் செய்யது அலி வலியுல்லாஹ் தர்கா உள்ளது. இங்கு, 112 வது ஆண்டின் சந்தனக்கூடு திருவிழா அக்., 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து நாளை அக்., 22ல் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வதால் மத நல்லிணக்க விழாவாக நடத்தப்படுகிறது. பெரியபட்டணம் ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளிவாசலிருந்து தாரை, தப்பட்டை முழக்கத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று தர்கா வந்தடையும். விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் பக்தர்களுக்கு சிறப்பான அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் எம்.சிராஜ்தீன், கமிட்டி செயலாளர் அப்துல் மஜீது, கவுன்சிலர் அபிபுல்லா மற்றும் இஸ்லாமிய நண்பர் குழு, சுல்த்தானியா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.