பதிவு செய்த நாள்
22
அக்
2013
10:10
புதுச்சேரி: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு ரத யாத்திரை வரும் 25 ம்தேதி புதுச்சேரி வருகிறது. சுவாமி விவேகானந்தர் 150வது பிறந்த ஆண்டு ரத யாத்திரை குழு தலைவர் செல்வகணபதி நிருபர்களிடம் கூறியதாவது: சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த நாளையொட்டி, கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி ரத யாத்திரை துவங்கியது. இந்த ரதம் தமிழகம் முழுவதும் 300 நாட்களில், 10 ஆயிரத்து 600 கி.மீ., தூரம் பயணம் மேற்கொண்டு, அடுத்தாண்டு ஜனவரி 8ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை அடைய உள்ளது. இந்த ரதம் வரும் 25 மற்றும், 26 ஆகிய தேதிகளில் புதுச்சேரிக்கு வருகிறது. கடலூரிலிருந்து கன்னியகோவில் மன்னாதீஸ்வரர் கோவிலுக்கு வரும் 25 ம்தேதி காலை 10.00 மணிக்கு வரும் ரத யாத்திரைக்கு விழா குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி, தவளக்குப்பம் சந்திப்பு, பாரதியார் பல்கலைக் கூடம், முதலியார்பேட்டை வானொலி திடல், ஏ.எப்.டி.,மைதானம், ராமகிருஷ்ண வித்யாலயா மேனிலைப் பள்ளி ஆகிய இடங்களில் பொது மக்களின் தரிசனத்திற்காக நிற்கிறது. மாலை 6.30 மணிக்கு செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேனிலைப்பள்ளியில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்கிறார். மறுநாள் 26 ம்தேதி சங்கர வித்யாலயா மேனிலைப் பள்ளி, ரெட்டியார்பாளையம், மூலக்குளம் வழியாக விழுப்புரம் செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார். அட்டவணை வெளியீடு: முன்னதாக, புதுச்சேரிக்கு விஜயம் தர உள்ள சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு ரத யாத்திரை கால அட்டவனையை புதுச்சேரி ராமகிருஷ்ணா வித்யாலயா தளாளர் கணேசன் வெளியிட, விழாக் குழு இணை செயலாளர் சீனுமோகன்தாஸ் பெற்றுக்கொண்டார். இந் நிகழ்ச்சியில், ராமகிருஷ்ணா சேவா சங்கசெயலாளர் சுவாமி நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.