திண்டுக்கல்: தாடிக்கொம்பு அருகே அகரம் முத்தாலம்மன் கோயிலில் அம்மன் பூஞ்சோலை சென்றடையும் நிகழ்ச்சி நடந்தது. முத்தாலம்மன் கோயில் உற்சவ விழா அக்.,13 ல் சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம், உற்சவ அம்மனுக்கு கண் திறப்பு வைபவம் நடந்தது.பின், அம்மன் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி, கொலு மண்டபத்தை வந்தடைந்தது. இரவு 12 மணி புஷ்ப விமானத்தில் அம்மன் வாணக்காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார். இரவு முழுவதும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. நேற்று பகல் 1.30 மணிக்கு அம்மன் செருகுபட்டை விமானத்தில், எழுந்தருளி, குடகனாறை கடந்து, பூஞ்சோலை சென்றடைந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.