பதிவு செய்த நாள்
01
நவ
2013
10:11
ராமேஸ்வரம் : தனுஷ்கோடி ஜடாமகுட தீர்த்த கோயிலுக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க, வனத்துறை முட்டுக்கட்டை போடுவதால், பக்தர்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ராமாயணத்தில், ராவணனை வதம் செய்ததால், ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தனுஷ்கோடி அருகே உள்ள குளத்தில் ராமர் நீராடி, சிவ பூஜை செய்ததாக, இதிகாசம் கூறுகிறது. இதனால், இதற்கு ஜடாமகுட தீர்த்தம் எனப் பெயரிடப்பட்டது. இங்கு நீராடுபவர்கள் அறியாமை, பாவம் நீங்கி, ஞானம் பெறுவதாக ஐதீகம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான, இத்தீர்த்த கோயில், தனுஷ்கோடி செல்லும் ரோட்டில் இருந்து, ஒரு கி.மீ. தூரத்தில் அடர்ந்த சவுக்கு மரக்காடு நடுவில் உள்ளது. கடந்த 2004ல் நகராட்சி அமைத்த தார் ரோடு வழியாக உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோயிலுக்கு சென்று வந்தனர். காலபோக்கில், ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. கடந்த 4 ஆண்டுகளாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அறநிலைத்துறை குருக்களை நியமித்து, பூஜை, அபிஷேகம் நடத்தாமல் உள்ளது. புனித தீர்த்தத்தின் மகிமை, வரலாறு அழியும் தருவாயில் உள்ளது. நகராட்சி தலைவர் அர்ச்சுனன் கூறியதாவது: ரோட்டை சீரமைக்க, நகராட்சி தயாராக உள்ளது. வனத்துறை முட்டுக்கட்டை போடுகிறது. இதுதொடர்பாக தமிழக முதல்வர், வனத்துறை அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளேன், என்றார். ராமேஸ்வரம் வன அலுவலர் ஞானபழம் கூறியதாவது: ஜடா தீர்த்தம் கோயில் பகுதியை, ரிசர்வ்(அடர்ந்த) காடு என மத்திய அரசு அறிவித்துள்ளது. இங்கு தார், சிமென்ட் சாலை அமைக்கக்கூடாது. கிராவல் சாலை அமைக்கலாம், என்றார்.