முத்துமாரியம்மன் கோவில் பாலாலயம் அனுமதி மறுப்பு; பொதுமக்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2013 10:11
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு பாலாலயம் நடத்த அனுமதி வழங்கிய அறநிலையத் துறையினர், திடீரென்று அனுமதி மறுத்துள்ள சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவில் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. இடிந்துவிழும் தருவாயில் உள்ள மூலஸ்தான கோபுரங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கோவில் எழுப்ப அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக ஊர் கூட்டம் கூடி ஆலோசனை நடத்தியபின் ஊர்மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நிதி உதவியுடன் திருப்பணி வேலைகள் உடனடியாக துவங்கவும் முடிவானது. திருப்பணி வேலைகள் துவங்குவதற்கு முன் பாலாலயம் நடத்த அனுமதி வேண்டி அறநிலையத்துறையிடம் கடந்த, 15 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கப்பட்டது. பஞ்சாங்கத்தை வைத்து நவம்பர், 1ம் தேதியை தேர்வு செய்த அறநிலையத்துறை, அன்றைய தினம் காலை, 10 மணிக்குள் பாலாலயம் நடத்த எழுத்து மூலம் அனுமதி வழங்கியது. இதையடுத்து பாலாலய பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து போஸ்டர்களும் அச்சடித்து ஒட்டியுள்ளனர். பாலாலயம் நடத்துவதற்கான அனுமதியை திடீரென்று ரத்து செய்துள்ள அறநிலையத்துறையினர், வேறொரு தேதியில் பாலாலயம் நடத்த அனுமதி வழங்குவதாக தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக் குழுவினர் மற்றும் கந்தர்வக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பஞ்சாயத்து தலைவர் கவிதா தலைமையில் அக் 30 புதுக்கோட்டையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாலாலயம் நடத்த அனுமதிக்குமாறு முறையிட்டனர். மேலிட உத்தரவு எனக்கூறி அவர்களுடைய வேண்டுகோளை அறநிலையத்துறை ஏற்க மறுத்தனர். திருப்பணிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால் திட்டமிட்ட படி நவ 1 காலை, 10 மணிக்கு பாலாலயம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். தடுக்க முயன்றால் கந்தர்வக்கோட்டையில் பஸ் மறியல், கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.