மூதறிஞர் ராஜாஜி, குறையொன்றுமில்லை மறைமூர்த்திகண்ணா! என்று ஆன்மிக வாழ்வில் தான் பெற்ற பக்குவநிலையை வெளிப்படுத்துகிறார். எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், உடல், மனம், பொருள், அறிவு, ஆரோக்கியம் என்று ஏதாவது ஒருவிதத்தில் குறையிருக்கத்தான் செய்யும். பல் வரிசை சரியில்லை என்றால் மருத்துவரிடம் சென்று சரிபடுத்தலாம். பணத்தட்டுப்பாடு நீங்க சோம்பலை தூக்கியெறிந்து விட்டு, உழைத்து சம்பாதிக்கலாம். மனக்குறையைப் போக்க மனநல மருத்துவரை நாடலாம். அறிவுக்குறை தீர நல்ல அறிஞர்களின் நூல்களை வாசிக்கலாம். இதெல்லாம் நியாயமான குறைகள். ஆனால், நான் அசிங்கமாக இருக்கிறேன்; கருப்பாக இருக்கிறேன் என்றெல்லாம் குறைபடக் கூடாது. திருத்தக் கூடியவற்றைத் திருத்தும் தைரியமும், திருத்த முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் எனக்கு அருள்வாயாக! என்ற கருத்துமிக்க மந்திர வாசகம் ஒன்று உண்டு. இந்த வாசகத்தைப் பின்பற்றினால் குறைகள் காணாமல் ஓடி விடும்.