பதிவு செய்த நாள்
09
நவ
2013
11:11
மதுரை: சபரிமலையில், மண்டல, மகர விளக்கு உற்சவ நாட்களில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம், குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளன. பம்பை முதல் சன்னிதானம் வரை பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, மருத்துவ உதவிகளை மேற்கொள்ள உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சபரிமலையில், 15 ஆக்ஸிஜன் பார்லர்களில், பயிற்சி பெற்றவர்கள் தயாராக இருப்பர். மலையேறும் போது மாரடைப்பு, மூச்சு திணறல் ஏற்படும் பக்தர்களை, மருத்துவ முகாம்களுக்கு கொண்டு செல்ல, தேவையான வசதிகளுடன் தொண்டர்கள் ஆங்காங்கு இருப்பர். தமிழ் மாநில சங்கம் சார்பில் சென்னை, வேலூரில் 4 இடங்கள், திருச்சி, கன்னியாகுமரி, தேனி, வீரபாண்டியில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும். எரிமேலி, அழுதா, பெரியாணபட்டம், பம்பா, நிலக்கல்லிலும் உள்ள முகாம்களில் தொண்டர்கள் தயாராக இருப்பர். மூவாயிரம் பக்தர்கள் சுழற்சி முறையில், இப்பணிகளில் ஈடுபடுவர்.பம்பையில், மதுரை அப்போலோ மருத்துவமனையுடன் சேர்ந்து இலவச மருத்துவ முகாம் நடத்தவும், இருதய நோய் பிரிவு செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் டி.வி.எஸ்., மகேந்திரா நிறுவனத்துடன் இணைந்து, வாகன பரிசோதனை மையம் ஏற்படுத்தப்படும். ஏற்பாடுகளை தமிழ் மாநில தலைவர் விஸ்வநாதன், செயலாளர் ஐயப்பன் செய்து வருகின்றனர்.