பதிவு செய்த நாள்
09
நவ
2013
11:11
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்த, 2,500 பேர், 50 பஸ்களில் நேற்று, திருப்பதி புறப்பட்டு சென்றனர். கிருஷ்ணகிரி அடுத்த, கிட்டம்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், உண்டியலில் பணம் சேர்த்து, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, திருப்பதி செல்வது வழக்கம். பணம் சேர்த்த உண்டியலை, ஊர்வலமாக எடுத்து வந்து, மாரியம்மன் கோவிலில் பூஜை செய்த, 2,500 பேர், பின், 50 பஸ்களில், திருப்பதி புறப்பட்டனர். இதனால் கிட்டம்பட்டி, நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. உண்டியலில் உள்ள பணத்தை, மூன்றாக பிரித்து, ஒரு பங்கை, திருப்பதி உண்டியலிலும், ஒரு பங்கை, தர்ம காரியம் செய்யவும், மற்றொரு பங்கை, தங்கள் செலவுக்கும் எடுத்து கொள்வர். சுற்றுலா முடிந்து வந்த பின், வழக்கம் போல் வீட்டில் உண்டியலை கட்டி, மூன்று ஆண்டுகள் பணம் சேர்ப்பர். இதுகுறித்து, லட்சுமணன் கூறியதாவது: திருப்பதிக்கு செல்வது, மூதாதையர் காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அப்போது மாட்டு வண்டி கட்டி, கோவிலுக்கு செல்வர்; தற்போது, பஸ்சில் செல்கின்றனர். உண்டியலில் குறைந்தது, 5,000 முதல் அதிகபட்சமாக, 1 லட்ச ரூபாய் வரை சேமிக்கப்படுகிறது. பங்காளிகளுக்குள் சண்டை சச்சரவு இருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, அனைவரும் ஒன்றாக சேர்ந்து, கோவிலுக்கு போவது, ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.