பதிவு செய்த நாள்
09
நவ
2013
11:11
திருப்பூர்: பக்தி என்பது வெறும் ஆரவாரமாக இருக்கக்கூடாது. சினிமா பாட்டும், நடனமும் பக்தி இல்லை. அதற்கு ஆண்டவன் வர மாட்டான். பக்தி என்பது பயத்தோடு இருக்க வேண்டும். முருகனிடம் பயபக்தி இருக்க வேண்டும், என ஆன்மிக சொற்பொழிவாளர் ருக்மணி பேசினார். திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில், கந்தர் சஷ்டியை முன்னிட்டு, கந்தபுராண சொற்பொழிவு நடந்து வருகிறது. "வினையும், விளைவும் என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் ருக்மணி பேசியதாவது:வாழ்க்கையில் நல்லதை மட்டுமே செய்பவன் தேவன்; கெட்டதை மட்டுமே செய்பவன் அரக்கன். நல்லது, கெட்டது தெரிந்தும், கெட்டதற்கு துணை போகிறவன் மனிதன். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதால், ஒரு காரியத்தை செய்யும்போது, அவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டும். எல்லாவற்றையும் செய்துவிட்டு, அது கெட்டுப்போனால், இறைவன் மீது பழிபோடுவது மனிதனின் குணமாக உள்ளது.
முருகன் பழமையிலும் பழமையானவன்; முற்றிலும் புதியவனாகவும் உள்ளான். முருகனை புரிந்துகொள்ள முடியாது. ஒழுக்கம், கட்டுப்பாடு, உண்மை பக்தி இல்லாதவனிடம், முருகன் வர மாட்டான். பக்தி உண்மையாக இருக்க வேண்டும். முருக பக்தர்களுக்கு சோதனை அதிகம். நிறைய சோதிப்பான். அதேபோல், பலனும் அதிகமாக கொடுப்பான். புடம்போட்ட சொக்க தங்கமாக பக்தர்களை மாற்றுவான். அவன் பாதத்தை கெட்டியாக பற்றிக் கொள்ள வேண்டும். ஒழுக்கமில்லாதவர்கள், முருகனை பார்க்க முடியாது. முருகா என்ற சொல்லில், "முவில், முகுந்தனான பெருமாள், "ருவில், ருத்ரனான சிவன், "காவில் பிரம்மா என மும்மூர்த்திகளும் அடங்கியுள்ளனர். பெருமாள், மனைவி அலமேலு மங்கையுடனும், சிவன், தனது மனைவி பார்வதியுடனும், பிரம்மன், அவன் நாவில் உள்ள சரஸ்வதியுடனும் முருக பக்தர்களுக்கு அருள்கின்றனர். "ஓம் என்ற சொல்லில், முருகன் ஒலி வடிவமாகவும், விநாயகர் வரிவடிவமாக உள்ளார். முருகா என அழைத்தால் சிவன், பெருமாள், பிரம்மா என மும்மூர்த்திகளையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.பக்தி வெறும் ஆரவாரமாக இருக்கக்கூடாது; சினிமா பாட்டும், நடனமும் பக்தி இல்லை. அதற்கு ஆண்டவன் வர மாட்டான். பக்தி என்பது பயத்தோடு இருக்க வேண்டும். முருகனிடம் பயபக்தி இருக்க வேண்டும். பக்தி என்பது உண்மையான நம்பிக்கை; அதை உணர்ந்து முருகனை வழிபட்டால், நிச்சயம் காப்பாற்றுவான். இவ்வாறு, ருக்மணி பேசினார்.