பதிவு செய்த நாள்
09
நவ
2013
11:11
கோவை: கோவை மருதமலையில், கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன், கந்தர் சஷ்டி உற்சவம் துவங்கியது. இதை தொடர்ந்து தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு யாக பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று மதியம் தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடந்தது. இதில், வீரபாகு குதிரை வாகனத்தில் வந்து தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகியோரிடம் தூது சென்றார். நேற்று மதியம் 3.30 மணிக்கு மேல், முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்காக அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையறிந்த சூரபத்மன் மா மரமாக உருமாறி நின்றார். முருகப்பெருமான், தானே நேரில் வந்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து பானுகோபன், சிங்கமுகாசுரன் வதம், கஜமுகாசுரன் வதங்கள் நடந்தன. பின், சுப்ரமணிய சுவாமிக்கு வெற்றி வாகை மாலை சூடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானைக்கு சாந்தாபிசேகம், பூஜை தீபாராதனை நடந்தது.மருதமலையில் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் திரண்டனர். இன்று (9ம் தேதி) காலை 10.30 க்கு மேல் 12.00 மணிக்குள் இந்திரன் மகள் தெய்வானையை மணம் முடிக்கும் நிகழ்ச்சியான, திருக்கல்யான உற்சவம் நடக்கிறது.