Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மை விளக்கம் பகுதி - 4 உண்மை விளக்கம் பகுதி - 6
முதல் பக்கம் » உண்மை விளக்கம்
உண்மை விளக்கம் பகுதி - 5
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2013
03:11

பசு

நான் யார்?

23. ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
மாறா அருளால் வகுத்துரைத்தீர்  வேறுஆகா
என்னை எனக்கு அறியக் காட்டீர் இவைகண்டேன்
உன்னரிய தேசிகரே உற்று.

பதவுரை

உன்னரிய     எண்ணுதற்கு அரிய பெருமையையுடைய
தேசிகரே     ஆசாரிய மூர்த்தியே,
மாறா அருளால்     அடியேன் மீது கொண்ட நீங்காத பேரருளால்
ஆறாறு தத்துவமும்  முப்பத்தாறு தத்துவங்களின் இயல்புகளையும்
ஆணவமும்     ஆணவ மலத்தின் இயல்பையும்
வல்வினையும்     வலிய கன்ம மலத்தின் இயல்பையும்
வகுத்து உரைத்தீர்  வகைப்படுத்தி விளக்கினீர்.
உற்று     உமது திருவருள் நோக்கம் பெற்று
இவை கண்டேன்  இவற்றின் இயல்பையெல்லாம் உள்ளவாறு உணர்ந்து கொண்டேன்.
(இதுவரை கூறிவந்த தத்துவங்களின் தொழிற்பாடுகள், ஆணவ மலத்தால் விளையும் அறியாமை, கன்ம மலத்தால் விளையும் இன்பத்துன்பங்கள் ஆகியவை எனக்கு உரியன அல்ல என்பதை உணராமல், அவற்றையே என் இயல்புகள் எனத்தவறாகக் கருதி மயங்கினேன்.)
வேறாகா     இவற்றுக்கு வேறாக அறியமாட்டாது இவற்றில் கட்டுண்டு கிடக்கின்ற
என்னை     அடியேனது உண்மையியல்பை
எனக்கு அறியக் காட்டீர்  எனக்கு உணர்த்தியருள்வீராக

பொழிப்புரை

எண்ணுதற்கு அரிய பெருமையையுடைய குரு முதல்வரே! என்னிடத்திற் கொண்ட பேரருளால் முப்பத்தாறு தத்துவங்களின் இயல்புகளையும், ஆணவம் வினை என்ற இருமலங்களின் இயல்புகளையும் வகுத்துச் சொன்னீர்கள். உமது அருள் நோக்கம் பெற்றமையால் இவற்றை உள்ளவாறு உணர்ந்து கொண்டேன். இதுகாறும் இத்தத்துவங்களோடு கூடி இவையே நான் என்று மயங்கியிருந்தேன். ஆணவம், வினை இவற்றின் விளைவுகளாகிய அறியாமையையும் இன்ப துன்பங்களையும் என் இயல்புகள் என்று தவறாகக் கருதியிருந்தேன். இம் மயக்கவுணர்வு நீங்கி நான் யார்? என்பதை உணரும்படி என் உண்மையான இயல்பை எனக்கு உணர்த்தியருள்க. இவ்வாறு மாணாக்கர் வேண்டுகிறார். ஆசிரியர் இதற்குப் பின் வரும் மூன்று செய்யுட்களில் விடையளிக்கின்றார்.

ஆன்மாவின் இயல்பு

24. நன்றா உரைக்கக்கேள் நல்லசித்தின் முன் அசித்து இங்கு
ஒன்றாது சித்துஅசித்தை ஓராது  நின்று இவற்றை
அன்றே பகுத்து அறிவது ஆன்மாவே என்று மறை
குன்றாமல் ஓதும் குறித்து

பதவுரை

நன்றா     (நன்மாணாக்கனே, உன் இயல்பை) தெளிவாக
உரைக்கக் கேள்     யாம் சொல்லக் கேட்பாயாக,
நல்ல சித்தின் முன்  தூய அறிவுப் பொருளாகிய சிவத்தின் முன்
அசித்து     அறிவில்லாதவனாகிய உலகப் பொருள்கள்
இங்கு ஒன்றாது     எதிர்ப்பட்டு விளங்கி நில்லா (ஆதலால்)
சித்து     அச்சிவம்
அசித்தை     தன் முன் விளங்கி நில்லாத அவ்வுலகப் பொருள்களை
ஓராது     சுட்டியறியாது; அவற்றில் தோய்ந்து நுகராது.
அன்றே     அனாதியே
இவற்றை     அறிவில் பொருள்களாகிய இவற்றோடு
நின்று     வேற்றுமையின்றிக் கூடிநின்று நுகர்ந்து
பகுத்தறிவது ஆன்மாவே  (பின், ஆசான் அருளால்) அவற்றைத் தனக்கு வேறு எனப்பகுத்து அறிந்து, அவற்றின் தொடர்பிலிருந்து நீங்கும் அறிவுப் பொருளாயிருப்பது ஆன்மாவேயாகும்.
மறை     இவ்வாறு வேத ஆகமங்கள்
குன்றாமல்     ஐயத்திற்கு இடமில்லாமல்
குறித்து ஓதும்     விளக்கிக் கூறும்.

பொழிப்புரை

ஆன்மாவின் இயல்பை உணர்த்துகின்றோம் நன்றாகக் கேள். என்றும் மாறாத தூய அறிவாய் இருப்பது சிவம். அதன்முன் அறிவில்லாத உலகப் பொருள்கள் எதிர்ப்பட்டு நில்லா. ஆதலால் தூய அறிவாகிய சிவம் அப்பொருள்களைச் சுட்டியறிவதுமில்லை; அனுபவிப்பதுமில்லை. இனி, அறிவில்லாத உலகப் பொருள்களைச் சுட்டியறிந்து அவற்றில் அழுந்தி, அவை வேறு தான் வேறு என்பதை அறியாமல் அவற்றோடு ஒற்றுமைப்பட்டு நின்று, பின் நல்லாசிரியரின் உபதேசத்தால் அவற்றை தனக்கு வேறு எனப் பகுத்தறிந்து அவற்றின் தொடர்பிலிருந்து நீங்கும் அறிவுப் பொருளாய் இருப்பது ஆன்மாவே ஆகும். இவ்வாறு ஆகமங்கள் விளக்கிச் சொல்லும்.

விளக்கம்

உலகத்தை அறிந்து நுகர்வது ஆன்மாவே

சடமாகிய உலகப் பொருள்கள் அனைத்தும் பகுதிகளை உடைய செயப்படுபொருள்களாய் உள்ளன. அவை பயன்படு பொருள்களாய் நுகரப்படும் பொருள்களாய் உள்ளன என்பது கண்கூடு. கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும், உற்றும் அவை நுகரப்படுகின்றன. அற்பமான தலைமுடியும் கூட நுகரப்படு பொருளாய் உள்ளது என்றால் பிற பொருள்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? அழகான கட்டில் ஒன்று. அதன் கால்கள் நன்றாகக் கடையப்பெற்று விளங்குகின்றன. அக்கட்டிலில் சிற்ப வேலைப்பாடுகள் கண்ணைக் கவர்கின்றன. மெல்லிய மெத்தை விரிப்பும் சித்திர வேலைப்பாடுள்ள தலையணைகளும் அக்கட்டிலில் திகழ்கின்றன. இப்படிப்பட்ட பல பகுதிகளை இணைத்து நேர்த்தியாகச் செய்யப்பெற்ற கட்டிலைக் காணும் பொழுது இக்கட்டில் ஒருவருடைய பயன்பாட்டிற்காகச் செய்யப்பட்டது எனவும், இதனைப் பயன்படுத்துகிற ஒருவர் இருக்கிறார் எனவும் எளிதில் ஊகித்தறியலாம் தானே. அதுபோல உலகிற் காணப்படும் சடப்பொருள்கள் யாவும் ஆக்கப்படு பொருள்களாய், நுகர்ச்சிக்குரிய பொருள்களாய் உள்ளன. எனவே இவற்றை அறிந்து நுகர்கின்ற, இவற்றால் பயன்கொள்ளுகின்ற அறிவுடைய பொருள் இருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. அவ்வறிவுப் பொருள் எது?

அறிவுப் பொருள்கள் இரண்டு உள்ளன என்று சைவ சித்தாந்தம் கொள்ளும். ஒன்று முற்றறிவுடைய சிவம். மற்றொன்று, சிற்றறிவுடைய ஆன்மா. இவ்இரண்டனுள் உலகத்தை அறிந்து நுகர்வது எது? ஒன்றை அறிந்து நுகர வேண்டுமாயின் அப்பொருள் எதிரில் வேறாக விளங்கி நிற்றல் வேண்டும். அப்பொழுது தான் அதனை இன்னது என்று சுட்டியறிதலும். அதனை அனுபவித்தலும் இயலும். இறைவனுக்குச் சுட்டறிவு என்பது இல்லை சுட்டியறிவதற்கு அவனுக்கு எதிரில், அவனுக்கு வேறாக எப்பொருளும் இல்லையே. எல்லாப் பொருள்களும் அவனுக்குள்ளாக அல்லவா உள்ளன. அவனது பெருநிறைவுக்குள் அடங்கியல்லவா உள்ளன. அவனது நிறைவுக்கு அப்பால் அவனுக்கு வேறாய் ஏதும் இல்லாதபோது அவன் எப்படிச் சுட்டியறிய முடியும்? அவன் தன்னுள் அடங்கிய யாவற்றையும் ஒரே நேரத்தில் ஒன்றாக அறிந்து நிற்பானேயன்றி இது இன்னது என்று தனித் தனியாகச் சுட்டியறிய வேண்டிய நிலை அவனுக்கு இல்லை.

எல்லாவற்றையும் அறிந்தாங்கு அறிந்து நிற்கும் அவனுக்குச் சுட்டறிவு இல்லை. மேலும் அவனது அறிவு எதிலும் தோயாது நிற்கும் சுதந்திர அறிவாகும். பிறவற்றின் வயப்படாது தன்வயத்தனாய் நிற்றல் அவனது இயல்பாகும். எனவே பொருள்களின் வயப்பட்டு அவற்றில் அழுந்தி நிற்றலாகிய அனுபவம் என்பது அவனுக்கு இல்லை. எனவே இறைவன் உலகத்தை அறிந்து நுகர மாட்டான் என்பது தெளிவாகிறது. உலகம் நுகர்ச்சிப் பொருள் என்பதை அறிந்தோம். இறைவன் அதனை நுகர மாட்டான் என்பதையும் அறிந்தோம். எனவே உலகத்தை நுகர்வதும், அதனால் பயன்கொள்வதும் ஆகிய பொருள் ஆன்மாவே என்பது தானே விளங்கும்.

அது அதுவாய் ஒன்றி நிற்பது ஆன்மா

ஆன்மாவினது அறிவு தன்வயமில்லாதது. எப்பொருளைச் சார்கிறதோ அப்பொருளின் வசப்படுவது. அப்பொருளோடு ஒன்றி அதுவே தானாய் நிற்பது. இதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கலாம். ஒருவனுக்குப் பெருஞ் செல்வம் வந்து சேர்கிறது. அவன் அதனைத் தனக்கு வேறானது என்று கருதவில்லை. அது இடையில் வந்தது; இடையிலேயே நீங்கிவிடக் கூடியது என்றும் எண்ணவில்லை. அவன் அதனையே தன்னுயிராகக் கருதுகிறான். எப்பொழுதும் அதனைப் பற்றிய நினைப்புத்தான். அதனை எப்படிப் பாதுகாப்பது? என்ற கவலைதான். ஒரு சமயம் வருமான வரித்துறை அதிகாரிகள் அவன் வீட்டைச் சோதனையிட்டுக் கணக்கில் வாராதவற்றையெல்லாம் கைப்பற்றுகிறார்கள். அவன் கலங்குகிறான்; மயங்குகிறான். உயிரே போனது போல உணர்விழந்து நிற்கிறான். அவனது உணர்வு செல்வத்தோடு ஒன்றி நின்ற காரணத்தாலேயே அச்செல்வம் போனதும் அவனும் உணர்விழந்த நிலையை அடைகிறான். இவ்வாறு அசத்தாகிய உலகப் பொருள்களோடு ஒன்றி அவையே தானாய் நிற்கிறது ஆன்மா.

சிவத்தோடு ஒன்றி நிற்றலே இயற்கை

அறிவுப் பொருளாகிய ஆன்மா தன்னினமாகிய தூய அறிவுப் பொருளாகிய இறைவனோடு ஒன்றி நிற்பதே இயற்கையாகும். வேற்றினமாகிய அறிவற்ற உலகப் பொருள்களோடு ஒன்றி நிற்பது அதற்குச் செயற்கையே ஆகும். இவ்வுண்மையை ஞானாசிரியர் உணர்த்தும் போதுதான் ஆன்மா அசத்தாகிய உலகச் சார்பைத் தனக்கு வேறு எனப் பகுத்தறிந்து, அதனின் நீங்கிச் சத்தாகிய சிவத்தோடு கூடி இன்புறும். இச்செய்யுளின் கருத்தைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். உலகம், சிவம் என்ற இருபொருள்களுள் உலகம் அறிவற்றது. எனவே அது சிவத்தை அறிந்து நுகரமாட்டாது. சிவம் எதையும் சுட்டி அறியாது. எனவே அதுவும் உலகத்தைச் சுட்டியறிந்து நுகரமாட்டாது. இவ்வாறு உலகும் சிவமும் ஆகிய இரண்டும் தம்முள் ஒன்றையொன்று அறிந்து நுகரா. ஆதலின், இவ்விரண்டனையும் அறிந்து நுகர்தற்கு உரிமையுடைய மூன்றாவது பொருள் உண்டு என்பது பெறப்படும். அதுவே ஆன்மா என்பது. ஆன்மா உலகை அறிந்து நுகர்ந்து அதன் வயப்பட்டு நிற்கும். இது கட்டு நிலை. பின் திருவருள் துணையால் இறைவனை உணர்ந்து இறையின்பத்தை நுகர்ந்து அதன் வயப்பட்டிருக்கும். இது வீட்டு நிலை.

தத்துவங்கள் ஆன்மா அல்ல

மாயா காரியங்களாகிய முப்பத்தாறு தத்துவங்கள் நாம் அறிந்தவை அத்தத்துவங்களே புறக் கருவிகளாயும் அகக் கருவிகளாயும் அமைந்துள்ளன. கண், காது முதலிய புறக்கருவிகளும் மனம், புத்தி முதலிய அகக் கருவிகளும் ஆகிய இவையே உலக அறிவைத் தருகின்றன. கண் கண்டறிகிறது. காது கேட்டறிகிறது. மனம் ஐயுறுகிறது. புத்தி நிச்சயிக்கிறது. இவ்வாறு தத்துவங்களே அறிவனவாய் இருத்தலால் அவற்றையே உயிர் என்று கொள்ளலாமோ என்னும் ஐயம் தோன்றலாம். அவ்ஐயத்தை நீக்கித் தத்துவங்கள் ஆன்மா அல்ல என்றும், அத்தத்துவங்களோடு ஒற்றுமைப்பட்டு நின்று அறிந்து வருகிற ஆன்மா என்ற தனிப் பொருள் உண்டு என்றும் வலியுறுத்துதற்கு எழுந்தவை இச்செய்யுளும் அடுத்த செய்யுளுமாகும்.

25. தத்துவங்கள் ஆறாறும் தம்மைத்தாம் என்று அறியா
எத்தன்மை என்னில் இயம்பக்கேள்  சுத்தமாம்
ஆறு சுவையும் அறியாவே தம்மைத்தாம்
கூறில் அவை இவை போல் கொள்

பதவுரை

தத்துவங்கள் ஆறு ஆறும்     தத்துவங்கள் முப்பத்தாறும்
தம்மைத்தாம் என்று அறியா     தம்மியல்பைத் தாம் அறியமாட்டா. அஃதாவது, கண் தன்னை நோக்கி நான் கண்; நான் பார்க்கிறேன் என்று தன்னை அறியமாட்டாது. பிற கருவிகளும் அவ்வாறேயாம்.
எத்தன்மை என்னில்     தத்துவங்கள் தம்மை அறியாத தன்மை எது போன்றது என்றால்
இயம்பக் கேள்         ஓர் எடுத்துக்காட்டுக் கூறுவோம். கேட்பாயாக.
சுத்தமாம் ஆறு சுவையும்     இனிப்பு, கைப்பு முதலிய ஆறு சுவையையுடைய பொருள்கள்
தம்மைத் தாம் அறியா     யான் இனிப்பாக இருக்கிறேன், யான் கைப்பாக இருக்கிறேன் என்றாற் போலத் தம்மை நோக்கித் தம் இயல்பை அறியா.
கூறில்         சொல்வதாயின்
அவை இவை போல் கொள்     இவை போன்றனவே அத்தத்துவங்களும் என உணர்ந்து கொள்.

பொழிப்புரை

தத்துவங்கள் ஆகிய கருவிகள் அறிவுள்ளனவாகத் தோன்றினாலும் தம்மியல்பைத் தாம் அறிய மாட்டா. நான் அறிகிறேன் என்ற தன்னை நோக்கிய அறிவு அவற்றிற்கு இல்லை. கண் காணும் ஆனால் நான் காண்கிறேன் என்று அது தன்னை நோக்கி அறியாது. பிற கருவிகளும் இவ்வாறே. தன்னை நோக்கி அறியாத தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறுவோம். கேள்.

உண்ணும் உணவில் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு என அறுவகையான சுவைகள் உண்டு. உணவு தன்னிடமுள்ள இச்சுவைகளைத் தான் அறியாது. உணவிலே சில சமயம் உப்புக் கூடிவிடும். அப்போது அந்த உணவு நான் உப்பாக இருக்கிறேன் என்று தன்னை நோக்கி அறியாது. அதுபோலத் தத்துவங்களும் தம்மைத்தாம் அறியா.

விளக்கம்

எது தன்னை நோக்கித் தன்னியல்பையும் அறியக் கூடியதாக உள்ளதோ அதுவே ஆன்மாவாக இருக்க முடியும். தத்துவங்கள் தம்மை நோக்கித் தாம் என்று அறியாத இயல்பினவாகும். ஆதலால் அவை ஆன்மா அல்ல என்பது தெளிவாகும்.

தத்துவங்களை அறிவது உயிர்

26. ஆறு சுவையும் அருந்தி அவைதம்மை
வேறுஒருவன் கூறியிடும் மேன்மைபோல்  ஆறாறும்
ஒன்றுஒன்றா நாடி உணர்ந்து ஓதில் அதில் உற்று அறிவாய்
நின்ற பொருள் தானே காண் நீ

பதவுரை

ஆறு சுவையும்     ஆறு சுவையுடைய பொருள்களை
வேறொருவன்     அவற்றுக்கு வேறாக உள்ள ஒருவன்
அருந்தி     சுவைத்து
அவை தம்மை     அச் சுவைகளை
கூறியிடும்     இஃது இன்ன சுவை, இஃது இன்ன சுவை என்று அறிந்து கூறுகிற
மேன்மை போல்  தன்மை போல
ஆறு ஆறும்     தத்துவங்கள் முப்பத்தாறின் இயல்பையும்
ஒன்று ஒன்றா     (யாம் காட்ட) ஒவ்வொன்றாக
நாடி உணர்ந்து     கண்டு உணர்ந்து, இவை கண்டேன் எனத் தன்னை நோக்கி உணர்ந்தும்,
அதில் உற்று     அத்தத்துவக் கூட்டத்தில் பொருந்தி அத்தத்துவங்களோடு ஒற்றுமைப் பட்டு நின்று
அறிவாய் நின்ற பொருள்தான்  அவற்றால் அறிவு விளங்கியும் வரும் அறிவுப் பொருள்தான்
நீ     உயிராகிய நீ என
காண்     உன்னை உள்நோக்கி உணர்ந்து கொள்

பொழிப்புரை

உணவு தன் சுவையைத் தான் அறியாது. உணவை நுகர்கின்ற வேறு ஒருவனே அதன் சுவையை அறிந்து கூறுகின்றான். உணவிலே காரம் சற்றுக் கூடிவிட்டது என்றோ, உப்புச் சிறிது குறைவாக உள்ளது என்றோ அறிந்து பிறருக்கும் கூறுகின்றான். யான் சுவைத்துப் பார்த்தேன் என்று தன்னை நோக்கியும் உணர்ந்து கூறுகின்றான்.

அதுபோல முப்பத்தாறு தத்துவங்களும் தம் இயல்பைத் தாம் அறியமாட்டா. அவற்றிற்கு வேறாக இருக்கின்ற அறிவுப் பொருளாகிய நீயே அத்தத்துவங்கள் ஒவ்வொன்றின் இயல்பையும் (கண் காணும், செவி கேட்கும், மனம் பற்றும், புத்தி நிச்சயிக்கும் என்று இவ்வாறு) தனித் தனியாகக் கண்டு உணர்ந்து சொல்லுகின்றாய். இவை கண்டேன் என்ற தன்னோக்கு உணர்வும் நீ உடையாய். இவ்வாறு உன்னை உள்நோக்கி உணர்ந்துகொள்.

விளக்கம்

இவ்விரண்டு செய்யுட்களாலும் உயிரின் இயல்பைத் தத்துவங்களினின்றும் வேறு பிரித்து உணர்த்தினார் ஆசிரியர்.

 
மேலும் உண்மை விளக்கம் »
முன்னுரைசைவ சித்தாந்தம் என்றும் அழியா உண்மைப் பொருள்களாக மூன்று பொருள்களைக் கொள்ளும். ... மேலும்
 
சுத்த நிலைஇத்தடுமாற்றம் தீர்ந்து ஒரு நிலைப்பட்ட தன்மையை எய்த வேண்டுமாயின், உயிர் திருவருளைச் சேர்தல் ... மேலும்
 
தத்துவங்கள் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுதல்தத்துவம் என்ற சொல்லுக்கு கருவி என்பது பொருள். ... மேலும்
 
இனி, கன்மேந்திரியங்கள்14. கண்ணுதல்நூல் ஓதியிடும் கன்மேந் திரியங்கள்எண்ணும் வச னாதிக்கு இடமாக ... மேலும்
 
பதிஇறைவன் வேறாய் நிற்றல்27. குன்றா அருளாலே கூறினீர் என்வடிவுபொன்றாத நும் உருவம் போதியீர்  நின்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar