பதிவு செய்த நாள்
11
நவ
2013
10:11
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் ராஜராஜன் சதய விழா விமரிசையாக நடத்தப்படும். நடப்பாண்டு சதய விழா, 2 நாட்கள் நடக்கிறது. முதல்நாளான நேற்றுக்காலை, 10 மணிக்கு, பெரியகோவில் வளாகத்தில் சதய விழா துவங்கியது. இதில், கலெக்டர் சுப்பையன் தலைமை வகித்து பேசியதாவது:உலக அளவிலான வரலாற்றில் மன்னர்கள், மாமன்னர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள், ஆட்சிக்காலத்தில் தத்தமது சிறப்புகளை, நிர்வாக முறைகளை எதிர்கால சந்ததியினருக்கு சேர்க்க என்ன வழிமுறைகளை கையாண்டுள்ளனர்? என்பது சிந்தனைக்குரியது. எழுத்து வடிவில், கல்வெட்டுகளில் ஆட்சி சிறப்புகளை அழியாதவாறு பொறித்து வைக்கலாம். இவ்விஷயத்தில், சோழமன்னன் ராஜராஜன் மட்டுமே சரியான வகையில், வரலாற்று தகவல்களை ஆவணப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் திறமையான ஆட்சி செலுத்தியுள்ளார்.அரசியல் நிர்வாகம், ஆட்சி முறையில் உதாரண புருஷராக மாமன்னன் ராஜராஜன் திகழ்கிறார். இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆட்சி நிர்வாகத்தில் கொண்டு வந்த முறைகளை, மேலும் பட்டை தீட்டி தற்கால ஆட்சியமைப்பில் பயன்படுத்துகிறோம். ஆனால் மேல்நாடுகளில் வெறும், 30, 40 ஆண்டு வரலாற்றை ஆவணப்படுத்தி வைத்து, அதையே பெரிய சாதனையாக கருதுகின்றனர்.ஆனால் நமது நாட்டில் மாமன்னன் ராஜராஜன், ஆயிரத்து, 28 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சம்பவங்களை கல்வெட்டு வடிவிலும், கலை வடிவிலும், பெரியகோவில் வடிவிலும் விட்டு சென்றுள்ளார். அதனால் தஞ்சை நகரில் நடக்கும் விழா, பெரியகோவில் விழா என இதை கருதாமல், பெரிய மாமன்னனை போற்றும் தஞ்சை மாவட்ட விழா, மாநில அரசு விழா, நாட்டின் விழா எனும் அளவில் பெரிதாக நடத்த வேண்டும். இதற்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.இதில் சதய விழாக்குழு தலைவர் தங்கமுத்து, அரசு வக்கீல் தங்கப்பன், அரசு குற்றவியல் வக்கீல் குப்புசாமி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.