பதிவு செய்த நாள்
12
நவ
2013
10:11
அவிநாசி: அவிநாசி வட்டார கோவில்களில் ஏற்பட்டு வரும் திருட்டு சம்பவங்கள், பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. திருட்டை தடுக்க உரியநடவடிக்கை எடுக்குமாறு, போலீசாருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவிநாசி வட்டார கிராமங்களில், சிறியதும், பெரியதுமாக நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. கிராமப்புற கோவில்களில், செக்யூரிட்டி உள்ளிட்ட போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால், தங்கள் கைவரிசையை திருடர்கள் காட்டி வருகின்றனர். நடப்பாண்டில், உப்பிலிபாளையம் ஊராட்சியில் மாகாளியம்மன் கோவில், விநாயகர் கோவில், முருகம்பாளையம் அம்மன் கோவில், தெக்கலூர் ஊராட்சி செங்காளிபாளையத்தில் கருப்பராயன் கோவில், சூரிபாளையத்தில் அய்யன் கோவில், நம்பியாம்பாளையம் ஊராட்சி, ஆலாங்காட்டுப் பாளையத்தில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், அருகிலுள்ள கருப்பராயன் கோவில் ஆகியவற்றில் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. மேலும், திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தேவராயன்பாளையம் மற்றும் ராக்கியாபாளையத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவில்களிலும் திருட்டு சம்பவம் நடந்தது. மேற்கண்ட கோவில்களில், வெள்ளி கவசங்கள், வெள்ளி வேல், உண்டியலை உடைத்து பணம் திருட்டு, பித்தளை பொருட்கள் என லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய திருடர்களை பிடிக்க, அவிநாசி, அனுப்பர் பாளையம் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். இருப்பினும், யாரும் சிக்கவில்லை. மாறாக, கிராமப்புற கோவில்களில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க வேண்டாம் என்று போலீசார், கிராமப்புற கோவில் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் வினியோகித்துள்ளனர். தற்போது, நாதம்பாளையம் மாரியம்மன் கோவிலில், இரு நாட்களுக்கு முன் திருட்டு நடந்தது. அதில், 4 கிலோ வெள்ளி பொருட்களும், சுண்டக்காம்பாளையம் கருப்பராயன் கோவிலில் ஒரு வெள்ளி வேலும் திருடுப்போயின. போலீசாரின் இரவு ரோந்து, கிராம மக்களின் நடமாட்டத்தையும் தாண்டி, கிராமப்புற கோவில்களில் தொடர்ந்து திருட்டு நடப்பது, பக்தர்களை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், கிராமம்தோறும், போலீஸ் நண்பர்கள் குழு அமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் கண்காணிக் கப்பட்டது. அடுத்தடுத்து அதிகாரிகள் மாறியதால், அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. டி.எஸ்.பி., ரங்கசாமியிடம், கேட்ட போது, ""சில மாதங்களுக்கு முன்னரே, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற கோவில்களில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். பெரிய நாதம்பாளையம் கோவிலில் திருவிழாவுக்காக பயன்படுத்தப்பட்ட வெள்ளி பொருட்களை மீண்டும் நிர்வாகி வீட்டில் வைக்க மறந்து விட்டனர். ""அவிநாசி போலீஸ் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை அளித்து வருகிறோம். அன்னூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் திருடிய கும்பல், இங்கேயும் திருடியுள்ளதை சில தடயங்கள் மூலம் கண்டறிந்துள்ளோம்; திருடர்களை தேடி வருகிறோம். நாதம்பாளையம் கோவில் திருட்டையடுத்து, இரவுநேர ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு "பீட் பார்க்கும் போலீசார், கண்டிப்பாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவிலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம், என்றார்.