தீபங்களை வணங்கும் தீபத்திருவிழா வரும் 17ம் தேதி கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2013 11:11
நாகர்கோவில்: தீபங்களை வணங்கும் திருதிருநாள் நாடெங்கும் வரும் 17ம் தேதி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஐதீக முறைப்படி கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்றும் அகல் விளக்குகள் தற்போதே நகர பகுதிகளில் விற்பனைக்கு குவிந்துள்ளது. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும் விழா. இந்த விழாவை ஒட்டி அனைத்து வீடுகளிலும், நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் தீபசுடர் ஏற்றி மக்கள் இறைவனை வழிபடுவர். சிவபெருமான் கார்த்திகை நட்சத்திரத்தில் ஜோதியாக காணப்படுவேன் என கூறினார். அத்துடன் ஜோதியை கண்டவர் எவராக இருந்தாலும் அவர் தம் இடையூறுகள் அனைத்தும் நீங்கும் எனவும் கூறினார். இதனை உணர்த்தும் வகையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. தீபம் ஏற்றி வழிபடும் கார்த்திகை திருநாளில் ஜோதி வடிவில் சிவபெருமானை காணலாம் என ஐதீகம் கூறுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் இறைவனை கோயில்களில் ஜோதி வடிவமாக காணும் விதத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது பனை ஒலைகளை வெட்டி ஏராளமானோர் திரண்டு திருவிழா போன்று கொழுத்தி மகிழ்வர். இந்த ஆண்டு வரும் 17ம் தேதி இந்த விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக, தீப சுடர் ஏந்தும் கிளியாஞ்சட்டிகள் கடந்த காலங்களில் அணைவரின் வீடுகளிலும் காணப்படும். ஐதீக முறைப்படி இந்த மண் சட்டிகளில் தான் எண்ணை ஊற்றி திரி வைத்து வீடுகளுக்கு முன்பு வைத்து இறைவனை வழிபடுவர். மெழுகுவர்த்தி வருகையால் இந்த மண்சட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போனது. தற்போது ஐதீக முறைப்படி மண் சட்டிகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதால், இதற்கு மீண்டும் மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கார்த்திகை தீப திருவிழா நெருங்கி வரும் நிலையில் கார்த்திகை அகல் விளக்குகள் பல்வேறு வடிவங்களான ஒன்று முதல் 9 அடுக்குகள் கொண்ட விளக்குகளும், யானை, குதிரை வடிவில் விளக்குகளும், சிறுதிரி விளக்குகளும் கிராமம், மற்றும் நகர பகுதிகளில் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. காரணம் ஐதிக முறைப்படி இந்த கிளியாஞ்சட்டி விளக்குகளில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதால், மக்கள் விளக்குகளை வாங்கி செல்கின்றனர். தீபங்களின் சுடரில் தங்களின் வாழ்வை பிரகாசிக்கும் விதமாக வீடுகளில் பக்தர்கள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்காக தற்போதே தயாராகி வருகின்றனர்.