Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவஞானபோதம் பகுதி-21
முதல் பக்கம் » சிவஞானபோதம்
சிவஞானபோதம் பகுதி-22
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
03:11

கலைச்சொல் விளக்கம்

அசத்து : சைவ சித்தாந்தத்தில் அசத்து என்பதற்கு நிலையில்லாதது; மாறுதல் அடைவது என்பது பொருள். இப்பொருள் தரும் தமிழ்ச் சொல் பொய் என்பது.

முப்பொருள்களுள் பதியாகிய கடவுட் பொருள் என்றும் மாறுதல் அடையாத செம்பொருள் ஆகும்.

பசுவாகிய உயிர் பாசத்தோடு கூடி அறிவு மறைந்தும் தோன்றியும் மாறுதல் அடைவதாய், அசத்து என்று சொல்லும் படியாக இருப்பினும், முத்திநிலையில் பதியைச் சேர்ந்த பின் அத்தகைய மாற்றம் இன்றி ஒரு நிலையாய் நிற்றலால் உயிரை அசத்து எனக் கூறுதல் இல்லை.

பாசப் பொருள்களே மாறுதல் அடைவனாய் நிற்றலின் அவையே அசத்து எனப்படுகின்றன. அசத்து அறிவற்ற சடமாயும் இருக்கும். அவ்வகையில் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றும் அசத்து ஆகும். மாயையின் காரியமாகிய உலகமும் உலகப் பொருள்களும் அசத்து ஆதல் வெளிப்படை.

அத்துவா : மாயையின் காரியங்கள் ஆறு பகுதியாய் நின்று உயிர்களோடு தொடர்பு கொள்கின்றன. அவை மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்பன.

மந்திரம் முதலிய மூன்றும் சொல்லுலகம் (பார்க்க : வாக்கு) எனப்படும். புவனம், தத்துவம், கலை என்னும் மூன்றும் பொருளுலகம் எனப்படும். சொல்லும் பொருளுமாகிய இவற்றாலேயே நமக்கு வினைகள் உண்டாகின்றன.

இந்த ஆறின் இயல்பையும் நன்கு உணர்ந்து, இவை நமக்கு வேறானவை எனக் கண்டு தெளிந்து, முறையே ஒவ்வொன்றாக நீக்கிச் சென்றால் இறைவனை அடையலாம்.

அத்துவா என்னும் சொல்லுக்குப் படிவழி என்பது பொருள். இந்த ஆறும் இறைவனை அடைவதற்குப் படி வழி போன்று இருத்தலால் அத்துவாக்கள் எனப்படுகின்றன.

அசத்துவிதம் : சைவ சித்தாந்தத்தில் அத்துவிதம் என்பது இறைவனுக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பை-உறவு நிலையைக் குறிப்பதாகும். உலகு என்பது அறிவுள்ள உயிர்களையும் அறிவற்ற ஏனைப் பொருள்களையும் குறிக்கும்.

இரண்டு பொருள்கள் ஒரு வகையால் ஒன்று என்று சொல்லும்படி ஒற்றுமைப்பட்டு நிற்பது அத்துவித சம்பந்தம் எனப்படும்.

இறைவனும் உலகும் பொருளால் இரண்டு ஆயினும் உலகத்தோடு ஒன்றுபட்டுப் பிரிப்பின்றி இயைந்து நிற்கின்றான். இவ்வாறு இறைவன் உலகத்தோடு கொண்டுள்ள பிரிப்பறியாத சம்பந்தமே அத்துவிதம் எனப்படுகிறது. அது மூவகையினதாகக் கூறப்படும். அவை ஒன்றாதல், வேறாதல், உடனாதல் என்பன.

இறைவன் உலகத்தோடு கலந்து, தான் வேறு காணப்படாமல் உலகமாகவே இருக்கிறான். உயிர் எவ்வாறு உடலிற் கலந்து வேறாய் நில்லாமல் உடலே தான் என்னும்படி நிற்கிறதோ அவ்வாறே இறைவனும் உலகமே தான் என்னும்படி கலந்து நிற்கின்றான். இந்நிலை கலப்பினால் ஒன்றாதல் எனப்படும்.

இறைவன் உலகமே என்னும்படி அதனோடு ஒன்றாயிருப்பினும், பொருள் தன்மையால் அவன் வேறானவனே. அவன் உலகத்தோடு ஒன்றுபட்டு நின்றாலும் அவன் என்றும் அவனே; உலகம் என்றும் உலகமே. பொருள் தன்மையால் அவன் என்றும் வேறாகவே நிற்பான். சூரிய ஒளியையும் கண்ணொளியையும் இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்வர்.

சூரிய ஒளியோடு கண்ணொளி கலந்து நின்றே எதனையும் காணவல்லது. இவ்விரண்டு ஒளிகளும் கலந்து நின்றாலும் இவை ஒன்றாகி விடுவதில்லை. அக்கலப்பு நிலையி<லும், சூரிய ஒளி காட்டுகின்ற ஒளியாய் வேறாகியே நிற்கும்; கண்ணொளி காணும் ஒளியாய் வேறாகியே நிற்கும். அதுபோல இறைவன் உயிர்களோடு கலப்பினால் ஒன்றாகி நிற்கும் அந்நிலையிலும் வேறாகி நின்று அறிவிக்கின்றான்; உயிர்கள் வேறாய் நின்று அறிகின்றன. இவ்வுறவு நிலை வேறாதல் எனப்படும்.

ஒன்றாதல், வேறாதல் ஆகிய இவற்றோடு உடனாதல் என்னும் உறவு நிலையையும் சைவ சித்தாந்தம் சிறப்பாக வலியுறுத்துகிறது. இதனை விளக்குதற்குக் கண்ணொளியையும் உயிரினது அறிவையும் உவமையாகக் கூறுவர்.

கண் ஓர் பொருளைக் காணும்போது, உள்நிற்கின்ற உயிரினது அறிவும் அக்கண்ணொளியோடு உடன் நின்று அதனை அறிகின்றது. உயிரறிவு உடன் இருந்து காணவில்லையெனில் கண் எப்பொருளையும் காணமாட்டாது. அதுபோல இறைவன் வேறாக இருந்து அறிவிப்பதோடு உடனாகவும் இருந்து உயிர்கள் அறிவனவற்றையெல்லாம் தானும் அறிகின்றான். அவ்வாறு அவன் உடன்நின்று அறியவில்லை என்றால் உயிர்களுக்கு அறிவோ அனுபவமோ நிகழாதாம். எனவே உயிர்களின் பொருட்டு இறைவனும் உடனிருந்து காணுகின்றான்; அறிகின்றான். இவ்வுறவு நிலை உடனாதல் எனப்படும்.

மேற்கூறிய ஒன்றாதல், வேறாதல், உடனாதல் ஆகிய மூன்றும் சேர்ந்ததே அத்துவித நிலையாகும். இதனால் இறைவன் உயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நின்று அவற்றைச் செயற்படுத்துவான் என்பது புலனாகும்.

பிரிப்பின்மை, வேறின்மை, அந்நியமின்மை, அநந்நியம் என்பவை அத்துவித நிலையைக் குறிக்க வழங்கும் வேறு சொற்களாகும்.

அவத்தை : அவத்தை என்பதற்கு நிலை என்பது பொருள். உயிர்கள் கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூன்று நிலைகளை உடையனவாகும். அவை காரண அவத்தைகள் எனப்படும்.

1) கேவலநிலை : உயிரின் முதலாவது நிலை இது. இந்நிலையில் அறிவுப் பொருளாகிய உயிர் அறிவென்பது சிறிதும் இன்றிக் கிடக்கும். தானொரு பொருள் எனத் தன்னிருப்பையும் கூட உயிர் உணர்வதில்லை. இதனை இருள் நிலை என்பர். ஆணவ மலம் என்பதாகிய அழுக்கு இயற்கையாகவே உயிரைப் பற்றியிருப்பதனால் அதனால் மூடப்பெற்ற உயிருக்கு இத்தகைய முழு அறியாமை நிலை உண்டாயிற்று.

மாயையின் காரியங்களாகிய உடல், மனம் முதலிய கருவிகளைப் பெறாமல், அக்கருவிகளைக் கொண்டு வினைகளைச் செய்தலும் அவற்றின் பயன்களை நுகர்தலும் என்பது இல்லாமல், சுருக்கமாகச் சொன்னால் மாயை கன்மம் ஆகியவற்றோடு கூடாமல் உயிர் ஆணவத்தோடு மட்டும் கூடித் தனிமையில் கிடக்கின்ற நிலையாதலின் இத்தனிநிலை கேவல நிலை எனப்பட்டது. கேவலம் என்பதற்குத் தனிமை என்பது பொருள்.

2) சகலநிலை : கேவல நிலையில் முழு மூடமாய், ஆணவ இருளில் அழுந்திக் கிடந்த உயிர்களுக்கு இறைவன் மாயையிலிருந்து உடம்பும், உடம்பில் உள்ள கண் முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய உட்கருவிகளும், உலகும், உயிர் அனுபவித்தற்குரிய நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய நான்கையும் படைத்துக்கொடுக்கிறான். இவற்றை முறையே தனு, கரணம், புவனம், போகம் என்பர்.

மாயையின் காரியங்களாகிய இவை உயிரின் அறிவையும் செயலையும் விளக்கம் செய்யக்கூடியவை, இவற்றின் துணையினால் உயிர்கள் ஆணவமல மறைப்புச் சிறிது நீங்கப் பெற்று, அதற்கேற்பச் சிறிதளவு அறிவும் செயலும் விளங்கி உலக வாழ்க்கையை மேற்கொள்ளும்.

வாழுங்காலத்தில் நல்வினை தீவினைகளைச் செய்தும், முன்செய்த வினைகளுக்கேற்பவரும் இன்ப துன்பங்களை நுகர்ந்தும், மாறி மாறி இறந்தும் பிறந்தும் உழலும்.

மாயை, கன்மங்களோடு கூடிய இந்நிலையே சகல நிலை எனப்படும். சகலம் என்பதற்குக் கலையோடு கூடியிருத்தல் என்பது பொருள். கலை= மாயை. இந்நிலையை மருள்நிலை என்பர்.

ஒன்றும் தெரியாத கேவல நிலை இரவு என்றும், சிறிதளவில் அறிவு விளங்கப்பெறும் சகல நிலை பகல் என்றும் கூறப்படும்.

3) சுத்தநிலை : உயிர்கேவலம், சகலம் ஆகிய இரண்டும் நீங்கி இறைவனைச் சார்ந்து, என்றும் ஒரு நிலையாய் நிற்பது சுத்தநிலை எனப்படும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் அறவே நீங்கிய நிலையாதலின் இது சுத்தம் எனப்பட்டது. சுத்த நிலையை இரவு பகலற்ற இடம் என்பர். இது தெருள்நிலை எனவும் படும். இந்நிலையில் உயிர் மாறாத சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்.

இனி, உயிர்கள் உடம்போடு கூடிவாழும் நிலையில் நாள்தோறும் ஐந்து அவத்தைகளை அடையும். அவை சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன. அவற்றைத் தமிழில் முறையே நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு அடங்கல் (மூச்சு அடங்கியிருத்தல்) எனக் குறிப்பர். இவ்வைந்து நிலைகளும் காரிய அவத்தைகள் எனப்படும்.

சாக்கிரம் முதலிய நிலைகளில் அறிவு படிப்படியே குறைந்து வரும். அம்முறையில் உயிர் சிறப்பாக நிற்கும் இடமும் ஐந்தாகும். சாக்கிரமாகிய விழிப்பு நிலையில் உயிர் புருவ நடுவில் நிற்கும்; சொப்பனமாகிய கனவு நிலையில் கழுத்தில் நிற்கும்; சுழுத்தியாகிய உறக்கத்தின்போது நெஞ்சில் நிற்கும்; துரியமாகிய பேருறக்கத்தின்போது உந்தியில் நிற்கும்; துரியாதீதமாகிய உயிர்ப்படங்கலில் மூலாதாரத்தில் ஒடுங்கி நிற்கும். இங்கு உயிர் அறியாமையில் அழுந்தியிருக்கும்.

இவ்வாறு உயிர் புருவ நடுவிலிருந்து முறையே இறங்கிவருதல் கீழாலவத்தை எனப்படும். பின் அம்முறையே மேலேறி வருதல் மேலாலவத்தை எனப்படும்.

உயிர்புருவ நடுவிலிருந்து கீழிறங்கி இறுதியாக மூலாதாரத்திற் செல்வது. அரசன்தான் வீற்றிருந்த அத்தாணி மண்டபத்தை விட்டு நீங்கிப் பல இடங்களைக் கடந்து தன் அந்தப்புரத்தை அடைவது போன்றது என்று சொல்லப்படும்.

ஆணவம் : உயிரைப் பற்றியிருக்கும் மும்மலங்களும் முதலாவதாயும், ஏனைய கன்மமலமும் மாயா மலமும் உயிரைச் சேர்வதற்குக் காரணமாயும் இருப்பது ஆணவ மேயாகும். இது செம்பிற் களிம்பு போலவும், நெல்லிற் உமி போலவும் உயிர்களுக்கு இயற்கைக் குற்றமாய் அமைந்துள்ளது.

ஏனைய மலங்களுக்கு மூலம் ஆதலின் ஆணவத்தை மூல மலம் என்பர்; இயற்கைக் குற்றமாதல் பற்றிச் சகல மலம் எனப்படும்; அறிவை மறைத்து அறியாமையைச் செய்தல் பற்றி இருள் மலம் எனவும் வழங்கப்படும். மேலும், மலம் என்றாலே அஃது ஆணவ மலத்தையே சிறப்பாகக் குறிக்கும். விரிந்ததாகிய உயிரின் அறிவை மறைத்துச் சிற்றறிவாய், அணுத்தன்மையாய்ச் செய்தல் பற்றியே ஆணவம் என்ற காரணப் பெயர் அமைந்தது.

ஆணவம் ஒன்றேயன்றிப் பல இல்லை. ஆயினும் அதன் சத்திகள் எண்ணிறந்தன. அதனால் எண்ணிறந்த உயிர்களைப் பிணித்து நிற்கிறது. இரவுப் போதில் இருள் ஒன்றே எல்லோருடைய கண்களையும் மறைத்து நிற்றலைப் போன்றது இது.

கண்ணை மறைக்கின்ற புறு இருளை நம்மால் உணர முடிகிறது. ஆனால் அறிவை மறைக்கின்ற ஆணவ மலத்தை அஃது உள்ள பொழுது ஒருவரா<லும் அறிய முடியாது. அது நீங்கி அறிவு வந்த பின்னரே நாம் இது காறும் அறியாமை வயப்பட்டிருந்தோம் என்ற உண்மை தெரிய வரும். இவ்வாறு ஆணவ மலம் ஒருவருக்கும் புலனாகாத பொருளாய் உள்ளது.

பிற சமயங்களுள் ஒன்றேனும் ஆணவ மலம் உண்டென்று கொள்வதில்லை. அம்மதங்கள் மாயை கன்மங்களே உயிர்களுக்கு அறியாமைச் செய்கின்றன என்று கூறுகின்றன. இவ்வகையில் சைவ சித்தாந்தம் வேறுபட்டு நிற்கிறது. ஆணவத்தை நீக்குதற்கே மாயை கன்மங்களை இறைவன் உயிர்களுக்குக் கூட்டினான் என்பதும், ஆணவம் இருள் எனில் மாயை ஒளி போன்றது என்பதும், மாயை கன்மங்கள் உயிர்களுக்கு விளக்கத்தைத் தருவன என்பதும் சைவ சித்தாந்தக் கருத்தாகும்.

ஆணவ மல மறைப்பு உயிர்களிடத்தில் ஒரே வகையாய் இருப்பதில்லை. உயிர்தோறும் அது வேறுபட்டே இருக்கும். அம்மறைப்பு நிலையைப் பொதுவாக மூவகைப்படுத்துவர். அவை பருமை, நுண்மை, மிகு நுண்மை என்பன. ஆணவ மலப் பிணிப்புப் பருமையாய், உள்ள உயிர்கள் சகலர் எனப்படுவர் நுண்மையாய் உள்ள உயிர்கள் பிரளயாகலர் எனப்படுவர். மிகு நுண்மையாய் உள்ள உயிர்ள் விஞ்ஞான கலர் எனப்படுவர். மல மறைப்பின் வேறுபாட்டிற்கு ஏற்பவே மற்ற மாயை கன்மங்களின் பிணிப்பும் அமையும்.

ஆன்மா : பார்க்க : உயிர்

இரு வினை ஒப்பு : நல்வினையின் பயனாக இன்பம் வரும்போது அதனை விரும்புதலும், தீவினையின் பயனாகத் துன்பம் வருங்கால் அதனை வெறுத்தலும் செய்யாமல், உணர்ச்சி வேறுபடாமல் அவ்விரண்டையும் ஒன்றுபோல நினைத்துப் பற்றின்றி  நிற்கும் மனப்பான்மையே இருவினையொப்பு என்பது. ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் என்று பெரிய புராணம் கூறுவது இந்நிலையேயாம்.

இருவினை ஒப்பு சரியை முதலிய சிவபுண்ணியத்தாலேயே உண்டாகும். அவ்வினையொப்பு முற்ற நிகழ்ந்த போதே இறைவன் குருவாய் வந்து ஞானத்தை அருள்வான்.

உயிர் : உயிர் என்பது அறிவுடை பொருள். அறிவுடைப் பொருளைச் சித்து என்ற சொல்லால் குறிப்பர். ஆகவே உயிர் சித்துப் பொருள் ஆகும்.

உடம்பு தோறும் உள்ள உயிர் ஒவ்வொன்றும் தனித்தனி உயிரே ஆகும். உயிர்கள் எண்ணற்றவை.

இந்த எண்ணிறந்த உயிர்களை இறைவன் உண்டாக்கவில்லை. இறைவனைப் போலவே உயிர்களும் என்றும் உள்ளனவேயாம். அவற்றிற்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை. தோற்றமில்லாத பொருளை அநாதி என்பர். எனவே, இறைவனும், அநாதி; உயிர்களும் அநாதி.

இவ்வாறு சொல்வதால் உயிர்கள் இறைவனோடு சரி நிகராகி நிற்கும் எனக் கருதிவிடல் ஆகாது. சித்து என்னும் வகையில் இரண்டும் ஓரினமாயினும் அவற்றின் அறிவுநிலையில் எத்துணையோ வேறுபாடு உளது.

இறைவனது அறிவு முற்றறிவு; உயிர்களின் அறிவோ சிற்றறிவு. இறைவன் தானே அறிபவன். உயிர்கள் அறிவித்தாலே அறியும் தன்மை உடையவை. இறைவன் ஒரு காலத்தில் எல்லாவற்றையும் அறிபவன். உயிர்கள் ஒரு காலத்தில் ஒரு பொருளை மட்டுமே அறிவன. அவ்வாறு ஒவ்வொன்றாக அறிந்தவற்றை மறந்தும் மீள நினைந்தும் வருவன. இறைவன் எதனையும் தோய்வின்றி அறிபவன். உயிர்கள் தாம் அறிந்தவற்றில் தோய்ந்து அவற்றின் தன்மையைப் பெற்று நிற்கும். இவ்வியல்பைச் சார்ந்ததன் வண்ணம் ஆதல் என்பர். இந்தத் தன்மையினால் இறைவன் என்றும் தலைவனாய் இருக்க, உயிர்கள் என்றும் அவன் வழிப்பட்டு அடிமையாய் நிற்றற்கு உரியவை என்பது புலனாகும்.

பசு, ஆன்மா, சீவன், அணு, ஆவி ஆகிய சொற்கள் உயிரைக் குறிக்க நூல்களில் வழங்குகின்றன.

பசு என்ற சொல் பாசத்தால் கட்டப்பட்டது என்ற பொருளைத் தந்து, உயிர் இயற்கையாகவே ஆணவ மலத்தால் கட்டப்பட்டுக் கிடக்கின்ற நிலையைக் குறிப்பதாய் உள்ளது.

ஆன்மா என்ற சொல்லுக்கு வியாபகம் (விரிவு) என்பது பொருள். உயிர் எல்லையற்று நிற்கும் வியாபகப் பொருள்; ஆயினும் இறைவனது நிறைவில் அடங்கி நிற்பது.

உயிரின் வியாபகம் தோன்றாதபடி அதனை ஆணவ மலமாகிய மாசு மறைத்து நிற்கிறது. பெரிய நீர்நிலையில் நீர்நிரப்பு சிறிதும் தோன்றாதவாறு பாசி மூடிக்கொண்டிருக்கின்ற நிலை போன்றது இது.

இறைவன் கொடுத்த உடம்பு, அறிகருவிகள் முதலியவற்றால் ஆணவ மறைப்புச் சிறிது விலகி உயிரின் வியாபகம் சிறிது புலனாகும். பாசி படர்ந்த குளத்தில் கல்லை விட்டெறிந்தால் கல் விழுந்த இடத்தில் பாசி சிறிது விலகி நீர் சிறிது புலப்படுவது போன்றது இது.

இவ்வாறு உடம்பு அளவில் உயிரின் அறிவு, செயல்கள் சிறிதே விளங்கப்பெற்று அணுவைப்போலத் தோன்றுகிறது. இந்நிலை பற்றியே உயிர், அணு என்று கூறப்படுகிறது.

உயிர் அணுத்தன்மையடைந்து நிற்றல் ஆணவமலத்தால் வந்த செயற்கை எனவும், எங்குமாய் நிற்கும் விரிந்த அறிவு நிலையே அதற்கு இயற்கை எனவும் அறிதல் வேண்டும்.

கேவல நிலையில் ஆணவ இருளில் அழுந்தி அறிவின்றிக் கிடந்த உயிர், இறைவனருளால் உடம்போடு கூடிய சகல நிலைக்கு வந்து, சிற்றறிவும் சிறு தொழிலும் உடையதாய்ப் பிறப்பு இறப்புக்களில் உழன்று. பின் பக்குவம் வந்த காலத்தில் இறைவனே ஞானாசிரியராய் நின்று உணர்த்த, உண்மை ஞானத்தைப் பெற்றுப் பாசத் தொடர்பும் மறைப்பும் நீங்கிப் பேரறிவுடையதாகித் தனது இயற்கை நிலையான வியாபகத்தை எய்தி, இறைவனோடு இரண்டறக் கலந்து நின்று பேராத, மாறாத, பேரின்பத்தை நுகரும்.

உயிர்கள் எண்ணற்றவையாயினும் பாசப் பிணிப்புப் பற்றி அவற்றை மூவகைப்படுத்திச் சித்தாந்தம் கூறும். அவை விஞ்ஞானகலர், பிரளாயகலர், சகலர் என்பன.

மும்மலங்களுள் ஆணவ மலம் ஒன்றை மட்டும் உடைய உயிர்கள் விஞ்ஞானகலர். ஆணவத்தோடு கன்மத்தையும் <உடைய உயிர்கள் பிரளயாகலர். ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களையும் உடைய உயிர்கள் சகலர்.

விஞ்ஞானகலர் முதலிய பெயர்கள் காரணம் பற்றி அமைந்தனவாகும். விஞ்ஞானகலர், பிரளாயகலர் என்பனவற்றில் உள்ள அகலர் என்பதற்குக் கலை இல்லாதவர் என்பது பொருள். சகலர் என்பதற்குக் கலையோடு கூடியவர் என்பது பொருள். கலை என்பது மாயையைக் குறிக்கும். மயக்கும் தன்மையை உடைய மாயையோடு கூடியவர் சகலர் எனப்பட்டனர். அத்தகைய மாயையோடு கூடாமையால் மயக்கம் இல்லாதவர் என்ற பொருளில் ஏனைய இருவகையினரும் அகலர் எனப்பட்டனர்.

விஞ்ஞானகலர், பிரளயாகலர் என்ற பெயர்களே அவர்கள் முதலில் சகலராயிருந்து பின்னர் பக்குவ முதிர்ச்சியால் மயக்கத்தைச் செய்யும் மாயையின் தொடர்பு நீங்கினவர் என்பதைக் காட்டும். இவ்வாறு சகலராய் இருந்து அந்நிலைக்கு உயர்ந்தோரும் உண்டு. இயற்கையிலேயே விஞ்ஞானகலர், பிரளாயகலர் என இருப்போரும் உண்டு என்பது அறிதற்குரியது.

ஐந்தொழில் : படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனப்வை இறைவன் செய்யும் ஐந்தொழிலாகும்.

இறைவன் மாயை என்ற மூலப் பொருளிலிருந்து உயிர்கள் தங்குதற்கு ரிய உடம்பையும், அறிதற்குரிய மனம் முதலிய கருவிகளையும், போக்குவரவு செய்தற்குரிய உலகையும், நுகர்தற்குரிய உலகப் பொருள்களையும் உண்டாக்கிக் கொடுக்கின்றான். இதுவே படைத்தல் தொழிலாகும்.

அந்தந்த உயிர்களுக்குப் படைத்தளித்த உடம்பு முதலியவற்றைக் குறிப்பிட்ட காலம் வரையில் நிலை நிறுத்துதல் காத்தல் என்னும் தொழிலாகும்.

காத்தவற்றைத் தத்தம் கால எல்லையில் உயிர்களினின்றம் பிரித்து மீண்டும் அவற்றை மாயையில் ஒடுக்குதல் அழித்தல் தொழிலாகும்.

மேற்கூறிய முத்தொழில்களையும் இறைவன் சடமாகிய பொருள்களிடம் செய்கின்றான் என்பது நோக்குதற்குரியது.

இனிச் சித்தாகிய உயிர்களிடத்தில் இறைவன் செய்கின்றவை மறைத்தலும், அருளலும் ஆகிய ஏனைய இரு தொழில்களாகும்.

அவற்றுள் மறைத்தல் என்பது இறைவன் தன்னை அறிய விடாது உயிர்களின் அறிவை மறைத்தல். உண்மையில் மறைப்பது ஆணவ மலந்தான். அதனை இறைவன் தனது சத்தியால் தூண்டிச் செயற்படுத்தி உயிரறிவை மறைக்கும்படி செய்கிறான். அவன் ஏன் அவ்வாறு செய்கிறான் எனில், ஆணவமலம் செயற்படச் செயற்படத்தான் அதன் சத்தி படிப்படியாகத் தேய்ந்து மெலிவடையும். அதன் சத்தி மெலியுங்காலத்தில் உயிரறிவு மறைப்பு நீங்கி விளக்கம் பெற்று இறைவனை உணரும் தகுதியைப் பெறும். இப்பயன் கருதியே ஆணவ மலத்தைச் செயற்படுத்தி அதன் வழியாக மறைத்தலைச் செய்விக்கின்றான். எனவே மறைத்தலும் உயிர்களுக்கு நன்மையேயாகிறது. இவ்வாறு பாசத்தின் வழிநின்று அதனைச் செயற்படுத்தி மறைத்தலைச் செய்விக்கும் இறைவனது சத்தி திரோதான சத்தி எனப்படும். திரோதானம்= மறைத்தல்.

இனி, ஆணவ மலத்தின் சத்தி மெலிவடைந்த உயிர்களுக்கு இறைவன் தன்னியல்பையும், உயிரியல்பையும், பாசத்தின் இயல்பையும் காட்டிப் பகையாகிய பாசத்தினின்றும் நீங்கி உறவாகிய தன்னையடைந்து இன்புறச் செய்கின்றான். இதுவே அருளல் என்னும் தொழிலாகும். அருளலைச் செய்யும் இறைவனது சத்தி அருட்சத்தி எனப்படும்.

இறைவனது ஒரு சத்தியே மறைத்தலைச் செய்யுங்காலத்தில் திரோதான சத்தி என்றும், அருளலைச் செய்யுங்காலத்தில் அருட்சத்தி என்றும் பெயர் பெற்று நிற்கும் என்பது அறியத் தகும்.

ஏனைய சமயங்கள் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை மட்டுமே கூறும். சைவ சமயம் ஒன்றே இறைவன் செய்யும் தொழில்களை ஐந்தாகக் கூறுகின்றது.

கன்மம் : பார்க்க : வினை

சதசத்து : பசுவாகிய உயிர் பதியாகிய கடவுளைப் போலச் சத்துப்பொருள் ஆகாது; பாசப்பொருள்கள் போல அசத்துப் பொருளும் ஆகாது. உயிர் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையை உடையது ஆதலால், அசத்தைச் சார்ந்த பொழுது அசத்தின் தன்மையைப் பெற்று அசத்தாகவே நிற்கும். பிறப்பு நிலையில் அசத்தாகிய உடம்பைச் சார்ந்திருக்கின்ற உயிர் உடம்பின் தன்மையே தன் தன்மையாய் உடம்பே தானாய்- நிற்றலைக் காணலாம். இனி அசத்தை விடுத்துச் சத்தாகிய சிவத்தைச் சார்ந்த பொழுது சிவத்தின் தன்மையே தன் தன்மையாய், சிவமே எனும்படி நிற்கும்.

இவ்வாறு சத்தம் ஆகாமல், அசத்தும் ஆகாமல், சத்தைச் சார்ந்த போது சத்தாயும், அசத்தைச் சார்ந்த போது அசத்தாயும் நிற்கும் இயல்பினால் பசுவாகிய உயிர் சதசத்து எனப்படுகிறது.

சத்தி : இறைவன் எண்ணற்ற உயிர்களிடத்திலும் ஏனைய உலகப் பொருள்களிடத்திலும் பிரிப்பின்றிக் கலந்து நிற்கின்றான். ஒருவனாகிய இறைவன் எல்லாப் பொருள்களிடத்திலும் கலந்து நிற்பது எவ்வாறு இயலும் எனில், சூரியன் ஒன்றேயாயினும் அதன் ஒளி எங்கும் பரவி நிற்பதைப் போல இறைவன் ஒருவனேயாயினும் அவனது சத்தி எல்லாப் பொருளிடத்திலும் ஒருங்கே விரவி நிற்கிறது. நெடுந்தொலைவில் உள்ள சூரியன் தன் ஒளிக் கதிரினால் உலகத்தோடு தொடர்புற்று நிற்பதைப் போலச் சிவமாகிய முதற்பொருள் எல்லாவற்றையும் கடந்து நிற்பதாயினும் தனது சத்தியினால் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து உலகத்தோடு தொடர்பு கொண்டு விளங்குகிறது.

இதனால், சூரியனும் அதன் ஒளியும் போல இறைவன் தானும் தன் சத்தியும் என இரு தன்மைப்பட்டு இயைந்து நிற்கின்றான் என்னும் உண்மை புலனாகும்.

சிவமும் சத்தியும் இருவேறு பொருள்கள் அல்ல. சூரியனது தன்மையே ஒளியாதல் போலச் சிவத்தினது குணமே சத்தி. அக்குணத்தையுடைய குணிப்பொருள் சிவம். சிவமும் சத்தியும் குணியும் குணமுகமாகத் தம்முள் இயைந்து நிற்கும். குணத்தைப் பிரிந்து குணியும், குணியைப் பிரிந்து குணமும் தனித்து நில்லா. அவ்வாறே சத்தியினின்றிச் சிவமில்லை. எனவே, சத்தி பெரிதா, சிவம் பெரிதா என்ற கேள்விக்கு இங்கு இடமேயில்லை என அறிதல் வேண்டும்.

குணியும் குணமும் வேறல்லவாயினம், குணி செலுத்தியபடிதான் குணம் செல்லும். இதனால் சிவத்தின் வழியிலேயே அவனது சத்தி செயற்படும் என்பது விளங்கும். இது பற்றியே சிவத்தைக் கணவன் என்றும், சத்தியை மனைவி என்றும் கூறும் வழக்கு உண்டாயிற்று. ஒரு பாதி ஆணாகவும் மற்றொரு பாதி பெண்ணாகவும் அமைந்த இறைவனது திருவுருவத்தின் உட்பொருள் இறைவன் ஒருவனே சிவமும் சத்தியும் என இருதிறப்பட்டு இயைந்து நிற்கிறான் என்பதைக் காட்டுதலேயாகும்.

உயிர்களையும் பிறபொருள்களையும் நோக்காது தன் நிலையில் நிற்பதே இறைவனது உண்மை நிலை. இதுவே கடந்த நிலை எனப்படும். இந்நிலையில் அவன் சொரூப சிவன் எனவும் பரம சிவன் எனவும் சொல்லப்படுவான். அவனது சத்தி பராசத்தி எனப்படும்.

உயிர்களை நோக்கி ஐந்தொழில் செய்யுங்காலத்தில் அவன் தடத்த சிவன் எனப்படுவான். அவனது சத்தி ஆதி சத்தி என்னும் பெயர்பெறும். இது திரோதான சத்தி என்றும் சொல்லப்பெறும். இந்த ஆதி சத்தியே இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி என மூன்றாகவும் இன்னும் எண்ணிறந்த சத்திகளாகவும் விரிந்து செயற்படும். உயிர்களுக்கு நன்மை செய்ய விரும்பும் கருணையே இச்சா சத்தி; அவ்வாறு விரும்பி அதற்கு ஏற்பச் செய்ய வேண்டுவனவற்றையெல்லாம் அறிவது ஞானசத்தி; அறிந்தவாறே செய்வது கிரியாசத்தி.

இறைவனது கருணையாகிய இச்சாசத்தி எல்லா உயிர்களிடத்திலும் வேறுபாடின்றி ஒரு தன்மையாய்ச் செயற்படும். ஞானசத்தியும் கிரியா சத்தியும் ஒரு தன்மையாய்ச் செயற்படாமல், நலம் விளையும் முறையில் அந்தந்த உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப வெவ்வேறாய் அறிந்து அதற்கேற்ப வெவ்வேறாய்ச் செயற்படும். இதுபற்றியே, எவ்வுயிரிடத்தும் பொதுவாக நிற்கும் இச்சா சத்தியை விடுத்து, இவ்விரு சத்திகளையே இறைவனது இரண்டு திருவடிகளாகச் சிறப்பித்துச் சொல்வர். ஞானசத்தி இறைவனது வலது திருவடியாகவும் , கிரியா சத்தி இடது திருவடியாகவும் சொல்லப்பெறும்.

சத்தி நிபாதம் : இறைவனது திரோதான சத்தி மாயையையும் கன்மத்தையும் கூட்டி, உயிரைப் பிணித்துள்ள ஆணவ மலத்தின் சத்தி சிறிது சிறிதாகத் தேயும்படி செய்யும். ஆணவத்தின் சத்தி மெலிய மெலிய, அதற்கேற்றவாறு அதன் மறைப்பு நீங்கி உயிரின் அறிவு விளங்கி வரும். அறிவு விளங்க விளங்க, இதுகாறும் அவ்வறிவில் மறைந்து நின்று மும்மலங்களைச் செயற்படுத்தி அவ்வுயிரை மாயா காரியங்களாகிய உலகப் பொருள்களின் மீது பற்றுக்கொள்ளும்படி செய்த அத்திரோதான சத்தியே அத்தன்மை மாறி அருட்சத்தியாய் உயிரினிடத்தில் சிறிது சிறிதாய்ப் பதியும். அருட்சத்தி பதியப்பதிய அவ்வுயிர் உலக மயக்கம் நீங்கி, மாயா காரியங்களின் இழிவையும் பிறவித் துன்பத்தையும் உணரும். அங்ஙனம் உணர உணர, அவற்றினின்றும் நீங்குதற்குரிய முயற்சியில் மனம் செல்லும்.

ஆணவ மலம் நீங்குதற்குரிய தகுதியை அடைதற் பொருட்டு அதன் பக்கமாய் நின்று உயிரை மறைத்து வந்த திரோதான சத்தி அம்மறைப்புத் தன்மை நீங்கி அருட் சத்தியாய் உயிரிடத்தில் பதிதலே சத்தி நிபாதம் எனப்படும்.

நிபாதம் என்பதற்கு வீழ்தல் என்பது பொருள். ஓர் அவைக் களத்தில் கல் வந்து வீழ்ந்தால் அங்குள்ளோர் அதிர்ச்சியடைந்து அஞ்சி அகல்வர். அதுபோல, அருட்சத்தி பதியுமானால் உலகச் சூழலில் நின்ற உயிருக்கு அதிர்ச்சியுண்டாகி, உலக மயக்கத்திலிருந்து நீங்க முயலும். இக்கருத்துப் பற்றியே, சத்தி வீழ்தல் எனப்பொருள்படும் சத்தி நிபாதம் என்னும் குறியீட்டினால் இந்நிலையைக் குறித்தனர்.

சத்தி நிபாதம் அவ்வுயிர்களிடத்தில் பல்வேறு வகையாக நிகழுமாயினும், அது பொதுவாக நான்கு வகையாகக் கூறப்படும். அவை மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்பன. மிக மெல்ல நிகழ்தல், மெல்ல நிகழ்தல், வரைய நிகழ்தல், மிக விரைய நிகழ்தல் என இவற்றைச் சொல்லலாம். மந்ததரம் முதலிய நால்வகைச் சத்தி நிபாதத்தால் முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றை உயிர்கள் மேற்கொள்ளும்.

சத்து : இந்தியத் தத்துவங்கள் சத்து என்பதற்கு உள்ளது என்றே பொருள் கொள்ளுகின்றன. ஆனால் சைவ சித்தாந்தம் என்றும் மாறுதல் அடையாமல் உள்ளதே சத்து என்னும் வரையறையைக் கூறுகிறது.

பசவாகிய உயிர் பாசத்தோடு கூடி அதன் அறிவு மறைந்தும் தோன்றியும் வருதலால் சத்திற்குரிய இலக்கணம் உயிருக்குப் பொருந்தாததாகின்றது. அவ்வாறே பாசப் பொருள்களும் நிலை மாற்றத்தை உடையன ஆதலால் அவற்றிற்கும் இவ்விலக்கணம் பொருந்தாது. பதியாகிய கடவுட்பொருள் ஒன்றே என்றும் மாறுதல் இன்றி ஒரு படித்தாய் நிற்கும் செம்பொருள் ஆதலின் அதுவே சத்து எனப்படுதற்கு உரியது.

சத்து என்னும் வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் மெய் என்பது.

சற்காரிய வாதம் : சற்காரிய வாதம் என்பது உள்ளதே தோன்றும், இல்லது தோன்றாது என்னும் கொள்கையாகும். சத்=உள்ளது; காரியம்- தோன்றுவது.

உள்ளது தோன்றும் என்பதன் பொருள், முன்பு சூக்கும நிலையில் நுட்பமாய் விளங்காது நின்ற பொருள் பின் தூல நிலையில் பருமையாய்ப் புலப்படும்படி தோன்றி நிற்கும் என்பதாகும். எள்ளில் எண்ணெய் முன்பே நுட்பமாய் அடங்கியிருக்கிறது; எள்ளை ஆட்டும் பொழுது அது பருமையாய் விளங்கித் தோன்றுகிறது.

முன்பே சூக்குமமாய் இல்லாத பொருள் பின் எக்காலத்திலும் எவ்வகையிலும் விளங்கித் தோன்றாது. முயலின் தலையிலும் பசுவினது கன்றின் தலையிலும் அவை பிறந்த போது கொம்பு இல்லை. ஆயினும் பசுக்கன்றின் தலையில் முன்பே கொம்பு சூக்குமமாய் இருந்தது. முயலின் தலையில் அஃது அவ்வாறு இல்லை. அதனாலேயே கன்றின் தலையில் பின்னர்க்கொம்பு தோன்றுகிறது. முயலுக்குக் கொம்பு என்றும் தோன்றுவதில்லை. இதனால், இல்லாதது  எக்காலத்தும் தோன்றுவதில்லை; உள்ளதுதான் தோன்றும் என்பது புலனாகும்.

உள்பொருள்களுக்கு இரண்டு நிலைகள் உண்டு என்பதை அறியலாம். ஒன்று, நுட்பமாய்ப் புலப்படாமல் அடங்கியிருத்தல். இது காரண நிலை எனப்படும். மற்றது, பருமையாய் விளங்கித் தோன்றுதல். இது காரிய நிலை எனப்படும்.

ஒரு பொருள் காரண நிலையிலிருந்து காரிய நிலைக்கு வருதலே தோற்றம் எனப்படும். பின், காரிய நிலையிலிருந்து மீளக் காரண நிலையை அடைதலே அழிவு எனப்படும்.

எனவே பொருள் என்பது எக்காலத்தும் உள்ளதேயாகும். புலப்படாத அருவ நிலையிலிருந்து புலப்படும் உருவ நிலைக்கு வரும்போது தோன்றியது என்று கூறுகிறோம். அவ்வளவே. இதுவே சற்காரிய வாதம் எனப்படுவது. சைவ சித்தாந்தம் இதன் அடிப்படையில்தான் அமைந்துள்ளது.

சார்ந்ததன் வண்ணமாதல் : உயிரின் இயல்பு சார்ந்ததன் வண்ணம் ஆதல். அஃதாவது, தான் எந்தப் பொருளைச் சார்கிறதோ அந்தப் பொருளின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டுநிற்றல்.

பளிங்கு தன்னை அடுத்துள்ள பொருளின் நிறமே தன்  நிறமாகக்கொண்டு நிற்கும்.கண், இருளில் நிற்கின்ற காலத்தில் இருளைச் சார்ந்து இருளாய் நிற்கும். ஒளி வந்த காலத்தில்  ஒளியைப் பொருந்தி ஒளியாய் நிற்கும். இத்தகைய பளிங்கும் கண்ணும் போன்றது உயிர். அது கட்டு நிலையில் பாசத்தைச் சார்ந்து, தான் வேறு காணப்படாமல் பாசமேயாக நிற்கும். பாசப்பொருளாகிய உடம்பைச் சார்ந்த உயிர்தான் சிறிதும் புலப்படாமல் அவ்வுடம்பாகவே நிற்கின்ற நிலையைக் காணலாம். அவ்வாறே உயிர் முத்தி நிலையில் பதியைச் சார்ந்த பொழுது தான் வேறு காணப்படாமல் பதியேயாய் நிற்கும்.

இவ்விரு நிலைகளில், பகையாகிய பாசத்தோடு கூடிப் பாசமாய் நிற்றல் உயிருக்குச் செயற்கை என்பதையும், உறவாகிய சிவத்தோடு கூடிச் சிவமாய் நிற்றலே உயிருக்கு இயற்கை என்பதையும் அறிதல் வேண்டும்.

சித்தாந்த முத்தி : உயிர் எதை எதைச் சார்கிறதோ அதன் அதன் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு, தான் வேறு தோன்றாமல் நிற்கும். இவ்வாறு அது அதுவேயாய் நிற்றல் உயிரின் இயல்பாகும்.

இவ்வியல்புக்கேற்பப் பெத்தநிலையில் பாசத்தைச் சார்ந்த உயிர் பாசமேயாய் நிற்கும். அப்பொழுது பதியாகிய சிவம் உடனிருந்தும் அதன் இருப்பை உயிர் உணராமையால், அந்நிலையில் பதி இல்லாததாய் நிற்கும். முத்தி நிலையில் சிவத்தைச் சார்ந்த உயிர் சிவமே தானாய் நிற்கும். அப்பொழுது பாசம் இருந்தும் அதன் மறைப்பு சிவமேயான உயிரிடத்தில் செல்லாமையினால் நெருப்பின் முன் இருள் போல அது தன் ஆற்றல் மடங்கி இல்லாததாய் நிற்கும். எனவே, முத்தியிலும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களும் உள்ளன என்பதே சைவ சித்தாந்த முடிபாகும்.

முத்தியில் உயிர் சிவத்தையடைதல் புதிதாய் நிகழ்வது போலத் தோன்றினாலும் உண்மையில் அவ்வுறவு புதிதாய் வந்தது அன்று. உயிர் என்றுமே சிவத்தோடுதான் உள்ளது. குருடன் சூரிய ஒளியிலேயே நின்றாலும் அவ்வொளியை அவன் அறிவதில்லை. குருடு நீங்கிப் பார்வை பெற்ற போது சூரிய ஒளி அவனுக்குப் புதிதாகவே தோன்றும். உண்மையில் அவ்வொளி முன்னரே இருத்தல் போலச் சிவமும் உயிரோடு என்றுமே இருக்கிறது. பாசத்தின் மறைப்பினால் உயிர் அதனை உணராதிருந்தது. பாசம் நீங்கிய போது அதற்குச் சிவப்பேறு புதிது போலத் தோன்றுகிறது. அவ்வளவே.

முத்தியில் உயிர் என்பது இல்லாதொழியும். சிவம் ஒன்றே நிற்கும் என்பது ஒரு சாரார் கொள்கை. முத்தியில் உயிரும் சிவமும் தனித்தனியே வேறாய் நிற்கும் என்பது பிறிதொரு சாரார் கொள்கை. இவ்விரு கருத்துக்களையும் சைவ சித்தாந்தம் ஏற்பதில்லை. முத்தியில் உயிர் என்பதே இல்லையாயின், இத்துணைக்காலம் அரிதின் முயன்று அரும்பாடுபட்டு மேற்கொண்ட சாதனங்களால் என்ன பயன்! அனைத்து முயற்சியும் பயனற்றதாய் அன்றோ போகின்றது! இனி, முத்தியில் உயிர் வேறாய் நிற்குமானால், யான் இதனை அறிகின்றேன் என அது தன்னை அறிந்து நிற்கும். அவ்வாறு தன்னை அறியும் பொழுது அது சிவத்தை மறக்கும். ஒன்றை அறியும்போது மற்றொன்றை அறியாதிருத்தலே உயிரியல்பு. அவ்வாறு சிவத்தை மறக்குமானால் சிவானந்தம் எவ்வாறு உண்டாகும்? சிவானந்தம் இல்லாத அந்நிலையை முத்தி நிலை என்பது எவ்வாறு அமையும்? ஆகவே மேற்கூறிய கொள்கைகள் பொருந்தாதனவாம்.

முத்தி நிலையில் உயிர், உயிரினது அறிவு, சிவம் ஆகிய மூன்றும் உள்ளன. வேறு வகையாகக் கூறினால், அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் ஆகிய மூன்றும் உள்ளன.

இவை மூன்றும் முறையே ஞாதுரு, ஞானம், ஞேயம் என வடமொழியிற் சொல்லப்படும். இம்மூன்றையும் திரிபுடி என்பர். இம் மூன்றும் உள்ளன வாயினும் உயிர் அறிபவனாகிய தன்னையும், தனது அறிவையும் அறியாது, சிவம் ஒன்றையே அறிந்து நிற்கும் நிலையே சித்தாந்த சைவம்  கூறும்  முத்தியாகும்.

சிவத்தோடு இரண்டறக் கலத்தல் என்பதற்குப் பொருள், அறிபவனாகிய உயிரும் அறியப்படு பொருளாகிய சிவமும் வேறாய் நிற்றல் இன்றி, உயிர் யான் என்று தன்னையும், எனது என்று தனது அறிவையும் உணர்தல் இன்றித் தன்னையிழந்து சிவத்தோடு ஒன்றி அதுவாகி நிற்றல் என்பதாகும்.

சிவனது திருவருள் திருவடியாகச் சொல்லப் பெறும். முத்தியாவது திருவருள் வியாபகத்தில் உயிர் அடங்கி நிற்கும் நிலையாதலின் அதனை

அடி சேர் முத்தி என்பர்.

இம்முத்தி நிலை குளிர்ந்த நிழல்போல் அமைந்து உயிரின் பிறவி வெப்பத்தை நீக்கிப் பேரின்பத்தை அளித்தலால், இறைவனது திருவடி நிழல் என்று கூறுவது மரபாயிற்று.

சித்தாந்தம் : சித்தாந்தம் என்பதற்கு முடிந்த முடிபு என்பது பொருள். ஒரு பொருளைப் பற்றி முதலில் ஆராயாமல் கொண்ட முடிபு நிலைத்த முடிபாகாது. நன்றாக ஆராய்ந்து பார்த்துப் பின்பு கொண்ட முடிபே நிலைத்து நிற்கும் முடிபாக விளங்கும். அதுவே முடிந்த முடிபு எனப்படும்.

ஒவ்வொரு சமயமும் தத்தம் கொள்கையே  முடிந்த முடிபு எனக் கூறுகின்றது. இவ்வகையில் பவுத்த சித்தாந்தம், சமண சித்தாந்தம், வைணவ சித்தாந்தம் எனப் பல உள்ளன. ஆயினும், சித்தாந்தம் என்று சொன்னாலே அஃது ஏனைய சித்தாந்தங்களைக் குறிக்காமல் சைவ சித்தாந்தம் ஒன்றையே இன்று சுட்டி நிற்பதைக் காணலாம். இஃது ஒன்றே சைவ சித்தாந்தமே உண்மைச் சித்தாந்தம் என்பதைக் தெள்ளெனக் காட்டும்.

சிவ புண்ணியம் : சிவபெருமான் ஒருவனையே முதற்கடவுளாகக் கொண்டு, அவனை நோக்கிச் செய்யும் வழிபாடும் தொண்டும் சிவ புண்ணியம் எனப் பெயர் பெறும்.

சத்தி நிபாதம் நிகழ்ந்த பொழுதே உயிர் சிவபுண்ணியங்களைச் செய்ய முற்படும். சிவ புண்ணியமாகிய சத்தி நிபாதச் செயல்களை மூன்று வகையுள் அடக்கிக் கூறுவர். அவை சரியை, கிரியை, யோகம் என்பன.

சைவ நெறியில், சரியை, கிரியை, யோகம் என்னும் சிவ புண்ணியமே தவம் எனப்படும். வீட்டைத் துறந்து காட்டிற் சென்று, உணவை வெறுத்தும் உடலை ஒறுத்தும் செய்யும் கடுமையான தவங்களும் சிவபெருமானை உணர்ந்து செய்யாத பொழுது தவம் ஆகா;  வீட்டில் மனைவி மக்களோடு கூடியிருந்து மனையறம் நடத்தினாலும், சிவ பெருமானையே நினைந்து முதலியவற்றைச் செய்யின் அவையே தவங்கள் ஆகும்.

சரியை என்பது சிவபெருமானது உருவத் திருமேனியை நோக்கிப் புறத் தொழில் அளவில் செய்யும் வழிபாடு ஆகும்.

திருக்கோயிலிற் சென்று அலகிடுதல், மெழுக்கிடுதல் , விளக்கேற்றுதல்,மாலை தொடுத்துக் கொடுத்தல், உருவத் திருமேனிகளாகிய மாகேசுர மூர்த்தங்கள், விநாயகர் முதலிய பரிவார மூர்த்திகள் இவர்களுள் ஒருவரை நியமமாக வழிபடுதல், சிவனடியார்களை வழிபடுதல் முதலியன சரியை ஆகும்.

சிவனடியார் வழிபாடு சைவ நெறியில் சிறப்பிடம் பெற்றுள்ளது. அடியவர்கள் சிவனெனவே வணங்குதற்கு உரியர். சிவனடியார்களின் நாட்களைக் கொண்டாடுதல் மாகேசுவர பூசை  எனப்படும். சைவ சமய ஆசாரியரும், சந்தான ஆசாரியரும், பெரிய புராண நாயன்மாரும், பிறரும் முத்தியடைந்த நாட்களில் அவரை நினைத்துச் சிறப்பு வழிபாடு நிகழ்த்தி, அடியவர்களையும் எளியவர்களையும் அமுது செய்வித்தலே மாகேசுவர பூசையாகும்.

கிரியை என்பது சிவ பெருமானுடைய அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத்தை நோக்கி அகத் தொழில், புறத் தொழில் இரண்டினாலும் செய்யும் வழிபாடு ஆகும்.

இலிங்க மூர்த்தியை எழுந்தருள்வித்து, தூபதீபம், திருமஞ்சனம், நறுமலர், திருவமுது போன்ற பூசைப் பொருள்களைத் திரட்டிக்கொண்டு, பூத சக்தி முதலிய ஐந்து சுத்திகளைச் செய்து, உரிய ஆசனத்தில் அமர்ந்து, மெய்யன்போடு அருச்சனை செய்து தியானித்து வழிபடுதலாகிய இஃது ஆன்மார்த்த பூசை எனப்படும்.

யோகமாவது இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு நிலைகளில் படிப்படியாக நிற்றல் ஆகும். அஃதாவது, உலகப் பொருள்களில் செல்லும் ஐம்புலன்களையும் ஒடுக்கி, உள்ளும் புறமும் செல்லும் மூச்சுக் காற்றினைத் தடுத்து நிறுத்தி, மனத்தை ஒருநிலைப்படுத்திப் பரம்பொருளை ஒளிவடிவமாகத் தியானித்தல் எனச் சுருங்கச் சொல்லலாம்.

அட்டாங்க யோகம் எனப்படும் இஃது இந்து சமயத்திற்குப் பொது; சைவ சைவத்திற்கும் உரியது.

மேற்கூறிய சரியை முதலிய சிவபுண்ணியங்களைப் படி முறையில் செய்துவரின் இருவினையொப்பு உண்டாகி முறையே பெருகிவரும். யோகத்தின் முதிர்ச்சியில் இரு வினை ஒப்பும் முற்ற நிகழும். அந்நிலையிலேயே சிவபெருமான் ஞானாசிரியராய் வந்து ஞானத்தை நல்குவான்.

சிவம் : சிவம் என்னும் சொல் மங்கலம் என்னும் பொருள் உடையது. மங்கலம் என்பது நன்மை. எனவே, சிவமுதற் பொருள் நன்மையே வடிவானது; எல்லா நன்மைகளையும் குறைவற உடையது என்பது புலனாகும்.

மங்கலத்திற்கு மாறானது அமங்கலம். அஃதாவது தீமை. தீமையாவன ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களே ஆகும். ஆணவம் அறியாமையைச் செய்வதனாலும், கன்மம் பிறவித் துன்பத்தைத் தருவதனாலும், மாயை அசுத்தமாய் நின்று மயக்கத்தைச் செய்வதனாலும் தீயன எனப்பட்டன. இம்மும் மலங்களுட்பட்டு வருந்துவன உயிர்களே. இறைவன் மலத்தொடு சிறிதும் தொடர்பின்றி நிற்பவன் ஆதலின் நின்மலன் எனப்படுகிறான்.

மலத்தொடர்பினால் வருவதே பிறவி. உயிர்கள் பிறவிக் கடலில் வீழ்ந்து கிடப்பன. மலத்தொடர்பு இன்மையால் இறைவனுக்கு எக்காரணம் பற்றியும் பிறவி இல்லை. இது பற்றியே சிவபெருமான் பிறவா யாக்கைப் பெரியோன் என்று போற்றப்படுகிறான். கடவுளைப் பிறப்பில்லாதவன் என்று போற்றும் நிலை சைவ சயத்திற்கே உரியது.

சிவன் என்னும் சொல்லின் பொருளை உணர்த்துவாராய், ஞானசம்பந்தர் நன்றுடையானை தீயதில்லானை என்று கூறியருளினார். சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான் என்று தெளிவுறுத்தினார் திருநாவுக்கரசர்.

சிறப்பியல்பும் பொதுவியல்பும் : ஒரு பொருளுக்கு இயற்கையாய் அமைந்துள்ள தன்மை அதன் சிறப்பியல்பு எனப்படும். சிறப்பியல்பு, உண்மையியல்பு, தன்னியல்பு என்பன ஒரு பொருட்சொற்கள். சிறப்பியல்பு வடமொழியில் சொரூபலக்கணம் எனப்படும்.

ஒரு பொருளின்கண் இயற்கையாய் இல்லாமல் மற்றொரு பொருளின் சேர்க்கையால் ஏற்படும் இயல்பு பொதுவியல்பு ஆகும். இது வடமொழியில் தடத்தலக்கணம் எனப்படும்.

இவ்விரு இயல்புகளையும் பின்வரும் எடுத்துக்காட்டினால் விளங்கிக் கொள்ளலாம்.நீர் இயல்பாய்க் குளிர்ந்திருப்பது. எனவே குளிர்ச்சி அதற்குரிய சிறப்பியல்பு அல்லது உண்மையியல்பு ஆகும். நீரிடத்தில் சிலசமயம் கூடு காணப்படும். நீர் சுடுதல் தீயாகிய பிறிதொரு பொருளின் சேர்க்கையால் நிகழ்வது. ஆதலால் சூடு நீருக்குப் பொதுவியல்பு ஆகும்.

சிறப்பியல்பு பொருக்கு இயற்கையாதலின் அது பொருளைவிட்டு எக்காலத்தும் நீங்குவதில்லை. பொதுவியல்பு ஒரு காரணம் பற்றி இடையில் வந்தது ஆகலின் அக்காரணம் நீங்கியபோது அதுவும் நீங்குவதாகும்.

இவ்விருவகையியல்பும் சைவ  சித்தாந்தத்தில் முப்பொருள்களுக்கும் தனித்தனியே சொல்லப் பெறும்.

பதியாகிய இறைவன் ஐந்தொழில் செய்யும் நிலையும், பலஉருவும், பெயரும் உடையவனாகிய நிலையும் உயிர்களுக்காக அவன் மேற்கொள்ளும் பொதுவியல்பாகும். அங்ஙனம் ஐந்தொழிலிற் செல்லாது, யாதொரு வடிவும் பெயரும் இன்றித்தன்னிலையில் தான் நிற்றலே அவனது சிறப்பியல்பாகும்.

பசுவாகிய உயிர் ஆணவம் முதலிய  மும்மலங்களின் சார்பினால் பிறப்புஇறப்புக்களிற்பட்டு, விழிப்பு உறக்கம் நினைப்பு மறப்பு முதலிய பல நிலைகளை அடைந்து, இன்ப துன்ப மயக்கங்களை எய்தி, இவ்வாறு ஒரு நிலையில் நில்லாது மாறி மாறிச் சுழலுதல் அதற்குப் பொதுவியல்பாகும். சுருங்கச் சொன்னால், மலத்திற் கட்டுண்ட பெத்த நிலையில் உயிரிடத்தில் காணப்படும் இயல்பு பொதுவியல்பு என்பது விளங்கும்.

இம்மலங்களினின்றும் நீங்கிப் பதியாகிய சிவத்தைச் சார்ந்து ஒரு நிலையான தன்மையை எய்தி, நிலைபெற்ற இன்பத்தில் திளைத்திருத்தலே உயிருக்குச் சிறப்பியலாகும். இதனால், முத்தி நிலையிற் காணப்படும் இயல்பே உயிருக்குச் சிறப்பியல்பு என்பது விளங்கும்.

இனிப் பாசமாகிய ஆணவமலம் கேவல நிலையில் உயிர்களின் அறிவைச் சிறிதும் விளங்கவொட்டாமல் மூடி மறைத்து முழு அறியாமையைச் செய்து நிற்கும். இவ்வாறு அறியாமையுட்படுத்துவது ஆணவமலத்திற்குரிய சிறப்பியல்பு ஆகும். அதன் பொதுவியல்பாவது,  மாயை கன்மங்களோடு கூடிய சகல நிலையில் அவற்றால் உயிர்களுக்கு நிகழ்த்த சிற்றறிவைத் திரிவுபடுத்த வீபரித அறிவாகச் செய்தல். அஃதாவது, இழிந்தபொருளை உயர்ந்த பொருளென்றும், உயர்ந்த பொருளை இழிந்த பொருளென்றும் மாறி உணரச்  செய்தல்.

மாயை கன்மங்களுக்குரிய சிறப்பியல்பாவது, உயிர்களின் அறிவை விளக்கி நிற்றல். அம்மாயை கன்மங்கள் ஆணவமலத்தின் சார்பினால் உயிர்களின் அறிவை மயக்கவும் செய்யும் அஃது அவற்றின் பொதுவியல்பாகும்.

சீவன் முத்தி : பரமுத்தியாகிய பேரின்ப நிலையை இவ்வுலகில் இவ்வுடம்போடு கூடியுள்ள போதே பெற்றிருத்தல் சீவன் முத்தி எனப்படும்.

சீவன் முத்தியை அடைந்தோர் உலக நினைவின்றி எப்பொழுதும் இறைவனிடத்திலேயே அழுந்தியிருப்பர். இந்நிலையே நிட்டை நிலை என்பது. இந்நிலையில் பகல் இரவு முதலிய கால வேறுபாடுகளும் உலக நிகழ்ச்சிகளும் புலனாகா. எனை நான் என்பதறியேன் பகல் இரவாவதும் அறியேன் என்று மாணிக்க வாசகர் கூறியதும் இந்நிலையேயாம். இதன் கண் தோன்றும் சிவானந்தமாகிய ஞானக் கடலமுதை உண்டு திளைப்பர்.

சீவன் முத்தி நிலைக்கும் பரமுத்தி நிலைக்கும் இன்ப நுகர்ச்சியில் வேறுபாடு இல்லை. உடம்பு இருத்தலும் இல்லாமையும் ஆகிய அஃதொன்றே வேறுபாடு. எனவே பரமுத்தியில் உடம்பு நீங்கிப் பெறும் பேரின்பத்தைச் சீவன் முத்தர் உடம்பொடு கூடியே பெறுகின்றனர் எனலாம்.

பிராரத்த வினை காரணமாக இன்பம் வரினும் துன்பம் வரினும் சீவன் முத்தர் தாமரையிலையில் நீர் போலச் சிறிதும் பற்றின்றி ஒரு தன்மையராய் இருப்பர். இறைவன் திருவடியை எப்பொழுதும் பிரியாது நிற்றலால் அவர்க்கு எந்நாளும் இன்பமேயன்றித் துன்பமில்லை.

அவர்களது அறிவும் இச்சையும் செயலும் இறைவனிடத்தே அழுந்தியிருக்கும். அவை உலக முகப்பட்டுப் புறத்தே செல்லும் பொழுதெல்லாம் அவர்கள் திருக்கோயில்களுக்குச் சென்று வணங்குதல், மெய்யடியார்களோடு கூடி இறைவனது புகழைப் பேசி இன்புறுதல் ஆகியவற்றையே செய்வர்.

பிராரத்த வினை அளவும் அவர்களுக்கு உடம்பு இருக்கும். உடம்பு நீங்கியவுடன் பரம சிவனோடு இரண்டறக் கலத்தலாகிய பர முத்தியைப் பெறுவர்.

சீவன் முத்தரைத் தமிழில் அணைந்தோர் என்பர்.

ஞானம் :  ஞானம் என்பது பாசம், பசு, பதி என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்தல். தமிழில் இது மெய்யுணர்வு எனப்படும்.

ஞானம், நூல்களைக் கற்பதனால் மட்டும் உண்டாகாது; உலக ஆசிரியன்மார் உணர்த்துவதாலும் வாய்த்துவிடாது. இறைவனே குருவாக வந்து உணர்த்தும் போதுதான் முப்பொருள் இயல்பும் உள்ளவாறு விளங்கித் தோன்றும். இறைவன் ஒருவனே ஞானத்தைத் தரவல்லவன் என்பது சைவ சித்தாந்த முடிபாகும்.

ஞானத்தில் நான்குபடி நிலைகள் உண்டு. அவை கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என்பன. ஞான குருவின் உபதேசத்தைக் கேட்டலும், பின் அதனைச் சிந்தித்தலும், பின் அவ்வுபதேசப் பொருளைத் தெளிதலும், தெளிந்தவாறே நிட்டை கூடுத<லும் என அவை நிகழும்.

ஞானாசிரியர் சிவமேயாதலின் அவர் பின்வருமாறு உணர்த்துவார்.நீ இதுகாறும் ஐம்பொறி முதலியவற்றில் கட்டுண்டு அவற்றையே நான் எனக்கருதி நின்றாய். அவையெல்லாம் அறிவற்ற சடப்பொருள்கள். நீயோ எம்மைப் போன்ற சித்துப் பொருள். ஆதலால் அவற்றை விட்டொழித்து, உன்னோடு என்றும் நீங்காது <உனது அறிவை விளக்கி வருகின்ற எம்மையே உணர்ந்து நிற்பாயாக, என உபதேசிப்பார். அதனைக் கேட்டுப் பலகாலும் சிந்திக்கின்ற பொழுது தெளிவு உண்டாகும். அத் தெளிவுணர்வின் பயனாக உயிர்க்குயிராய் விளங்கும் சிவமுதற் பொருளை அனுபவமாகக் கண்டு அதனோடு ஒன்றி அழுந்தியிருத்தலே நிட்டை நிலையாகும்.

ஞானாசிரியர் : என்றும் உள்நின்று உணர்த்திவரும் இறைவனே ஞானம் பெறவேண்டும் என்னும் வேட்கையுற்ற உயிருக்கு அப்பருவம் அறிந்து குரு மூர்த்தியாய் வந்து உண்மை ஞானத்தை உணர்த்துவான் என்பது சைவ சமயத்தின் சித்தாந்தம், முடிந்த முடிபு, ஆகும்.

இறைவன் குருவாய் வருவான் என்பதன் பொருள், மல மாசு தீர்ந்த முத்தான்மாவாய் உள்ளவரிடத்தில் இறைவன் அவரே தானாய் ஒன்றி நின்று உணர்த்துவான் என்பதேயாகும். உலையில் பழுக்கக் காய்ச்சிய இரும்பு தன் தன்மையிழந்து நெருப்பாய் நிற்றல்போல அம்முத்தர் சிவத்தைப் பொருந்திச் சீவன் என்னும் தன்மை நீங்கிச் சிவமாய் நிற்பர் என அறிதல் வேண்டும்.

தன் தன்மை என்பதின்றிச் சிவமேயாய் நின்று ஞானத்தை உணர்த்தும் அம்முத்தரை நம்மவருள் ஒருவராகக் கருதாது சிவன் எனவே காணுதல் வேண்டும்.

தத்துவங்கள் : மாயை என்னும் மூலப்பொருளிலிருந்து தோன்றும் காரியமே உலகமும் உலகப் பொருள்களும். இக்காரியங்கள் மாயையிலிருந்து நேரே தோன்றுவதில்லை. முதலில் தத்துவங்கள் என்னும் கூறுகள் மாயையிலிருந்து தோன்றும். பின்னர் அத்தத்துவங்களின் காரியமாக உலகமும் உலகப் பொருள்களும் தோன்றும்.

மாயை சத்தமாயை என்றும், அசுத்த மாயை என்றும் இரு பகுதிப்பட்டு நிற்கும். இம்மாயைகளினின்றும் தோன்றும் தத்துவங்கள் வருமாறு :

சுத்தமாயையில் தோன்றும் தத்துவங்கள் சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை என்னும் ஐந்து ஆகும். இவை சுத்த மாயையின் காரியங்கள் ஆதலின் சுத்த தத்துவங்கள் எனப்படும். ஐந்தொழில் செய்யுங்கால் இறைவனாகிய சிவன் இவற்றை நேரே இடமாகக் கொண்டு நிற்பன் ஆதலின், அவனுக்கு இடமாதல் பற்றி இவை சிவ தத்துவங்கள் என்றும் கூறப்படும்.

அசுத்த மாயையில் தோன்றும் தத்துவங்கள் ஏழு. அவை காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்பன.

இவற்றுள்மாயை இறுதியில் சொல்லப்பட்டதாயினும் அதுவே முதல் தத்துவம். மாயை என்பது அசுத்த மாயையின் ஒரு பகுதியே. அதிலிருந்தே காலம் முதலிய ஏனைய தத்துவங்கள் தோன்றும்.

உயிர்கள் வினைகளை ஈட்டுவதற்கும், வினைப்பயன்களை அனுபவித்துக் கழிப்பதற்கும் கருவியாய் இருப்பது காலம். அவரவர் வினைப் பயன் அவரவரைச் சென்று சேரும்படி செய்விப்பது நியதி. கலை என்ற தத்துவம்  உயிரை மறைத்துள்ள ஆணவ மல மறைப்பைச் சிறிது நீக்கி அதன் கிரியா சத்தியை (செயலாற்றலை) விளக்குவதாகும். வித்தை என்ற தத்துவம் உயிரின் ஞானசத்தியை (அறிவாற்றலை) விளக்கும். அராகம் என்ற தத்துவம் உயிரின் இச்சா சத்தியை (விழைவாற்றலை) விளக்கும்.

காலம் முதலாகச் சொல்லப்பட்ட இவ்வைந்து தத்துவங்களும் உயிரின் செயற்பாட்டிற்கு இன்றியமையாதனவாம். இவை என்றும் உயிரோடு ஒட்டியே இருத்தலின் ஐந்து சட்டைகள் என்னும் பொருளில் இவற்றைப் பஞ்ச கஞ்சுகம் என்பர்.

இவற்றோடு கூடிய உயிர் உலகத்தை நுகர்தற்குத் தகுதி பெற்று நிற்கும். அந்நிலையில் அவ்வுயிர் புருடன் எனப்படுகிறது. எனவே புருடன் என்பது ஏனைய தத்துவங்களைப் போல ஒன்றிலிருந்து தோன்றிய தனித்தத்துவம் அன்று என்பது விளங்கும்.

இத்தத்துவங்கள் ஏழும் வித்தியா தத்துவங்கள் என்னும் பெயரைப் பெறும்.

இவற்றுள் ஒன்றாகிய கலையிலிருந்து பிரகிருதி என்னும் தத்துவம் தோன்றும். பிரகிருதி மாயை என்றும் இதனைக் குறிப்பர். பிரகிருதி சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் முக்குண மயமாய் நிற்கும். அம்முக்குணங்களும் சிறிதும் வெளிப்படாமல் நுட்பமாய் அடங்கி நிற்கும்.

இந்நிலையிலுள்ள பிரகிருதியிலிருந்து இருபத்து நான்கு தத்துவங்கள் தோன்றும். அத்தத்துவங்களில் மேற்கூறிய முக்குணங்களும் வெளிப்பட்டு நிற்கும். ஆயின், ஒவ்வொரு குணம் மேலோங்கி நிற்க, மற்றையவை கீழ்ப்பட்டு நிற்கும். அவ்வாறு தோன்றுகிற தத்துவங்கள் அந்தக்கரணங்கள் நான்கும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும், தன்மாத்திரைகள் ஐந்தும், பூதங்கள் ஐந்தும் ஆகும். இவ்விருபத்து நான்கினையும் ஆன்ம தத்துவங்கள் என்பர்.

இவ்வாறு தோன்றும் தத்துவங்கள் முப்பத்தாறு, அவற்றுள் சுத்த மாயையின் காரியமாகிய சிவ தத்துவம் ஐந்தும் இறைவனுக்கு இடமாகி நின்று, தமக்குக் கீழ் உள்ள தத்துவங்களை இயக்கி நிற்கும். அசுத்த மாயையின் காரியமாகிய வித்தியா தத்துவம் ஏழும் உயிரை உலக போகத்தை நுகர்தற்குத் தகுதியுடையதாகச் செய்யும். பிரகிருதியின் காரியமாகிய ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் உயிருக்கு நுகர்ச்சியைத் தரும்.

இத் தத்துவங்கள் யாவும் தாமே தோன்றுவனவும் அல்ல; தாமாகச் செயற்படுவனவும் அல்ல. சிவசத்தி தோற்றுவிக்கவே இவை தோன்றும்; சிவசத்தி உடனிருந்து செலுத்தவே இவை தொழிற்படும்.

இத்தத்துவங்களும் சிவம் என்னும் தத்துவமே முதலில் தோன்றியதும், மற்ற எல்லாவற்றிற்கும் மேல் உள்ளதும் ஆகும். இத்தத்துவம் நாதம் என்றும் சொல்லப்படும். ஆகவே, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த நிலையை நாதாந்தம் என நூல்கள் குறிப்பிடும்.

எல்லாவற்றிற்கும் முன்னர்த் தோன்றியது சிவம் எனப்படும் நாத தத்துவம் எனில், எல்லாவற்றிற்கும் பின்னர்த் தோன்றுவது பூதங்களுள் கடைசியாக உள்ள நிலம் என்னும் தத்துவமேயாகும். இதுபற்றியே, தத்துவங்களின் தொகையைக் கூறும் பொழுது, நாதம் முதல் நிலம் முடிய உள்ளவை என நூல்கள் கூறும். இவ்வாறு கூறுவது தோற்ற முறை பற்றியாம். ஒடுக்க முறை பற்றிக்கூறும் பொழுது, நிலம் முதல் நாதம் முடிவானவை என்று கூறப்படும்.

மற்ற இந்திய தத்துவ்ஙகள் பிரகிருதியிலிருந்து தோன்றும் இருபத்து நான்கு தத்துவங்களையே கொள்ளும். சைவ சமயம் ஒன்றே அவற்றிற்கு மேலே வித்தியா தத்துவங்கள் ஏழும். சிவ தத்துவங்கள் ஐந்தும் ஆகிய பன்னிரண்டு  தத்துவங்களைச் சேர்த்துத் தத்துவங்கள் முப்பத்தாறு எனச் சிறப்பாகக் கொள்ளும்.

தவம் : பார்க்க : சிவ புண்ணியம்

தாதான்மியம் : பொருள் ஒன்றாயினும் ஒருவகையில் இரண்டு போலக்காணப்படும் தன்மை தாதான்மிய சம்பந்தம் எனப்படும். குணத்திற்கும் அதனையுடைய குணிக்கும் இடையேயுள்ள இயைபு தாதான்மியமேயாகும். தமிழில் இது தற்கிழமை எனப்படும்.

எடுத்துக்காட்டாக, சூரியன் ஒன்றேயாயினும் சூரியனையும் அதன் ஒளியையும் இருவேறு பொருள் போல வைத்துச் சொல்லுகிறோம்; சூரியன் தகிக்கிறான் என்கிறோம்; வெயில் தகிக்கிறது என்கிறோம். இரண்டு வாக்கியத்திற்கும் கருத்து ஒன்றுதான். இதனால், சூரியனும் அதன் ஒளியும் (வெயிலும்) வேறல்ல என்பது விளங்கும். ஆயினும் வேறுபோல வைத்துச் சொல்லுகிற வழக்கம் உள்ளது.

அதுபோலச் சிவம் என்றும் சத்தி என்றும் இருபொருள் போல வழங்கப்படினும் அவை இரு பொருள் எனப்படா. ஆற்றலாகிய சத்தி குணமும், அதனையுடைய சிவம் குணியும் ஆகும். பிற பொருளை நோக்காது தானாய் நிற்கும் நிலையில் சிவம் என்றும்,  பிற பொருள்களை நோக்கி அவற்றைச் செயற்படுத்துபவனாய் நிற்கும் நிலையில் சத்தி என்றும் இரு வகையாய் நிற்பன். எனவே சிவம், சத்தி என்ற இவ்விரண்டும் நிலை வேறுபாடேயன்றிப் பொருள்வேறுபாடு அன்று.

இவ்வாறு பொருள் ஒன்றேயாயினும் இரண்டுபோல எண்ணப்படுதல் தாதான்மிய சம்பந்தம் எனப்படுகிறது.

திருவைந்தெழுத்து : சிவமூல மந்திரமாகிய திருவைந்தெழுத்து, அனைத்து நூல்களின் முடிவாய் உள்ள மகாவாக்கியம் எனப்படும்.

சிவாயநம என்னும் திருவெழுத்தும் ஐந்தும் முறையே சிவம், அருள், உயிர், திரோதானசத்தி, ஆணவமலம் என்னும் பொருள்களைக் குறிப்பன.

நடுவன் உள்ள ய ஆகிய உயிர் பின்னுள்ள ம ஆகிய ஆணவ மலத்துட்பட்டு அறியாமையில் அழுந்தியும், ந ஆகிய இறைவனது திரோதன சத்தியால் செலுத்தப்பட்டு மாயை, கன்மங்களைப் பொருந்தி உலக போகத்தில் அழுந்தியும் நிற்கும். எனவே நம என்ற ஈரெழுத்துக்களும் முறையே சகலம், கேவலம் ஆகிய நிலைகளைக் குறிக்கின்றன என்பது விளங்கும். உயிர் நம வில் அழுந்தியிருக்கும் நிலையே கட்டு நிலை.

ய ஆகிய உயிருக்கு முன்னுள்ள சி, வா என்பவை தந்தையும் தாயுமாய் உள்ள சிவமும், அதனைப் பிரியாத திருவருளும் உயிர் உணர்வில் உடனாகக் கலந்திருப்பதை உணர்த்தும். உயிர் தனக்கு முன்னாகவுள்ள அம்மையப்பரைத் தன் அறிவின்கண் காண முற்படாமல், உலகத்தை மட்டுமே அறிந்து அனுபவித்து வருகிறது.

உயிர் நம வை விடுத்து, அறியாமையாகிய கேவலமும், சிற்றறிவாகிய சகலமும் அணுகாதவாறு, வா ஆகிய திருவருளைச் சார்ந்து நிற்பதே சுத்த நிலையாகும். திருவருள் அவ்வுயிரைச் சிவத்திடம் சேர்ப்பிக்கும். சிவத்தில் அழுந்தி நிற்றலே இன்புறு நிலையாகும்,

நகாரம் முதலாக உள்ள நமசிவாய என்பது தூல பஞ்சாக்கரம் என்றும், சிகாரம் முதலாக உள்ள சிவாயநம என்பது சூக்கும பஞ்சாக்கரம் என்றும் கூறப்படும்.

நகாரம் முதலாக ஓதுவார்க்கு உலகப் பயன் கிடைக்கும் என்றும், உலகப் பயனில் நாட்டமின்றிப் பிறவி நீக்கத்தை வேண்டுவோர் சிகாரம் முதலாக ஓத வேண்டும் என்றும் நூல்கள் கூறும்.

திரோதான சத்தி : பார்க்க : ஐந்தொழில்

தீக்கை : தீக்கை (தீட்சை) என்பதற்கு அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைத் தருவது என்பது பொருள்.

தீக்கை அதனைப் பெறுதற்கு உரியோரது சத்தி நிபாத நிலையை (பக்குவ நிலையை) நோக்கியே செய்யப்படும்.

தீக்கையின் வகை : அவரவரது தகுதி நிலைக்கேற்பத் தீக்கை பல வகையாய் நிகழும். அவை :

நயன தீக்கை : ஞானாசிரியர் தமது கண்களைச் சிவனது கண்களாகப் பாவித்து அவற்றால் நோக்கி மாணவனைச் சிவமாந் தன்மையை அடையச் செய்தலே நயன தீக்கையாகும்.

பரிச தீக்கை : ஞானாசிரியர் தமது கையைச் சிவனது கையாகப் பாவித்து அதனால் மாணவனது தலையைத் தொட்டு அவனைச் சிவமாம் தன்மையை அடையச் செய்தலே பரிச தீக்கையாகும் ஆசிரியர் தமது பாதங்களைச் சிவனது பாதங்களாகப் பாவித்து அவற்றை மாணவனது தலைமேற் சூட்டுதலும் பரிச தீக்கையே ஆகும். இதனைத் திருவடி தீக்கை என்பர்.

வாசக தீக்கை : ஞானாசிரியர் மகா வாக்கியங்களையும், திருவைந்தெழுத்து மந்திரத்தையும் அவற்றின் பொருளோடு மாணவனுக்கு உபதேசித்தலே வாசக தீக்கையாகும்.

மானச தீக்கை : ஞானாசிரியர் யோக முறையினாலே தமது உடலினின்றும் மாணவனது இதயத்திற் புகுந்து, அவனது ஆன்ம சத்தியை வாங்கிக் கொணர்ந்து, தமது இதயத்தில் உள்ள சிவவொளியுடன் கலக்கச் செய்து அதனால் மாணவனது ஆன்மாவைச் சிவமாகச் செய்து, மீண்டும் அவ்வான்ம சத்தியை முன்போல யோகமுறையால் மாணவனது இதயத்தில் சேர்த்தால் மானச தீக்கையாகும்.

சாத்திர தீக்கை : ஞானாசிரியர் தாம் அறிவுறுத்திய உபதேச மொழிகளில் மாணவனுக்குத் தெளிவு பிறக்கும் பொருட்டு ஞான சாத்திரங்களை உணர்த்தி சிந்திக்கச் செய்தல் சாத்திர தீக்கையாகும்.

யோக தீக்கை : ஞானாசிரியர், மாணாக்கன் ஆதார யோகம், நிராதார யோகம் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு பயிற்றுதல் யோக தீக்கையாகும்.

ஒளத்திரி தீக்கை : ஞானாசிரியர், மாணாக்கனுக்கு உண்மை ஞானம் விளங்குதற்குத் தடையாய் உள்ள சஞ்சித வினைகளை, ஓம குண்டத்தில் எரிவளர்த்து ஆகுதி செய்யும் முறையாகிய அக்கினி காரியத்தால் போக்குதலே ஒளத்திரி தீக்கையாகும்.

ஒளத்திரி தீக்கையை  ஆசிரியர் செய்யும் முறை இரண்டு. அவை அவை கிரியாவதி, ஞானவதி என்பன.

அவற்றுள் கிரியாவதியாவது, குண்டம், மண்டலம் முதலியவற்றை வெளியிலே பலர் காணும்படி அமைத்துக்கொண்டு செய்வது. ஞானாவதியாவது, அவற்றை வெளியே கொள்ளாமல், மனத்தால் செய்யப்படும் பாவனையினாலே அமைத்துக் கொண்டு செய்வது.

ஞானாவதியாகவாயினும், கிரியாவதியாகவாயினும் செய்யப்படும் ஒளத்திரி தீக்கை சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம் என நான்கு வகைப்படும்.

சமய தீக்கை : அவற்றுள் முதலில் செய்யப்படுவது சமய தீக்கையாகும். இது சிறிய அளவிலே செய்யப்படும். தீக்கை செய்யும் இடம் தீக்கைமண்டபம் எனப்படும். அவ்விடத்தில் சிவ வழிபாடுகளைச் செய்வித்து, சம்பாத ஓமம் என்னும் ஓமத்தைச் செய்து, அதன் பயனாக மாணாக்கனது ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, சிவ மூல மந்திரத்தை (திருவைந்தெழுத்தை) உரிய முறையில் உபதேசித்து, நாள் தோறும் செய்தற்குரிய அனுட்டானங்களைச் செய்யும்படி பணித்து, சைவ சமய ஒழுக்கத்தை மேற்கொள்ளும்படி செய்வது சமய தீக்கையாகும்.

சமய தீக்கை பெற்றவன் சமயி எனப்படுவான். சிவாகமங்களைக் கேட்டல், தோத்திர சாத்திர பாராயணம், சிவாலய தரிசனம், சிவாலயப் பணி சரியைத் தொண்டுகளைச் செய்ய அவன் உரியவனாவான்.

விசேட தீக்கை : சமய தீக்கைக்குப் பின்பு மாணவனைச் சிவ புத்திரனாகச் செய்யும் கிரியையே விசேட தீக்கையாகும். இத்தீக்கை பெற்றவன் புத்திரன் எனப்படுகிறான்.

இவ்விசேட தீக்கையில் ஆன்மார்த்த சிவபூசை நியமம் ஆக்கப்படும். ஆன்மார்த்த பூசையே கிரியை என்னும் தொண்டாகும்.

கிரியையில் நின்ற மாணவன் பின்னர் யோகத்தில் விருப்பம் உடையனாயின், அதனைச் செய்யும் முறையும் ஆசிரியரால் உணர்த்தப்படும்.

நிருவாண தீக்கை : சமயம், விசேடம் என்னும் தீக்கைகளைப் பெற்றுச் சரியை கிரியை யோகங்களில் நின்று, பக்குவ முதிர்ச்சி பெற்று, உலகப் பொருளில் வெறுப்பும் வீடு பேற்றில் விருப்பும் நிகழப் பெற்றோர்க்கு வீடு பேற்றிற்கு வழியாகிய ஞானத்தைத் தரும் முறையே நிருவாண தீக்கையாகும். இதனை ஞானதீக்கை எனவும் வழங்குவர்.

ஞானத்திற்குத் தடையாகிய சஞ்சித வினைகள் ஆறு அத்துவாக்களை இடமாகக் கொண்டிருக்கும். வீடு பேற்றை விரும்பும் மாணாக்கனுக்கு ஆசிரியர் அக்கினி காரியத்தால் அந்த ஆறு அத்துவாக்களிலும் உள்ள சஞ்சித கன்மத்தைப் போக்குவார். இவ்வாறு வினை மாசு நீங்கித் தூய்மை பெற்ற நிலையில் ஆசிரியர் ஞானத்தை உணர்த்துவார். அம் மாணாக்கன் அவர் உணர்த்திய ஞானத்தை உணர்த்தியவாறே கொண்டு வீடு பேற்றினை அடைவான்.

அத்துவாக்களில் உள்ள சஞ்சித வினைகளைப் போக்கும் செயல் அத்துவ சுத்தி எனப்படும்.

அபிடேகம் : இதனை ஆசாரிய அபிடேகம் என்பர். ஆசாரியர் ஆகும் தன்மையுடையோர்க்கே இது செய்யப்படும். இதனைப் பெற்றோர் பிறார்க்குத் தீக்கை செய்யும் உரிமை உடையராவர்.

இங்ஙனம் தீக்கைகள் பலவகையாய்ச் செய்யப்படுகின்றன. உண்மையில் தீக்கை பயன் தருதல், அதனைச் செய்விக்கும் ஆசிரியர், அதனைப் பெறும் மாணாக்கர் ஆகிய இருவரது தகுதியையும் பொறுத்தது ஆகும்.

பசு ஞானம் : பாசமாகிய உலகப் பொருள்களின் வயப்பட்டு அவையே தானாக மயங்கி அறிந்து வரும் உயிர் திருவருள் உபதேசம் பெற்று, ஐம்பொறி முதலிய கருவிகளும் உலகப் பொருள்களும் ஆகிய அவை அறிவற்ற சடப் பொருள் என்பதையும், தானல்ல என்பதையும், தான் அவற்றிற்கெல்லாம் மேலாகிய சித்துப் பொருள் என்பதையும் உணரும். அவ்வாறு உணர்ந்து தன்னைக் கருவி கரணங்களின் வேறாகக் கண்டு நீங்கும்.

இயற்கையாக உயிர் விரிந்த அறிவுடையது. உடம்பும் ஐம்பொறி முதலிய கருவிகளும் அதன் வியாபக அறிவை விளங்கவொட்டாமல் தடுத்துச் சிற்றறிவைச் செய்துவந்தன. அவற்றை வேறாகக் கண்டு நீங்கியவுடன் உயிரின் வியாபக அறிவு விளங்கித் தோன்றும். அதனால் எல்லாவற்றையும் அறியும் நிலை உண்டாகும். இதனைக் கண்டு வியந்த உயிர் அந்நிலையில் தன்னையே பரம்பொருள் என மயங்கி அறியும். அப்பொழுதும் தனது வியாபக அறிவை விளக்கி நிற்பது முதல்வனது திருவருளே என்பதை உணர்வதில்லை.

இவ்வாறு பசுவாகிய தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும் அறிவு பசு ஞானம் எனப்படும்.

பத முத்தி : சரியை, கிரியை, யோகம் ஆகிய சிவ புண்ணியங்களைச் செய்தோர் இடைநிலைப் பயனாக அடைவது பத முத்தியாகும். பதம் என்ற சொல் பதவி  எனப் பொருள்படும். பத முத்திக்குரிய உலகங்கள் உள்ளன. அவ்வுலகங்களிற் சென்று சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகியவற்றைப் பெறுவர்.

அவ்வுலகங்களில் எங்கும் தடையின்றி இயங்கும் உரிமையைப் பெறுதல் சாலோகம் எனப்படும். ஒரு மனையில் பணிபுரியும் பணியாளர் அம்மனையினுள் எங்கு வேண்டினும் செல்லும் உரிமையைப் பெற்றிருத்தல் போன்றது இது. இது பற்றியே இப்பயனைத்தரும் சரியை வழிபாடு தாசமார்க்கம் என்று கூறப்படுகிறது. தமிழில் அடிமை நெறி எனப்படும்.

அவ்வுலகங்களில் மேற்கூறிய பணியாளர் போல அகல நில்லாது மைந்தர் போல அங்குள்ள புவன பதிகளாகிய தலைவர்களோடு அருகிருக்கும் உரிமையைப் பெறுதல் சாமீபம் ஆகும். இதுபற்றியே இப்பயனைத் தரும் கிரியை வழிபாடு சற்புத்திர மார்க்கம் என்று கூறப்படுகிறது. தமிழில் மகன்மை நெறி எனப்படும்.

அவ்வுலகங்களில் தோழர் போல அப்புவன பதிகளோடு ஒத்த உருவம், பெயர் முதலியன பெற்று அளவளாவி இருக்கும் உரிமையை உடையவராதல் சாரூபம் ஆகும். இதுபற்றியே இப்பயனைத் தரும் யோக வழிபாடு சக மார்க்கம் என்று கூறப்படுகிறது. தமிழில் தோழமை நெறி எனப்படும்.

பத முத்தியை அடைந்தோர் மீண்டும் நிலவுலகிற் பிறந்து, ஞானம் பெறுதற்கு வாய்ப்பான நல்ல சூழலைப் பெற்று, தவத்தை முற்றச் செய்து, குரு மூர்த்தியின் அருளால் ஞானத்தை அடைந்து பின் முடிவான பரமுத்தியினை எய்துவர்.

சரியை முதலியவற்றிற்கு இடை நிலைப் பயன் பத முத்தியாயினும், உண்மைப் பயன் ஞானமேயாகும்.

பதி : சைவ சமயம் இறைவனைச் சிவம் என்னும் சிறப்புப் பெயரால் வழங்கும்; ஆயினும் தத்துவ முறையில் கூறும்போது பதி என்றே குறிப்பிடும்.

பதி என்பதற்குக் காப்பவன் என்பது பொருள். தன்னைச் சார்ந்தாரைக் காப்பவனே தலைவன் ஆவான். இறைவன் தன் கீழ் உள்ள உயிர்களுக்கு நலம் செய்து காப்பவன் ஆதலின் பதி எனப்பட்டான்.

பதிப்பொருள் ஒன்றே; பல இல்லை. சிவபெருமான் ஒருவனே பதி என்பதையும், ஏனைய தேவர்கள் அனைவரும் உயிர் இனத்தவராகிய பசுக்களே என்பதையும் அறிந்து பதிப்பொருளையே வழிபடுதல் வேண்டும்.

பதியின் இயல்புகளாகச் சைவ சித்தாந்தம் கூறுவன எண் குணங்கள் ஆகும். அவை தன் வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினை ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவிலா ஆற்றல் உடைமை, வரம்பிலா இன்பம் உடைமை என்பன.

பதி ஞானம் : பதிப் பொருளினது அறிவு பதிஞானம் எனப்படும். பதி சிவமே யாதலின் அது சிவஞானம் என்றும் கூறப்படும்.

இறைவன் பாச ஞானத்தாலும், பசு ஞானத்தாலும் அறியப்படாதவன். கருவி கரணங்களால் வரும் அறிவு பாச ஞானமாகும். ஐம்பொறி முதலிய கருவிகள் எல்லாம் அழியும் பொருள்களை அறிய முடியுமே அன்றி, அழிவில்லாத பரம் பொருளை அறிய இயலாது. இனி, உயிரறிவாகிய பசு ஞானமும் தானே தனித்து நின்று இறைவனை அறிய மாட்டாது. அதனால் அவன் பாச ஞானம், பசு ஞானம் ஆகியவற்றுக்கு அகப்படான் என்பதே உண்மையாகும். இறைவனை மனம், வாக்குகள் எட்டாதவன் என்று கூறும்பொழுது, மனம் என்பது பசு ஞானத்தையும் வாக்கு என்பது பாச ஞானத்தையும் குறித்து நிற்கும்.

பதியாகிய முதல்வனை அவனது அறிவாகிய பதி ஞானத்தைக் கொண்டே அறிதல் இயலும். பதி ஞானமே திருவருள் எனப்படுகிறது. ஆதலின், அவனருளே கண்ணாகக் காணுதல் என்றும், அவனருளாலே அவள் தாள் வணங்குதல் என்றும் பெரியோர்கள் அனுபவமாகக் கண்டு கூறியுள்ளார்கள்.

பரமுத்தி : முடினான ஞானத்தைப் பெற்று, நிட்டையில் மீளாது நிற்கும் நிலையுடையோர், உடல் சுழன்று, சிவ பெருமானோடு இரண்டறக் கலத்தலாகிய பேரின்ப நிலையைத் தலைப்படுவர். இதுவே முடிவான பரமுத்தியாகும். சாயுச்சம் என்றும் இதனைக் கூறுவர்.

பாச ஞானம் : உலகமும் உலகப் பொருள்களும் பாசமாகிய மாயையினின்றும் தோன்றியவை. எனவே அவை பாசப் பொருள்கள் எனப்படும். அவற்றை உயிர், கண் முதலிய புறக்கருவிகளையும், மனம் முதலிய அகக் கருவிகளையும் கொண்டு அறியும். அக்கருவிகளும் மாயையின் காரியங்களேயாகும்.  இவ்வாறு அறியப்படும் பொருள்களும் அறிதற் கருவிகளும் ஆகிய அனைத்தும் பாசமேயாதல் விளங்கும். இவை சடமாயும், உயிருக்கு வேறாயும் உள்ளவை. ஆனால் உயிர் சித்தாகிய தனது உண்மை நிலையை அறியாது, சடமாகிய இவற்றையே தானாக மயங்கியறியும். அவ்வறிவு பாச ஞானம் எனப்படும்.

பாசமாகிய கருவிகளைக் கொண்டு, பாசமாகிய பொருள்களை அறியும் அறிவு பாச ஞானம் ஆயிற்று.

பாசம் : பாசம் என்ற சொல் கட்டுதலைச் செய்வது என்ற பொருளைத் தரும். குற்றவாளிகளின் கையிலும் காலிலும் மாட்டப்படும் விலங்கு அவர்களைச் செயற்படவொட்டாமற் செய்கிறது. அதுபோல உயிர்களைப் பிணித்து, அவற்றின் அறிவு செயல்களைக் கட்டுப்படுத்தி நிற்பவை மூன்றாகும். அவை ஆணவம், கன்மம், மாயை என்பன. இம்மூன்றுமே பாசம் எனப்படும்.

பாசம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் தளை என்பது.

பெத்தம் : கேவலம், சகலம் ஆகிய இரண்டு நிலைகளிலும் ஆன்மா மலத்திற் கட்டுண்டு நிற்றலின், அந்நிலை பந்தம் எனப்படுகிறது. பந்தம் என்பதற்குக் கட்டு என்பது பொருள். பந்தம் என்ற வடசொல் பெந்தம் என்றாகிப் பின் பெத்தம் எனத் திரிந்து நின்றது.

மலங்கள் ஐந்து : மலம் என்பதற்கு அழுக்கு என்பது பொருள். உயிரைப் பற்றியுள்ள மலங்கள் மூன்று. அவை ஆணவம், கன்மம், மாயை என்பன. இம்மூன்றும் உயிரின் தூய்மையைக் கெடுத்து நிற்றலாலும், பின்னர் அகற்றப்படுதலாலும் மலங்கள் எனப்பட்டன.

இம்மூன்றனுள் ஆணவமலம் ஒரு காரணம் பற்றி வாராமல் ஆன்மாவோடு இயற்கையாக உள்ளது. ஆதலின் சகச மலம் எனப்படுகின்றது. மாயையும் கன்மமும் ஆணவத்திற்கு மாற்றாய் அதனை நீக்குதற் பொருட்டு ஆன்மாவைப் பின்னேவந்து பற்றிய காரணத்தால் அவை ஆகந்துக மலம் எனப்படுகின்றன. ஆகந்துகம் - பின்வந்தது; செயற்கை.

இவற்றுள் மாயை காரணநிலை, காரிய நிலை என்ற இரு நிலைகளையுடையது. காரணநிலைக்கு உரிய பெயரே மாயை என்பது. மாயையின் காரிய நிலையை மாயேயம் என்ற பெயரால் குறிப்பர். மாயை காரணநிலையில் நிற்குமிடத்து உயிர்களைப் பிணிக்காமல், மாயேயம் எனக் காரியநிலையை அடைந்த பின்பே உயிர்களைப் பிணித்து நிற்பதாகும். அதுபற்றியே மாயை, மாயேயம் என்னும் இருநிலைகளையும் இருமலங்களாக வைத்துக்கூறுதல் உண்டு.

இம்மலங்கள் தத்தம் காரியத்தைச் செய்யும்படி அவற்றைச் செயற்படுத்துவது இறைவனது சத்தியேயாகும். அவ்வாறு  செயற்படுத்துவதனால் அவை பின்வரும் காரியத்தைச் செய்கின்றன. ஆணவ மலம் உயிருணர்வைத் திரிபுபடுத்தி, இழிந்தனவாகிய உலகப் பொருள்களையே உயர்ந்தனவாக மதிக்கும்படி செய்கிறது. கன்மமலம் இன்பத் துன்பங்களைப் பயந்து, உயிருணர்வை அவற்றில் அழுந்தி நிற்கச் செய்து மயக்குகிறது. மாயாமலம் உலகப் பொருள்களாய் அமைந்து உயிருணர்வை மயக்கித் தம்மையே பற்றும்படி செய்கிறது. சுருங்கக் கூறினால், இம்மலங்கள் இறைவனை நோக்கவிடாது உலகத்தையே நோக்கும்படி செய்கின்றன எனலாம்.

இறைவனது சத்தி மலங்களைச் செயற்படுத்தி இவ்வாறு உயிருணர்வை மறைக்கும்படி செய்விப்பதனால் திரோதாயி எனும் பெயரைப் பெறும். திரோதாயிமறைத்தலைச் செய்வது. திரோதானசத்தி மலங்களின் வழி நின்று உயிருக்கு மறைத்தலைச் செய்வதனால் அதனையும் ஒரு மலமாகச் சொல்லுவர்.

இவ்வாறு ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என மலங்கள் ஐந்தாகின்றன.

மல பரிபாகம் : உயிரை மூடி மறைத்திருக்கும் இருள் மலமாகிய ஆணவத்தை நீக்குதற் பொருட்டே இறைவனது திரோதான சக்தி மாயையும், கன்மத்தையும் கூட்டுகிறது. அஃதாவது, உயிர் உலக வாழ்க்கையில் ஈடுபட்டு வினைகளைச் செய்து இன்ப துன்பங்களை நுகரும்படி செய்கிறது. திரோதான சத்தியால் தூண்டப்பெற்றுச் செயற்படும் ஆணவ மலம் உயிரறிவை விபரீத அறிவாகச் செய்து, கீழான உலகப்பொருள்களையே மேலான பொருளாக மதிக்கும்படி செய்கிறது. இவ்வாறு எண்ணற்ற பிறவிகளில் ஆணவமலம் செயற்படுவதினால் அதன் சத்தி படிப்படியாக மெலிவடைகிறது. ஆணவ மலம் ஏனைய மாயை, கன்மங்களால் தேய்வடைந்து நீங்கும் நிலையை அடையும். இந்நிலையே மல பரிபாகம் எனப்படும். இது, கண்ணில் படர்ந்தள்ள படலம்பழுத்து மருத்துவரால் அறுத்து எறிதற்கேற்ற தகுதியை அடைந்து நிற்பது போன்றதாகும்.

மாயை : குடத்திற்குக் களிமண் மூலப் பொருளாவதுபோல இவ்வுலகிற்கு மூலப் பொருளாயிருப்பது மாயை என்னும் மிக நுண்ணிய பொருளாகும். அஃது அருவமாய் எங்கணும் விரிந்து பரந்து கிடப்பது. அதிலிருந்து தோன்றும் காரியமே உலகமும் உலகப் பொருள்களும்.

உலகிற்கு முதற்காரணமாகிய மாயை சுத்தமாயை என்றும், அசுத்த மாயை என்றும் இரு பகுதிப்பட்டு நிற்கும். சுத்த மாயை என்பது ஆணவம், கன்மம் ஆகியவற்றின் கலப்பில்லாமல் தூயதாய் நிற்கும் பகுதி. ஆணவம், கன்மம் ஆகியவற்றின் கலப்பினால் தூய்மையிழந்த பகுதி அசுத்த மாயையாகும்.

பொதுவாக, மாயை என்றாலே அஃது அசுத்த மாயையைத்தான் குறிக்கும். சுத்த மாயையை விந்து என்ற சொல்லால் குறிப்பர்.

சுத்த மாயை தூயதாய், அசுத்த மாயையையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அதற்கும் மேலாய் விரிந்து நிற்பது. அசுத்த மாயை சுத்த மாயையின் உள்ளே அடங்கி நிற்பது.

மாயையினின்றும் தோன்றும் காரியங்களை மாயேயம் என்பர். அவை தனு,கரணம், புவனம், போகம் என்பன. தனு-உடம்பு; கரணம்-கருவி; புவனம்-உலகம்; போகம்-நுகர்ச்சிப்பொருள்.

மூவகைத் திருமேனிகள் : இறைவனுக்கு வடிவம் இல்லை. இதுவே அவனது உண்மை நிலை. ஆயினும் நூல்களில் அவனுக்குப் பலவகை  வடிவங்கள் சொல்லப்படுகின்றன. அவன் தனக்கென்று வரையறுத்த ஒரு வடிவம் உடையனவாக இருந்தால், பலவகை உருவங்களைக் கொள்ளுதல் இயலாது அன்றோ? அவன் தனக்கென்று நியமித்த ஒரு வடிவம் இல்லாதவன் ஆதலால் எவ்வுருவத்தை வேண்டுகிறானோ அவ்வுருத்தை வேண்டியவாறே கொள்வான் என்பது புலனாகும்.

வடிவம் இல்லாதவன் ஏன் வடிவம் கொள்ள வேண்டும் என்னும் வினாவுக்கு, உயிர்களின் பொருட்டே அவன் வடிவம் கொள்கிறான் என்பதே விடையாகும். உருவமற்ற நிலையை உயிர்களால் பற்ற முடியாது; மனத்தாலும் நினைக்க இயலாது. ஆகவே உயிர்கள் தன்னை உணர்ந்து உய்ய வேண்டும் என்னும் கருணையினாலேயே இறைவன் உருவங் கொள்ளுகின்றான்.

இறைவன் கொள்ளுகின்ற வடிவம், நம் உருவத்தைப் போல மாயையினால் ஆகியதன்று. சத்தியே அவனுக்கு வடிவமாய் அமையும்.

இறைவன் தனது சத்தியினால் கொள்ளும் வடிவம் மூன்று வகைப்படும். அவை உருவம், அருவம், அருவுருவம் என்பன. வடமொழியில் முறையே சகளம், நிட்களம், சகள நிட்களம் எனப்படும்.

உருவம் என்பது கண்ணுக்குப் புலப்படுவது. ஆயினும் கடவுளின் உருவம் நம் போன்றோர் கண்ணுக்குப் புலனாகாது. ஞானிகள் கண்ணுக்கே அது புலனாகும். அடியார்க்கு அருள்புரிய வரும் காலத்தில் இறைவன் கொள்வது இவ்வுருவத் திருமேனியேயாகும்.

அருவம் என்பது கண்ணுக்குப் புலனாகாதது; ஆயினும் வரம்புபட்டு நிற்பது.

அருவுருவம் என்பது ஒளிப்பிழம்பாய் நிற்பது; உயர்ந்தோர் காட்சிக்குப் புலனாவது; கை, கால் முதலிய உறுப்புகள் இல்லாதது. இலிங்க வடிவமே அருவுருவத் திருமேனியாகும்.

சத்தி என்பது அருளேயாதலின், இறைவனது திருமேனிகளும், அவற்றில் அமைந்த ஆடை, அணிகலன், படைக்கலம் முதலியனவும், அவன் எழுந்தருளியிருக்கும் இடமும் ஆகிய எல்லாம் அருளேயன்றி வேறில்லை.

வாக்கு : நமக்கு உலகப் பொருள் பற்றிய அறிவு மொழியின் துணையினாலேயே உண்டாகிறது. சைவ சித்தாந்தத்தில் மொழியைச் சொல்லுலகம் என்பர்.

சொல்லுலகமாவது எழுத்துக்களும், எழுத்துக்களால் ஆகிய சொற்களும், சொற்றொடர்களும் ஆகும். எழுத்துக்கள் வன்னம் எனப்படும். சொற்கள் பதம் எனப்படும். சொற்றொடர் மந்திரம் எனப்படும். இவ்வாறு வன்னம், பதம், மந்திரம் எனச் சொல்லுலகம் அமையும்.

இச்சொல்லுலகம் வாக்கு எனப்படும். அது சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என நால்வகையாய் நிற்கும்.ஒன்றைவிட ஒன்று பருமையாய் வளர்ச்சியடைந்த வடிவங்களே இவை எனலாம்.

அறிவுக்குக் காரணமாகிய வாக்கு சுத்தமாயையிலிருந்தே தோன்றும். முதலில் சுத்த மாயையின் ஒரு பகுதி, பின்னர் சொல்வடிவமாய் வளர்வதற்கேற்ற தகுதியைப் பெற்று நிற்கும். இவ்வாறு சுத்தமாயை நிற்கும் நிலையே சூக்குமை வாக்கு எனப்படும். இதனை நாதம் என்றும் கூறுவர்.

சூக்குமை வாக்கு வளர்ச்சியடைந்து, பைசந்தி வாக்கு ஆகும். இதில் சொல் வடிவம் சிறப்பு வகையில் விளங்காது பொதுவாக விளங்கி நிற்கும். பைசந்தி என்பதற்கு விளங்குவது என்பது பொருள். சொல் வடிவம் அறவே விளங்காத நிலையே சூக்குமை வாக்கு. அது போலின்றி இஃது ஒருவாறு விளங்கி நிற்கும் நிலை யாதலின் இப்பெயர் பெற்றது.

பொதுவாக விளங்கி நின்ற பைசந்தி வாக்கு மேலும் வளர்ச்சியடைந்து, சொல் வடிவம் சிறப்பாக விளங்கப்பெற்று, கழுத்தினிடத்தில் மெல்ல ஒலித்து நிற்பது மத்திமை வாக்கு ஆகும்.

வைகரி வாக்கு என்பது, கழுத்து அளவில் மெத்த ஒலித்த சொற்கள் பல், நா, உதடு முதலிய உறுப்புகளின் தொழிற்பாட்டால்  நன்கு வெளிப்பட்டு, சொல்வோன் செவிக்கும் கேட்போர் செவிக்கும் புலனாகி நிற்பது. வைகரி என்பதற்கு விகாரம் உடையது, வேறுபட்டு நிற்பது என்பது பொருள். வெவ்வேறு சொற்களில் வேறுபட்டு வெளிப்படுதலின் வைகரி வாக்கு எனப்பட்டது.

எல்லா வகை உயிர்களுக்கும் பொருளைப் பற்றிய சிறப்புணர்வு உண்டாவதற்கு இவ்வாக்குகள் இன்றியமையாது  வேண்டப்படுவனவாகும்.

வினை : வினை எனினும், கன்மம் எனினும் ஒன்றே. இந்திய சமயங்கள் பலவும் வினை உண்மையை ஒப்புக் கொள்கின்றன. கடவுளை ஏற்றுக் கொள்ளாத சமயங்கள் கூட வினையை உடன்படுகின்றன என்பது நோக்குதற்குரியது.

சைவ சித்தாந்தம் வினை பற்றிய அடிப்படையாக நான்கு உண்மைகளை அமைத்துக் கொள்கிறது.

அவை செய்வான், செய்வினை, வினைப்பயன், சேர்ப்பான் என்பவை.

செய்வான்= உயிர்

செய்வினை = மனம், மொழி, மெய் என்னும் மூன்றினாலும் செய்யும் நல்வினை, தீவினைகள்.

வினைப்பயன் = செய்த வினையினால் விளையும் பயன்கள்.

சேர்ப்பான் = வினை சடம் ஆதலால் அது தானே தன்னைச் செய்தவனைச் சென்று அடையாது. எல்லாம் வல்ல இறைவனே அவரவர் செய்த வினைப் பயனைக் காலம் அறிந்து, இடம் அறிந்து ஊட்டுவான்.

இப்பொழுது செய்கின்ற வினைகள் ஆகாமியம் எனப்படும். செய்த வினைகள் அழியாமல் நுட்பமாய் நிலைபெற்று நிற்கும் பொழுது சஞ்சிதம் எனப்படும். அவற்றுள் பக்குவப்பட்ட வினைகள் இன்ப துன்பங்களாய் வந்து பயன் தருங்காலத்தில் அவை பிராரத்தம் என்னும் பெயரைப் பெறும். பிராரத்த வினையையே ஊழ் என்று சொல்லுகிறோம்.

எனவே, ஆகாமியமாகச் செய்யப்பட்ட வினைகள் சஞ்சிதமாகக் கிடக்கும். அவற்றுள் பயன்தரத் தக்கவை பிராரத்தமாய் வர, அவற்றை நுகர்தற்கேற்ற பிறவியை உயிர்கள் அடைந்து அனுபவிக்கும். அவ்வாறு பிராரத்த வினையை அனுபவித்து முடித்தவுடன் அப்பிறவி நீங்கி மற்றொரு பிறவியிற் செல்லும்.

உயிர் செய்கின்ற முயற்சியின் வழியாகவே பிராரத்த வினை புகுந்து இன்ப துன்பமாகிய பயனைத்தரும். அம்முயற்சியால் புதிய வினைகளாகிய ஆகாமியம் ஏறும். அதனால் சஞ்சிதம் அளவின்றிப் பெருகும். இவ்வாறு வினையால் பிறப்பும், பிறப்பால் வினையும் இடையீடின்றித் தொடரும்.

சமணம், பவுத்தம் போன்ற சமயங்கள் வினைக்கு முதன்மை கொடுக்கின்றன; வினை முழுவதையும் அனுபவித்தே  கழிக்க வேண்டும் என்கின்றன. சைவ சமயம் திருவருளுக்கு முதன்மை கொடுக்கிறது. திருவருளின் துணையால் வினை வலியை நீக்கிக் கொள்ளலாம் என்பதை வற்புறுத்துகிறது.

வீடுபேறு : முத்திநிலை தமிழில் வீடுபேறு என வழங்கப்படும். இதில் வீடு, பேறு என்ற இரு சொற்கள் உள்ளன. விடுதல் வீடு; பெறுதல் பேறு. விடுதலாவது பாசத்தை நீக்குதல், பெறுதலாவது சிவத்தைச் சார்தல். பாசநீக்கமும் சிவப்பேறுமாகிய இவையே உயிர் அடைதற்குரிய முடிநிலைப் பயன்களாகும். இவற்றுள் பாச நீக்கமாவது, நிலைபேறு இல்லாத சடமாகிய பாசப் பொருள்களைத் தனக்கு வேறானவை எனக் கண்டு அவற்றால் வரும் துன்பத்தினின்றும் நீங்குதல். சிவப்பேறாவது, பாசநீக்கம் பெற்ற உயிர் சிவமாகிய முதற்பொருளைத் தன் உணர்வில் நேர்பெறக் கண்டு அதனைத் தலைப்பட்டு இன்புறுதல்.

 
மேலும் சிவஞானபோதம் »
temple news
நூல்முகம்: இவ்வுலகம், முதலில் சில பக்கங்களும் முடிவில் சில பக்கங்களும் இல்லாத நிலையில் கிடைத்த ஒரு ... மேலும்
 
இருவகை இயல்புகள்சைவ சித்தாந்தத்தில் பொருளுக்கு இரு வகையான இயல்புகள் சொல்லப்பெறும். அவை உண்மையியல்பு, ... மேலும்
 
முதல் நூற்பாமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் ... மேலும்
 
அம் முதல்வன் அழித்தற்  கடவுளே:இனி அம் முதல்வன் யாவன்? என்ற வினா இயல்பாக எழுகிறது. அதற்கு ... மேலும்
 
இரண்டாம் நூற்பாமுதல் நூற்பாவோடு இந்நூற்பா தொடர்புற்று நிற்கிறது. எவ்வாறெனில், முதல் நூற்பாவில் உலகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar