தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயில்களிலும், வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். கார்த்திகையில் வரும் பவுர்ணமி நாள் மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. அன்று திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபம் உலகப் பிரசித்தி பெற்றது. அண்ணாமலை செல்ல இயலாதவர்கள் தங்கள் பகுதியிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று தீப தரிசனம் கண்டு வழிபட்டு நலம்பெறலாம் என்பது ஐதீகம் என்பதால் நேற்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு காலையிலே கோயில்களுக்கு பக்தர்கள் சென்றவண்ணம் இருந்தனர். தூத்துக்குடி சிவன்கோயில் மற்றும் பெருமாள் கோயில்களில் நேற்று காலையிலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதைப்போல் முறப்பநாடு கைலாசநாதர் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீப திருவிழா முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூரில் நாரணிதீபம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு இரவு கடற்கரையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது, கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. காலையில் மூலவர் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் மகாமண்டபத்தில் வைத்து நாரணி தீபம் ஏற்றப்பட்டு கோவில் தெய்வ சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினார். இரவு கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த சொக்கப் பனையிலும் தீபம் ஏற்றப்பட்டது. அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.