பதிவு செய்த நாள்
19
நவ
2013
12:11
திருநள்ளாறு: பிரணாம்பிகை அம்பாள் சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக விநாயகர், சுப்ரமணியர், தியாகராஜர், தர்பாரண்யேஸ்வரர், பிராணாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு ஸ்பன அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகளை பல்லக்கில் அலங்கரித்து விசேஷ தீபாராதனை நடத்தப்பட்டது. சிவாச்சாரியார்கள் மகா தீபத்தை தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜர், பிரணாம்பிகைக்கு காட்டிவிட்டு, கோவில் அருகே அமைக்கப்பட்ட சொக்கப் பனையில் தீபம் ஏற்றினர். இதேபோல், காரைக்கால் கைலாசநாதர், பார்வதீஸ்வரர், நித்யகல்யாணப் பெருமாள், கோதண்டராமர் கோவில், தலத்தெரு சிவலோகநாதசுவாமி கோவில் மற்றும் திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சொக்கப் பனை ஏற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.